‘காட்டேரி‘ சினிமா விமர்சனம்
காமெடி பேய்ப்பட வரிசையில் புதுவரவாய் ‘காட்டேரி.’
நான்கைந்து வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம். தியேட்டர்களுக்கு தாமதவரவு.
நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் குழுவாக புறப்பட்டு ஒரு கிராமத்துக்குப் போகிறார்கள். அங்குள்ள தங்கப் புதையலை கண்டுபிடிப்பது அவர்களின் திட்டம். அங்கு போனபிறகுதான், அங்குள்ள அத்தனைப் பேரும் பேய்கள் என்பதும், அந்த கிராமத்தை விட்டு வெளியேற நினைத்தால் அது சாத்தியமில்லை என்பதும் தெரியவருகிறது.
பேய்களிடம் மாட்டிக் கொண்ட அவர்கள் தங்கத்தைக் கண்டுபிடித்தார்களா? அந்த கிராமத்திலுள்ள அத்தனைப் பேரும் பேயானது எப்படி? இப்படியான கேள்விகளுக்கு பதில்கள் அடுத்தடுத்த காட்சிகளில்… இயக்கம்: டிகே
தங்க வேட்டைக்குப் போனவர்கள் என்னதான் முயற்சித்தாலும் வெளியேற முடியாமல் அந்த கிராமத்திலேயே சுற்றிக் கொண்டிருக்க நேர்வது, பிளாஷ்பேக் காட்சிகளில் கிணற்றுக்குள்ளிருந்து தங்கம் வந்துகொண்டேயிருப்பது, அந்த தங்கத்துக்காக பிணங்களை விலை கொடுப்பது என சுவாரஸ்யமான அமானுஷ்ய அம்சங்கள் படத்தில் உண்டு. ஒட்டுமொத்த கிராமத்தையும் ஒரே தாக்குதலில் பரலோகம் அனுப்புவதற்கான ஐடியா ‘பவர்’ஃபுல்!
வைபவ், அவருக்கு மனைவியாக சோனம் பாஜ்வா, அந்த ஜோடியின் நட்பு வட்டத்தில் கருணாகரன், ஆத்மிகா, ரவிமரியா, குட்டி கோபி… அந்த ஆறுபேரின் பரபரப்பான நடிப்பும், அவர்களிடம் பேய்கள் காட்டும் சேட்டைகளும் ரசிக்க வைக்கின்றன.
பேய்களில் ஒருவராக வருகிற வரலெட்சுமி சரத்குமாரின் நடிப்பு, ஜான் விஜய், லொள்ளுசபா மனோகர், மைம் கோபி, நமோ நாராயணன் உள்ளிட்டோரின் பங்களிப்பு நிறைவு.
முதலிரவு ஜோடியின் சில்மிஷங்களை நண்பர்கள் அருகிருந்து பார்த்து ரசிக்கிற கலாட்டா களேபரங்களையெல்லாம் பல படங்களில் பார்த்தாயிற்று. காட்டேரியிலும் பார்க்க வேண்டியிருப்பது சோதனை.
ரவிமரியா ‘அந்த’ இடத்தில் விஷ அம்பால் குத்து வாங்கி, விஷத்தை யார் உறிஞ்சி எடுப்பார்கள் என தேடித்திரிவதெல்லாம் ஓருசிலருக்கு மட்டும் கிளுகிளுப்பாக இருக்கலாம்.
படத்தில் திகிலூட்டும் சங்கதிகள் பெரிதாய் இல்லை; இருப்பதும் அத்தனை எடுபடவில்லை.
பிரசாத்தின் பின்னணி இசை ஓகே ரகம்.அவ்வப்போது வந்துபோகும் பிளாஷ்பேக் காட்சிகளை கதையோட்டத்தில் நேர்த்தியாக இணைத்திருக்கும் எடிட்டரின் உழைப்புக்கு ஸ்பெஷல் பாராட்டு.
நீங்கள், ‘ஒட்டுமொத்தப் படத்தில் ஆங்காங்கே சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் இருந்தால் போதும்; ரசிக்கத் தயார்’ என்ற மனநிலையில் இருப்பவர் என்றால் காட்டேரியை தரிசிக்க தியேட்டருக்கு போகலாம். ‘நான் அத்தனை இளிச்சவாயன் இல்லை’ என்பவர்கள் சிலபல வருடங்கள் முன், டிகே இயக்கி வெளிவந்து பெரியளவில் வரவேற்பு பெற்ற ‘யாமிருக்க பயமேன்’ படத்தை யூ டியூபில் ரசிக்கலாம்.