இயக்குநர் வெற்றிமாறன் படம் பார்த்துவிட்டு சொன்னபடி காட்சிகளை மாற்றி எடுத்தேன்! -விமல் நடிப்பில் உருவான ‘சார்’ பட விழாவில் இயக்குநர் போஸ் வெங்கட் பேச்சு

‘கன்னிமாடம்’ மூலம் இயக்குநராக கவனம் பெற்ற போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள ‘சார்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்ச்சியில் இயக்குநர் போஸ் வெங்கட் பேசியபோது, ”விமல் நான் கதை சொன்னவுடன், பண்ணுவோம் மாமா என்றார். எனக்காக அவ்வளவு கடினமாக உழைத்தார். இப்படி ஒரு கதாநாயகன் கிடைப்பது கடினம், விமலுக்கு நன்றி. சார் படம் உங்களை மகிழ்விக்கும்.

இந்த படத்திற்கு முதலில் மா பொ சி என பெயர் வைத்தேன், பிரச்சனை வந்ததால், சார் தலைப்பை வாங்கி தந்தது, அம்மா சிவா சார் தான். என் முதல் பட கதாநாயகன் ஶ்ரீராம் இப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளான். அருமையான இசையைத் தந்துள்ள சித்து குமாருக்கு நன்றி.

படம் முடித்து  ரிலீஸ் செய்யத் தயங்கிய போது, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் பார்த்து விட்டு, நான் தான் ரிலீஸ் செய்வேன் என்றார், கோட் படத்திற்கு பிறகு இப்படத்தை ரிலீஸ் செய்கிறார்.

வெற்றிமாறன் சார் படத்தை பார்க்க வேண்டும் என ஆசை, படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், உங்கள் பேர் வேண்டும் என்றேன், படம் பார்த்து விட்டு, நல்லாருக்கு நல்ல படம் எடுத்திருக்கிறாய் என்றார், அப்போது தான் உயிர் வந்தது. அவர் படத்தை அணுஅணுவாக அலசி, சில கரக்சன் சொன்னார் அதையெல்லாம் மாற்றி எடுத்தேன். என் பெயரைப் போட்டுக்கொள் என்றார், நான் வாழ்நாளில் மறக்க கூடாத ரெண்டு பேர் வெற்றிமாறன் சார், விஜய் சேதுபதி சார் இருவருக்கும் நன்றி” என்றார்.

 

நடிகர் விமல் பேசியபோது, ”போஸ் மாமா கதை சொல்ல வந்தார், எனக்கு ரொம்ப பிடித்தது. வாகை சூடவா படத்திற்கு பிறகு எனக்கு  நல்ல படம் தந்துள்ளார். அவரே நடித்து காட்டி, தான் நடிக்க வைப்பார், அருமையாக படத்தை எடுத்துள்ளார். இன்று வாழ்த்த வந்துள்ள வெற்றிமாறன் சார், அவர் இந்த படத்திற்குள் வந்த பிறகு தான், இப்படம் முழுமையான சார் ஆகியிருக்கிறது நன்றி.

என்னை எப்போதும் ஊக்கம் தந்து, தூக்கிவிடும் நண்பர் விஜய் சேதுபதி,  நான் சோர்வாக இருக்கும் போதெல்லாம், என்னை போன் செய்து, உற்சாகப்படுத்துவார், அவரால் தான் நான் இப்போது கொஞ்சம் நன்றாக பேச ஆரம்பித்துள்ளேன் நன்றி. நட்டி அண்ணன் இந்த விழாவிற்கு வந்து வாழ்த்தியதற்கு நன்றி. இப்படத்தில் சரவணன் சார் அற்புதமாக நடித்துள்ளார். எல்லோரும் கடினமாக உழைத்துள்ளனர், படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி” என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசியபோது, ”எனக்கு ஏற்புடைய படத்தில் என் பெயர் இருப்பது எனக்குத் தான் பெருமை, என்னால் படத்திற்கு நல்லது என நினைக்கவில்லை. என்னிடம் வரும் படங்களில் சில முரண்பாடு இருந்தாலும், அது இந்த காலகட்டத்திற்கு தேவையானது என்பதாக இருந்தால், அதை செய்கிறேன்.

நான் வெறும் பெயர் மட்டும் தான் தந்தேன், எதுவும் செய்யவில்லை. ஆனால் எனக்கு இவ்வளவு மரியாதை தந்த குழுவிற்கு நன்றி. இந்தப்படம் மூன்று காலகட்டங்களில் ஆசிரியராக இருப்பவர்களை பற்றி பேசுகிறது. முடிந்த அளவு மிகச்சிறப்பாக அதைச் செய்திருக்கிறார்கள்.

இந்தப்படம் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான படம். ஒரு விவாதத்தை தொடங்கி வைக்கும். போஸ் என்னை படம் பார்க்க சொன்னார், அதற்கே நான் நிறைய நேரம் எடுத்துக் கொண்டேன் என் கருத்தை சொன்னேன் அதை மாற்றினார். எல்லாமே போஸ் வெங்கட்டின் முடிவு தான். இந்தப்படத்தின் முழுப்பெயரும் அவருக்கு தான். நல்ல படம் செய்துள்ளார்கள். படம் வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.

நடிகர் விஜய் சேதுபதி பேசியபோது, ”இன்று தான் விமல் மிக நன்றாக பேசியிருக்கிறார். கூத்துப்பட்டறை காலத்திலிருந்தே, நான் விமலின் ரசிகன், அப்போது அவர் நடிப்பதை ரசித்துப்பார்ப்பேன். இந்தப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும், போஸ் வெங்கட்டை டீவி சீரியல் நடிக்கும் காலத்திலிருந்து தெரியும். அவர் அப்போது ஆட்டோ ஓட்டிக்கொண்டே நடித்துக்கொண்டிருந்தார், அதிலேயே தங்கி விடாமல், சினிமாவுக்கு வந்து, இப்போது இயக்கம் என தன்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக்கொண்டே செல்கிறார். விடுதலை பட ஷூட்டிங் சமயத்தில், அரசியல் புத்தகங்கள் படித்துக்கொண்டிருப்பார். அவருடன் அரசியல் பேசும்போது அவ்வளவு தெளிவாக எடுத்துச் சொல்வார். அவரது அரசியல் பிரவேசத்திற்காக காத்திருக்கிறேன். இந்தப்படத்தை மிக அருமையாக எடுத்திருக்கிறார். இந்த காலத்திற்கு தேவையான விசயத்தைப் பேசியிருக்கிறார். சரவணன் மிக அருமையாக நடித்துள்ளார். படத்தை முழுதாக பார்த்து விட்டேன், கடைசி 40 நிமிடம் படம் உங்களை உலுக்கி விடும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here