திரைத்துறையிலிருந்து வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்! -‘கட்டில்’ பட விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் உறுதி

இயக்குநரும், நடிகருமான இ.வி. கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடித்து, தயாரித்துள்ள ‘கட்டில்’ படத்தின் முதல் பாடல்  வெளியீட்டு விழா 3.1. 2023 அன்று சென்னையில் நடந்தது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ”மிகச்சிறப்பான படைப்பாக கட்டில் திரைப்படத்தை உருவாக்கியிருக்கும் இ.வி.கணேஷ்பாபு குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். வியாபார நோக்கம் இல்லாமல் சமூக சூழலைச் சுற்றி இக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எளிமையான வாழ்வை சொல்லும் எதார்த்தமான படமாக அமைந்திருப்பதால் மிகப்பெரிய வெற்றிபெறுமென நம்புகிறேன். இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.கலைஞர் அய்யா அவர்கள் திரைத்துறை மீது அக்கறை கொண்டவராக இருந்தார். அதே போல் இன்று, நம் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களும் திரைத்துறை மீது மிகுந்த அக்கறையோடு உள்ளார். தமிழ்நாடு அரசு சினிமாத்துறை சிறந்து விளங்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. திரைத்துறையிலிருந்து பல கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் அரசு ஆராய்ந்து செய்து தருமென உறுதி கூறுகிறேன்” என்றார்.இ.வி. கணேஷ்பாபு, ”நானும் பத்திரிக்கையாளனாக இருந்து வந்தவன்தான். நான் இங்கு இன்று இந்த மேடையில் இருக்க முக்கிய காரணம் எடிட்டர் லெனின் அவர்கள் தான். அவரது ஊக்கத்தில்தான் இந்த திரைப்படம் உருவானது. செய்தித்துறை அமைச்சர் அவர்கள் இந்த நிகழ்விற்கு வந்து வாழ்த்துவது மிக மகிழ்ச்சி. ஶ்ரீகாந்த் தேவா  இப்படத்தில் அருமையான இசையைத் தந்துள்ளார்.

சித் ஶ்ரீராம் மிக அரிதாக தேர்ந்தெடுத்து பாடல்கள் பாடுகிறார். எங்கள் படத்தில் நான்கு மொழிகளில் அவர் பாடித் தந்தது மகிழ்ச்சி. நடிகை சிருஷ்டி டாங்கே கட்டிலில் தமிழ் பெண்ணாகவே மாறி விட்டார். இந்த படம் அவருக்கு முக்கியமான படமாக அமையும். வைட் ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு   இப்படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. நம் பாரம்பரியத்தை போற்றும் படமாக இப்படம் இருக்கும். அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்” என்றார்.

படத்தின் நாயகி சிருஷ்டி டாங்கே, ”கட்டில் படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சி. தமிழ் பாரம்பரியத்தை இந்தப் படம் எடுத்துக்காட்டும். எனக்கும் பெயர் வாங்கித்தரும் படமாக இருக்கும் என்று மிகவும் நம்புகிறேன்” என்றார். இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த்தேவா, ”என் இசையில் கிளாசிக்கல் மியூசிக் இல்லையே என வருத்தப்படுவேன். கட்டில் படம் மூலமாக அது மாறும். இந்தப்படத்தில் வைரமுத்து அவர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. படம் வெற்றிபெற வாழ்த்துகள்” என்றார்.

நடன இயக்குநர் ‘மெட்டி ஒலி’ சாந்தி, அந்தக் காலத்தில் காதலுக்கு, குழந்தைக்கு எனத் தனித்தனியாக பாடல் இருக்கும். பாடல்கள் கதையோடு சேர்ந்து, கதையை சொல்வதாக இருக்கும். இப்போது பாடல்கள் கமர்ஷியலாக மாறிவிட்டது. இதை நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன். நடன இயக்குநராக பல நேரங்களில் இது எனக்கு தோன்றியிருக்கிறது. இப்போது ஆடியன்ஸ் மாறியுள்ளார்கள். கதைக்காக படம் பார்க்கிறார்கள். இப்படத்தை நீங்கள் பாடலுக்காகவே படம் பார்ப்பீர்கள். பாடலே கதையை சொல்லும். படத்தை இ.வி.கணேஷ்பாபு சார் மிக அற்புதமாக உருவாக்கியுள்ளார்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here