‘கணம்‘ சினிமா விமர்சனம்
அம்மா – மகன் சென்டிமென்டை ஆயிரம் படங்களில் பார்த்தாயிற்று. இந்த படத்திலும் பார்க்கிறோம்; ஆனால், இதுவரை பார்க்காத கதைக்களத்தில்…
நாம் வாழும் காலத்திலிருந்து சிலபல வருடங்கள் முன்னோக்கிப் பயணித்து அல்லது பின்னோக்கிப் பயணித்து, அந்த காலகட்டத்தில் கொஞ்சநாள் வாழ நேர்ந்தால் அந்த அனுபவம் எப்படியிருக்கும் என யோசித்துப் பாருங்கள். அட, டைம் டிராவல்தானே? அதையும்தான் பல படங்களில் பார்த்தாயிற்றே. ஆம், விதவிதமாக பார்த்திருக்கிறோம்தான்… ஆனால், கணம் தருகிற அனுபவம் கனமானது. இதுவரை எந்த படமும் தராதது!
அந்த இளைஞன். இசையையும், மனம் கவர்ந்த பெண்ணையும் காதலித்துக் கொண்டு நண்பர்களுடன் உற்சாகமாகவும் அப்பாவின் அரவணைப்பில் ஆனந்தமாகவும் இருக்கிறான். சிறுவயதில் தன் அம்மாவை விபத்தில் பறிகொடுத்த சோகம் மட்டும் மனதில் அப்படியே இருக்கிறது.
அவனுக்கு அதிர்ஷ்டவசமாக ஒருநாள் டைம்மெஷின் மூலம் தனது சிறுவயதுக் காலத்துக்கு திரும்பச் சென்று, விபத்தைத் தடுத்து அம்மாவை காப்பாற்ற வாய்ப்பு கிடைக்கிறது. அந்த ‘கணம்’ அவனுக்கு எப்படியான உணர்வைத் தந்தது? அதற்காக அவன் பட்ட கஷ்ட நஷ்டங்கள் எப்படிப்பட்டது என்பதே திரைக்கதை… அவன் விரும்பியபடி அம்மாவை காப்பாற்ற முடிந்ததா இல்லையா என்பது கிளைமாக்ஸ்! இயக்கம்: ஸ்ரீ கார்த்திக்
கதைநாயகன் ‘எங்கேயும் எப்போதும்’ ஷர்வா அப்போதும் இப்போதும் அழகு! கதைப்படி அவரது மென்மனது ஆழம். ஷர்வா அதற்கேற்ற சரியான தேர்வு. சிறுவயதுக்கு திரும்பிச் சென்று அம்மாவைப் பார்த்துப் பழகுவது, அம்மாவின் அன்பை அனுபவிப்பது, விபத்தைத் தடுக்கப் போராடுவது என ஷர்வா தருகிற உணர்வுபூர்வமாக நடிப்பு அத்தனை பொருத்தம்!
30 வருடங்களுக்குப் பிறகு திரையில் அமலா. அம்மாவாக நடிப்பதற்கேற்ற வயதின் மெச்சூரிட்டி இயல்பாகவே அமைந்துவிட, கனிவான பார்வையால் தனது பாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்!
ஷர்வாவின் நண்பர்களாக சதீஷ், ரமேஷ் திலக். சிறுவயதில் நிறைவேறாத ஆசைகளை வாலிபப் பருவத்திலிருந்து சிறுவயதுக்கு திரும்பிப் போனபோது நிறைவேற்றிக் கொள்ள முயற்சிப்பதிலிருந்து அவர்களுக்கான சுவாரஸ்யமான காட்சிகளை தங்களது நேர்த்தியான நடிப்பால் கூடுதல் சுவாரஸ்யமாக்கியிருக்கிறார்கள். ரமேஷ் திலக் சிறுவனான தனக்கே ‘நல்லா படி’ என அட்வைஸ் அள்ளி வீசுவது, ஒரு கட்டத்தில் ஞானம் பிறந்து ‘நீ நீயாகவே இரு’ என தத்துவ மழை பொழிவதெல்லாம் லகலக எபிசோடுகள்!
விஞ்ஞானியாக நாசர். டைம்மெஷின் மூலம் உயிர் நண்பனை பலிகொடுப்பது, பிறகொரு வாய்ப்பு வரும்போது எப்படியாவது நண்பனை உயிருடன் மீட்டுவிட முடியாதா என தவித்துத் துடிப்பது என ஏற்ற கேரக்டரில் வழக்கம்போல் பொருந்திப் போகிறார். வாலிபத்தைக் கடந்த தோற்றம், வயதான மாற்றம் என அவரது மேக்கப்பில் வித்தியாசம் காட்டியிருப்பது கச்சிதம்!
ஷர்வாவின் காதலியாக வருகிற ரிது வர்மாவுக்கு தனது காதலனை சிறுவயதுப் பையனாகப் பார்க்கும்போது அதிர்ச்சி காட்டுவது, அந்த சிறுவன் தன்னை அக்கா என அழைக்கும்போது தர்மசங்கடமாக உணர்வது என குறைந்தபட்ச வேலைதான். அதை அம்மணியின் கண்கள் அளவாகச் செய்திருக்கின்றன!
ஷர்வா, சதிஷ், ரமேஷ் திலக் மூவரும் நிஜமாகவே சிறுவயதில் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என நினைக்கும்படி பொருத்தமான சிறுவர்களை அந்த பாத்திரங்களுக்குப் பிடித்துப் போட்டிருப்பதில் இயக்குநரின் மெனக்கெடல் தெரிகிறது. அந்த மூவரின் நடிப்பும் ஈர்க்கிறது.
அடிக்கடி அட்டனன்ஸ் போடுகிற ரவிராகவேந்தர் மகன் மீது காட்டும் பிரியம் நெகிழ்ச்சி. ஒரேயொரு காட்சியில் எட்டிப் பார்த்தாலும் எம்.எஸ். பாஸ்கரிடமிருந்து கெட்டியான நடிப்பு!
பின்னணி இசை மூலம் ஜேக்ஸ் பிஜாயும், பாடல் மூலம் சித் ஸ்ரீராமும் காட்சிகளுக்குள் நிறைந்திருக்கும் உணர்வுகளை ரசிகனுக்கு கடத்துவதில் போட்டி போட்டு ஜெயித்திருக்கிறார்கள்.
கதையின்போக்கு நடப்பாண்டிலிருந்து, டிவியில் ‘வாஷிங் பவுடர் நிர்மா’ விளம்பரம் பலரையும் ரசிக்க வைத்துக் கொண்டிருந்த காலத்துக்கு பின்னோக்கிப்போக அந்த காலகட்டத்தை முடிந்தவரை கண்முன் கொண்டுவந்திருக்கிறது கலை இயக்குநர் உள்ளிட்ட தொழில் நுட்பக்குழு!
நிறைவாக ஒருவரி… ‘ஃபீல் குட் மூவி’ பிரியர்களுக்கு கணம் கண்டிப்பாய் வரம்!