Home விமர்சனம் காளிதாஸ் 2 சினிமா விமர்சனம்

காளிதாஸ் 2 சினிமா விமர்சனம்

ஒன்றிரண்டு திருப்பங்களோடு அசத்தல் அனுபவம் தந்த ‘காளிதாஸ்’ படத்தின் இந்த 2-ம் பாகம், முழுக்க முழுக்க திருப்பங்களால் நிரம்பியிருக்கிறது.

500க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிற அந்த அபார்ட்மென்டில் குழந்தையொன்று காணாமல் போக, அதே அபார்ட்மென்டில் வசிக்கிற இளைஞன் ஒருவன் மீது போலீஸாருக்கு சந்தேகம் வர, அந்த இளைஞன் ஏற்கனவே கற்பழிப்பு குற்றத்தில் சிக்கியவன் என்கிற விவரம் கிடைக்க, குழந்தை எப்படி காணாமல் போனது? காணாமல் போன குழந்தைக்கு என்னவானது? என்பதெல்லாம் மீதிக்கதை… மூன்றாம் பாகத்துக்கு வைத்திருக்கும் லீடு பய உணர்வை பல மடங்காக்குகிறது. இயக்கம் ஸ்ரீ செந்தில்

போலீஸ் அதிகாரிக்கான நடை, உடை, கம்பீரம் என கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் பரத். தனது நடவடிக்கைகள் சரியாக இருந்தாலும் அதை செயல்படுத்த தடையாக இருக்கிற உயரதிகாரியுடன் மல்லுக்கட்டியபடியே குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்படியொரு சவாலான பணியில் வேகமும் விவேகமும் கலந்து கட்டி வெளிப்படுகிற நடிப்பு துடிப்பு.

அஜய் கார்த்திக்கு வில்லனா, நல்லவனா என ஆடியன்ஸை குழப்புகிற விதமாக களமாடும் வேலை. அதற்கேற்ற உடல்மொழியை நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்.

மனம்போன போக்கில் செயலாற்றும் காவல்துறை உயரதிகாரியாக பவானிஸ்ரீ. தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரியிடம் விறைப்பும் முறைப்புமாய் நடந்து கொள்வதை தவிர தாக்கம் ஏற்படுத்தும்படி எதையும் செய்யவில்லை.

ஒரு காலத்தில் விஜய்க்கெல்லாம் ஜோடியாக நடித்த சங்கீதாவின் ரீ என்ட்ரிக்கு நல்ல வாய்ப்பு இந்த படம். அவரது பேச்சும், நடவடிக்கைகளும், இறுக்கமான முகமும் அவர் ஏதோ பெரிய தப்பு செய்திருக்கிறார் என்ற சந்தேகத்தை உருவாக்கிக் கொண்டிருக்க, போலீஸ் அவரை சுற்றி வளைத்து விசாரிக்க அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தாக்குகிறது.

குழந்தை காணாமல் போன பதற்றம், நேர்ந்த விபரீதத்தை கண்டபின் கதறல் என மனதில் நிற்கிறது ஆனந்த் நாக் – அபர்ணதி ஜோடியின் உணர்வுபூர்வ நடிப்பு.

பிரகாஷ்ராஜ் அட்வகேட்டாக ஒன்றிரண்டு காட்சிகளில் வருகிறார்; வழக்கமான ஸ்டைலில் கெத்து காட்டிப் போகிறார். ‘சிங்கம்’ ஜெயவேல் கான்ஸ்டபிளாக வந்து, டைமிங் வசனங்களால் லேசாக சிரிப்பூட்டி கவனம் பெறுகிறார்.

கிஷோருக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படியான கதாபாத்திரம். அவரது ரவுடியிஸத்தில் அலட்டலில்லாத மிரட்டல் தெரிகிறது.

கதையின் மையப்புள்ளியாக சுற்றிச் சுழல்கிற சிறுமி வசந்திகாவின் நடிப்பும் அத்தனை அழகு.

அடுத்து என்ன நடக்கும், ஏது நடக்கும் என்ற எதிர்பார்ப்பைத் தூண்டியபடி பயணிக்கும் கதையோட்டத்துக்கு சுறுசுறுப்பு டானிக் பாய்ச்சியிருக்கிறது சாம் சி எஸ்ஸின் பின்னணி இசை.

திரும்பத் திரும்ப ஒரே அபார்ட்மெண்டை காண்பித்தாலும் அலுப்பு சலிப்பு தட்டாதபடி ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா அமைத்திருக்கும் கோணங்களாலும் ஒளியுணர்வாலும் காட்சிகளின் தரம்கூடியிருக்கிறது.

கதை அடுத்தடுத்து நடக்கும் கொலைகளில் துவங்கும்போது வழக்கமான வன்முறை, ரத்தச் சகதிக்குள் சிக்கிக்கொள்ளுமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதற்கேற்றபடி பாலியல் வன்முறை, வெட்டுக்குத்து என்றெல்லாம் நடக்கவே செய்கிறது. அதையெல்லாம் சற்றே பொறுமையோடு கடந்துவிட்டால் நிமிடத்துக்கு நிமிடம் எட்டிப்பார்க்கிற டிவிஸ்ட்களால் திணறிப் போவதைத் தவிர வேறு வழியில்லை!

காளிதாஸ் 2 – மின்னல் வேக முன்பாதி; சூறாவளியாய் சீறும் மிச்ச மீதி!

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்