Home சினிமா கிங்டம் திரைப்படத்தை திரையிட யாரேனும் இடையூறு விளைவித்தால் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்! -காவல்துறைக்கு சென்னை...

கிங்டம் திரைப்படத்தை திரையிட யாரேனும் இடையூறு விளைவித்தால் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்! -காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கிங்டம் திரைப்படத்தை திரையிட எவரேனும் இடையூறு விளைவித்தால் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வெளியாகி உள்ள கிங்டம் திரைப்படத்தில், ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தி உள்ளதாக கூறி, நாம் தமிழர் கட்சியினர் திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கிங்டம் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி, படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள எஸ் எஸ் ஐ ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்த போது, கற்பனை கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் எந்த பிரிவினரையும் இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்படவில்லை என்றும் எந்த பிரிவினரையும் மோசமாக சித்தரிக்கும் நோக்கம் எதுவும் இல்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

நாம் தமிழர் கட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், படத்தில் இலங்கைத் தமிழர்களை புலம்பெயர்ந்தவர்கள் என்பது போலவும், கடத்தல் கார்கள் என்பது போலவும் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்படுகிறது என்றும் படம் திரையிடுவதை தடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில், ஜூலை 31 ஆம் தேதி முதல் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. எங்கெல்லாம் சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுகிறதோ அங்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. திரையரங்கு உரிமையாளர்களுக்கு எந்த அச்சுறுத்தல்களும் விடுக்கப்படவில்லை. ஏதேனும் சட்டவிரோத செயல்கள் நடைபெற்றால் காவல்துறை பாதுகாப்பு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஜனநாயக நாட்டில் படைப்பாளிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க உரிமை உள்ளது. சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கிய திரைப்படத்தை மூன்றாவது நபர் எவரும் தடுக்க முடியாது. திரைப்படத்தை விரும்பவில்லை என்றால் படத்தை பார்க்க வேண்டாம். நாம் தமிழர் கட்சி அமைதியான முறையில் போராட்டம் நடப்பதற்கு உரிமை உள்ளது. முறையாக அனுமதி பெற்று, ஒதுக்கப்பட்ட இடத்தில் போராட்டங்கள் நடத்தலாம். போராட்டம் நடத்தும் உரிமையை தடுக்க முடியாது. கிங்டம் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு இடையூறு விளைவித்தால் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்