படிக்காத பக்கங்கள் சினிமா விமர்சனம்

பொள்ளாச்சி பாலியல் குற்றப் பின்னணியை லேசாக தொட்டுக் கொண்டு மானே தேனே போட்டு எழுதிய கதை, திரைக்கதையில் ‘படிக்காத பக்கங்கள்.’

ஸ்ரீஜா பிரபலமான நடிகை. அவரை பேட்டியெடுக்க வருகிற அந்த பத்திரிகையாளர், அவரிடம் தகாத கேள்விகளைக் கேட்டு கோபப்படுத்துகிறார். அதோடு விட்டுவிடாமல் அவரை அனுபவிக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை தெரிவித்து, அதற்கு கட்டாயப்படுத்துகிறார். சம்மதிக்காத அவரை அடித்து துன்புறுத்தி காயப்படுத்துகிறார். அப்படியே உறவு கொள்ளத் தயாராகிறார். அந்த நேரமாகப் பார்த்து ஸ்ரீஜா ஆக்சன் அவதாரமெடுத்து பத்திரிகையாளரை துவைத்து துவம்சம் செய்கிறார்.

அப்போதுதான் ஸ்ரீஜா தன்னிடம் சிக்கவில்லை; அவர் விரித்த வலையில் தான் வலிய வந்து வசமாய் சிக்கியிருக்கிறோம் என்பது பத்திரிகையாளருக்கு தெரியவருகிறது.

இப்படி சுறுசுறுப்பாகத் துவங்கும் கதையின் அடுத்தடுத்த பக்கங்களில் பரபரப்புக்குப் பஞ்சமில்லை… இயக்கம் செல்வம் மாதப்பன்

ஸ்ரீஜாவாக யாஷிகா ஆனந்த். பெண்களை நம்பவைத்து, உறவுகொள்வதை வீடியோவாக எடுத்து மிரட்டுவதை, பணத்தில் மிதப்பவர்களின் பாலியல் தேவைக்கு அவர்களை விருந்தாக்குவதை தொழிலாகச் செய்பவர்களை கண்டுபிடித்து தண்டிக்கும் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். வசன உச்சரிப்பும், கவர்ச்சியும் ஈர்க்கிறது.

யாஷிகாவின் தங்கையாக வருகிற தர்ஷினியின் வசீகரிக்கும் அழகும், செழுமையான இளமையோடும் இருக்கிறார். தன்னைக் காதலித்தவன் துரோகியாகும் தருணத்தில் பதறுவதும், கதறுவதுமாய் நீள்கிற காட்சியில் பரிதாபத்தை அள்ளுகிறது அவரது நடிப்பு.

பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவதை தொழிலாக செய்கிற எம்.எல்.ஏ.வுக்கு பலமாக, பாலமாக முத்துக்குமார். யாஷிகாவை பத்திரிகையாளராக சந்திப்பதிலிருந்து சிலபல காட்சிகளில் கொடூர வில்லனாக வெளிப்பட்டிருக்கிறார். இன்னபிற நடிகர்களும் கதையின் தேவைக்கேற்ப நடித்திருக்க, காவல்துறை அதிகாரியாக கொஞ்ச நேரம் வந்துபோகிறார் பிரஜன்.

காட்சிகளின் வேகத்துக்கு வீரியம் தந்திருக்கிறது ஜெஸ்ஸி கிஃப்டின் பின்னணி இசை. ஒளிப்பதிவு, எடிட்டிங்கில் குறையில்லை.

காமவெறியர்களால் பெண்கள் சீரழிக்கப்படுவதும், உயிரைப் பறிகொடுப்பதும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், அப்படியான சம்பவங்களின் நீள அகலங்களைப் பதிவு செய்யும் படங்களின் வருகையை தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது. அவற்றிலிருந்து விழிப்புணர்வுப் பாடம் கற்றுக் கொள்வது சமூகத்தின் கையிலிருக்கிறது.

படிக்காத பக்கங்கள், சமூகத்தில் பரவியிருக்கும் விஷத்தின் ஒற்றைத் துளி!

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here