Home சினிமா ரசிகர்களுக்கு படம் பிடித்துவிட்டால் அதை எந்த உயரத்திற்குக் கொண்டு செல்வார்கள் என்பதற்கு ‘கட்டா குஸ்தி’ ஒரு...

ரசிகர்களுக்கு படம் பிடித்துவிட்டால் அதை எந்த உயரத்திற்குக் கொண்டு செல்வார்கள் என்பதற்கு ‘கட்டா குஸ்தி’ ஒரு சிறந்த உதாரணம்! -‘கட்டா குஸ்தி’ படத்தின் 50-வது நாள் வெற்றிக் கொண்டாட்டத்தில் நடிகர் விஷ்ணு விஷால் 

விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், செல்லா அய்யாவு இயக்கிய ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவுடன் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.

அதையடுத்து நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் நடிகர் விஷ்ணு விஷால் பேசுகையில், “அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பல படங்களுக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பு, நமது ‘கட்டா குஸ்தி 2’ படத்திற்கு கிடைத்திருப்பது சந்தோஷம். இந்த வெற்றிக்கு உழைத்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது நன்றி. ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகவும் எனது நன்றியைத் தெரிவிப்பேன். என்னைப் பொறுத்தவரை ரசிகர்கள்தான் ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கியமான சக்தி. அவர்களுக்குப் படம் பிடித்துவிட்டால் அதை எந்த உயரத்திற்குக் கொண்டு செல்வார்கள் என்பதற்கு ‘கட்டா குஸ்தி’ ஒரு சிறந்த உதாரணம். படத்திற்கு ஆதரவளித்த ஊடக நண்பர்களுக்கும் நன்றி. படத்திற்கு மட்டுமல்லாமல், எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரைப்பயணத்திலும் நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்த விழாவில் கலந்து கொண்ட ரம்யா கிருஷ்ணன் மேடத்திற்கும் எனது சிறப்பு நன்றி. 15 நிமிட சிறப்புத் தோற்றம் என்று முதலில் அவரிடம் கூறினேன். காட்சிகளை அனுப்பிப் படிக்கச் சொன்னபோதும், என் மீதான அன்புக்காகவே அவர் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தார். அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.
அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், “அனைவருக்கும் மாலை வணக்கம். தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே ஒரு சகாப்தமானவர், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அனைவராலும் கொண்டாடப்படும் பத்மஸ்ரீ பிரபுதேவா மாஸ்டர் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. அவருடன் பணியாற்றியபோது பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. படப்பிடிப்பு தளத்தில் அவர் அமைதியாக இருப்பார். ஆனால், கேமரா முன்பு நின்றுவிட்டால் அந்தக் கதாபாத்திரமாகவே முழுமையாக மாறிவிடுவார். இடைவேளையின்போது கூட செல்போனை பயன்படுத்தாமல், புத்தகம் படிப்பது, செஸ் விளையாடுவது என தனது நேரத்தைப் பயன்படுத்துவார். அவரது தொழில்முறை அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் அனைவருக்கும் ஒரு பாடமாகும். வேல்ஸ் நிறுவனம் சார்பில் அவருக்கு வழங்கப்படும் இந்த கௌரவம், அவர்மீது வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடாகும்.
“எங்கள் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அண்ணன் ஒரு உண்மையான சினிமா காதலர். அவருக்குள் எப்போதும் ஒரு குழந்தைத்தனம் இருக்கும். யாராவது உதவி கேட்டால் உடனடியாக அதை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கும் பெரிய மனம் கொண்டவர். சினிமா மற்றும் கல்வித் துறை என இரண்டிலும் தொடர்ந்து பல சேவைகளை செய்து வருகிறார். ‘கட்டா குஸ்தி 2’ 50 நாட்களைக் கடந்து ஓடுவது இந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய சாதனை. இன்றைக்கு ஐந்து நாட்கள், ஏன் ஒரு நாளில் ஐந்து காட்சிகள் வெற்றிகரமாக ஓடுவதே சவாலான சூழ்நிலையில், 50 நாட்கள் என்பது படக்குழுவுக்கு கிடைத்த பெரிய மணிமகுடம். இப்படிப்பட்ட வெற்றிக்கு விஷ்ணு விஷால் போன்ற கடின உழைப்பாளியும், படத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொண்ட நடிகரும் தேவை. தனது நடிப்புக்கு இணையாக சக நடிகர், நடிகைகள் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் அவரது மனதை நான் பாராட்டுகிறேன். படத்தின் ஒவ்வொரு விஷயத்திலும், குறிப்பாக விளம்பரப் பணிகளிலும் அவர் காட்டிய அர்ப்பணிப்பு அபாரமானது.
“ஐஸ்வர்யா லட்சுமி இந்தப் படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். அவருடன் சிறுமி ஜாராவின் பங்களிப்பும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது. இவ்வளவு திறமையான கலைஞர்கள் மத்தியில் அவர் காட்டிய தன்னம்பிக்கையும் நடிப்பும் பாராட்டுக்குரியது. படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். அதேபோல், திரையில் தெரியாத தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் இந்த வெற்றிக்கு மிக முக்கியமானது. இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை, மல்யுத்தக் காட்சிகளை சிறப்பாக உருவாக்கிய ஸ்டண்ட் குழு, அதை தத்ரூபமாகப் பதிவு செய்த ஒளிப்பதிவாளர், சிறப்பாக வடிவமைத்த எடிட்டர் என ஒவ்வொருவரின் உழைப்பும் படத்தின் பலமாக அமைந்துள்ளது. அந்த அனைவரையும் மேடைக்கு அழைத்து கௌரவிக்க வேண்டும் என்று நினைத்து இந்த விழாவை நடத்தும் தயாரிப்பு நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோருக்கும் என் வாழ்த்துகள். என் அண்ணன் நம் தமிழக முதல்வர் மாண்புமிகு C. ஜோசப் விஜய் அவர்களின் ஆட்சியில் திரைத்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளும் கோரிக்கைகளும் செயல்படுத்தப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்