Home விமர்சனம் காத்துவாக்குல ஒரு காதல் சினிமா விமர்சனம்

காத்துவாக்குல ஒரு காதல் சினிமா விமர்சனம்

வடசென்னையை கதைக்களமாக எடுத்துக் கொள்கிற இயக்குநர்கள் பெரும்பாலும் அதை கொலைக்களமாக மாற்றி ரசிகர்களை ரத்தச்சகதிக்குள் தள்ளுவது வழக்கம். அதை சற்றே வித்தியாசமான முறையில் செய்திருக்கிறார் இயக்குநர் மாஸ் ரவி.

அந்த ஏரியா கவுன்சிலர் பெரிய ரவுடி; குஷியாக கொலைகள் செய்து கொண்டிருக்கிறார். அவரை ஒரு ரவுடி போட்டுத் தள்ளுகிறான். அப்படி போட்டுத் தள்ளியவன் ஊரில் யாராவது காதலித்தால் சேர்த்து வைப்பதை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறான். இன்னொரு பக்கம் கதையின் நாயகன் ஜீவா ஊரிலுள்ள பெண்களைக் காதலிக்கும் இளைஞர்களை தூக்கி வந்து அடித்து துவைத்து துவம்சம் செய்கிறான்.

இப்படி ஹீரோ காதலர்களைப் பிரிப்பதும், வில்லன் காதலர்களைச் சேர்த்து வைப்பதுமாய் கதை எக்குத்தப்பாக பயணிக்க,

ஹீரோ எதற்காக அப்படி நடந்து கொள்கிறார் என்பதை கிளைமாக்ஸின் நெருக்கத்தில் வருகிற காட்சிகள் எடுத்துச் சொல்கின்றன.

படத்தை இயக்கியிருக்கிற மாஸ் ரவியே கதை நாயகனாக களமிறங்கியிருக்கிறார். காதலியுடன் பொழுதைக் கழிக்கும்போது மெல்லிய சிரிப்பைச் சிந்துகிறார்; தான் பேசுவது தனக்கே கேட்பது சந்தேகம் என்பதுபோல் அத்தனை இதமாக பேசுகிறார். இடைவேளைக்குப் பிறகு அப்படியே ரூட் மாறுகிறார்; யார் யாரையே போட்டுப் பொளக்கிறார். ஆக்சன் அதிரடியில் மாஸ் காட்டுகிறார். அவர் அப்படியும் இப்படியுமாக இரண்டு விதமாக இருப்பதற்கான காரணம் கிளைமாக்ஸில் தெரிகிறபோது ஆச்சரியம் தொற்றிக் கொள்கிறது.

ஹீரோயின் லெஷ்மி பிரியா எளிமையான அழகுடன் இருக்கிறார். ஹீரோவை காதலிக்கும் காட்சிகளில் புன்னகையுடன் கடந்துவிடுபவர், ஹீரோவுக்கு நடந்த விபத்து பற்றி தெரியும்போதும் அதன் பின்னராக காட்சிகளிலும் உருக்கமான நடிப்பைத் தந்திருக்கிறார்.

காதலர்களை சேர்த்து வைப்பதில் ஆர்வம் காட்டிக்கொண்டே பயங்கர சதித்திட்டத்தை செயல்படுத்துபவராக, படத்தின் பிரதான வில்லனாக சாய் தீனா. ரவுடியாக களமாடுவது, எதிரிகளாக கருதுபவர்களை சதக் சதக்கென குத்திக் கொல்வது, கழுத்தை அறுத்துச் சாய்ப்பது எல்லாமே பழகிப்போன விஷயம். அதை காப்பி பேஸ்ட் செய்திருப்பவர், வித்தியாசமாக இருக்கும் என்ற நினைப்பில் குரூரமான சிரிப்பொன்றை அவ்வப்போது அள்ளி வீசுகிறார். அதில் பெரிதாய் எந்த தாக்கமும் ஏற்படவில்லை.

கவுன்சிலராக வருகிற சூப்பர் சுப்புராயன் தாதா ரேஞ்சுக்கு ஆரம்பக் காட்சியில் மிரட்டுகிறார்; பிறகு லோக்கல் ரவுடி போல் சரிகிறார்.

ஆதித்யா கதிர், தங்கதுரை என மற்றவர்கள் கதையின் தேவைக்கேற்ப பங்களித்திருக்கிறார்கள்.

ஜி கே வி இசையில் ‘சிங்கிளா இருந்தா நீ சிங்கம் மச்சான்’ பாடல் தேனிசைத் தென்றல் தேவாவின் கணீர் குரலில் மனதில் இடம்பிடிக்கிறது. பாடலில் சஞ்சனா சிங்கின் ஆட்டம் உற்சாக மூடுக்கு ரசிகர்களை கொண்டு செல்கிறது. இன்னும் சில இதமான பாடல்களும் அணிவகுக்கின்றன.

நிறைவுக் காட்சி வலிந்து திணித்தது போலிருப்பது, இடைவேளை வரை கதையின் போக்கு ஏனோதானோ என பயணிப்பது, சில வெட்டுக்குத்து சம்பவங்கள் கதைக்கு அவ்வளவாக பொருந்திப் போகாதது என குறிப்பிட சில குறைகளும், அலுப்பு சலிப்பு தரும் காட்சிகளும் படத்தில் உண்டு. அதையெல்லாம் ஒதுக்கி வைத்தால், சமூக வலைதள தொடர்பு மூலம் காதல் வலை வீசுகிற இளைஞர்களையும் அவர்களிடம் சிக்குகிற பெண்களையும் மையப்படுத்திய சமூக விழிப்புணர்வுப் படைப்பாக பரிமாறியிருப்பதை பாராட்டலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்