‘சீதா ராமம்’ சினிமா விமர்சனம்

‘சீதா ராமம்’ சினிமா விமர்சனம்

வெகுநாள் கழித்து உள்ளத்தை வருடுகிற, உணர்வை உலுக்குகிற காதல் கதை. தேசப் பற்றும் காதல் பற்றும் கலந்து செய்த திரைக்கதை!

பாகிஸ்தானைச் சேர்ந்த ராஷ்மிகா, இந்தியாவுக்கு வருகிறார். தன் வசமிருக்கும் கடிதம் ஒன்றை ஒப்படைக்க வேண்டி சீதா மகாலெஷ்மி என்பவரை தேடுகிறார்.

தேடலில் சீதா மகாலெஷ்மி மாபெரும் சாம்ராஜ்யத்தின் இளவரசி என்பதும் அவர் இஸ்லாமியர் என்பதும், 20 வருடங்கள் முன் அவர் இந்து மதத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரை காதலித்ததும் தெரியவருகிறது.

அத்தனை பெரிய இடத்துப் பெண்ணுக்கும் ராணுவ வீரனுக்கும் தொடர்பு உருவானது எப்படி? காதல் மலர்ந்து எப்படி? அந்த காதல் என்னவானது? ராஷ்மிகாவிடமிருக்கும் கடிதம் யாரால் எழுதப்பட்டது; கடிதத்திலிருக்கும் விஷயம் என்ன? இந்த கேள்விகளுக்கான பதில்கள் திரைக்கதையோட்டத்தில்… இயக்கம்: ஹனு ராகவாபுடி

ரொமான்ஸ் காட்சிகளில் அதற்குண்டான உணர்வை வெளிப்படுத்துவதாகட்டும், பொய்யான தேசத் துரோக குற்றச்சாட்டுக்கு ஆளாகி மனம் உடைவதாகட்டும், உயிரே போனாலும் தன் நாட்டுக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்ற உறுதியாகட்டும் துல்கர் சல்மான் தூள் சல்மான்!

ஒருபக்கம் தோற்றத்தில் இளவரசிக்கான கம்பீரம் காட்டுவது, இன்னொரு பக்கம் சாமானியனுடன் நட்பாகி காதலுக்குள் விழும்போது எளிமையாக வெளிப்படுவது என நடை உடை பாவனைகளில் வெரைட்டி காட்டி ஏற்ற பாத்திரத்திற்கு உயிரோட்டம் தந்திருக்கிறார் கதைநாயகி மிருணாள் தாகூர்.

ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு பங்களிப்பும் பக்கா.

பிரகாஷ்ராஜ், கெளதம் மேனன், பூமிகா, சச்சின் கடேகர், தருண் பாஸ்கர், துல்கரின் நண்பனாக வரும் வெண்ணிலா கிஷோர் என அனைவரும் அவரவர் பங்களிப்பை வழங்கியிருப்பது நிறைவு!

விஷால் சந்திரசேகரின் இசையில் நெஞ்சுக்குள்ளே’ பாடல் கிறக்கடிக்கிறது. பின்னணி இசை படத்துக்கு பலம்.

பிரமாண்ட அரண்மனை, காஷ்மீர், ஹைதராபாத், பாகிஸ்தான், இந்திய – பாகிஸ்தான் ராணுவ எல்லை என கதையின் நிகழ்விடங்களை 1960 – 1980 காலகட்டங்களில் நடக்கும் கதைக்கேற்ப தேர்ந்தெடுத்திருப்பது, கலை இயக்குநரின் உழைப்பால் வடிவமைத்திருப்பது, அவற்றிலிருக்கும் பிரமாண்டம் அத்தனையும் கச்சிதம்!

தெலுங்கு டப்பிங் படம் என்பது தெரியாதபடி மொழிமாற்றம் செய்திருப்பதன் பின்னணியில் உள்ள உழைப்புக்கு தனி பாராட்டு.

சில குறைகளைப் பொருட்படுத்தாமல் சீதா ராமம் இன்றைய தலைமுறை கொண்டாடுகிற, கொண்டாடத் தகுதியுள்ள / காதலை மையப்படுத்திய இந்தியப் படங்களின் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடிக்கப் போகிற, அதற்குத் தகுதியான காவியம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here