தமிழ் சினிமாவில் ஒரு பக்கம் அடிதடி வன்முறைப் படங்கள், சாதிய அடக்குமுறைகளை எடுத்துக்காட்டும் படங்கள், அழுத்தமில்லாத கதையில் அமைந்த படங்கள், கதை என ஒன்று இருக்கிறதா என தேட வைக்கும் படங்கள், ரசிகனை முழு முட்டாள்கள் என்று நினைத்து எடுக்கப்படும் படங்கள் என வரிசைகட்டி வந்து கொண்டிருக்கின்றன. அப்படியான படங்கள் பெரும்பாலும் தோல்வியைத் தழுவிக் கொண்டிருக்கின்றன.
இன்னொரு பக்கம் வசூல் ரீதியான வெற்றி தோல்விகளை பொருட்படுத்தாத, முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் படங்களும் அட்டனன்ஸ் போடுகின்றன.
அந்த வரிசையில் இந்த வார வரவு ‘கீனோ.’
சிறுவன் தரணின் கண்ணுக்கு கீனோ என்ற மர்ம உருவம் திடீர் திடீரென தென்படுகிறது; அது அவனை தன்னிடம் வா என்று அழைக்கிறது. கட்டியணைத்துக் கொள் என்றுசொல்கிறது. தரண் அதைக் கண்டு பயந்து நடுங்குகிறான். அடிக்கடி இப்படி நடக்க, தரணின் பெற்றோர் தரணை பயமுறுத்துவது தீய சக்தியாக இருக்கலாம் என நினைக்கிறார்கள். அலசி ஆராய்ந்தபின் தரணை பயமுறுத்துவது தீய சக்தி, அமானுஷ்ய சக்தி என எதுவுமில்லை என்பது தெரிகிறது.
அப்படியெனில் உண்மைதான் என்ன?
அதை எடுத்துச் சொல்லியிருப்பதுதான் இந்த படத்தின் தனித்துவம்.
பேய் போன்ற உருவத்தைப் பார்த்து பயந்து மிரள்வது, ஒரு கட்டத்தில் அதே உருவத்தை தைரியமாக எதிர்ப்பது என கடந்தோடும் காட்சிகளுக்கு தரணாக வருகிற கந்தர்வாவின் முகபாவங்கள் சரியான பங்களிப்பை தத்திருக்கிறது.
பெற்றோராக வருகிற மகாதாரா பகவத் _ ரேணு சதீஷ் தம்பதி மகனை எப்படியாவது பிரச்சனையிலிருந்து மீட்க வேண்டும் என்று தவிக்கும்போது பதற்றம் நிறைந்த உணர்வுகளை கச்சிதமாக பிரதிபலித்திருக்கிறார்கள்.
மனநல நியுணராக வருகிறவர் மனிதர்கள் சந்திக்கிற வினோதமான உளவியல் சிக்கல்கள் பற்றி எடுத்துச் சொல்வது புதிய அனுபவம்; அவரது உடல்மொழியில் அலட்டல் அதிகம்.
மிச்சமிருக்கிற ஒரு சில பாத்திரங்களை ஏற்றிருப்பவர்களின் நடிப்பு நிறைவு.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் என எல்லாவற்றையும் கையாண்டிருக்கும் ஆர் கே திவாகர் இந்த எளிமையான, கமர்ஷியல் அம்சங்களற்ற படத்தின் மூலம் வெற்றிடத்தைப் பார்த்துப் பயப்படுகிற பிரச்சனைகளையும் அது தொடர்பான அறிவியல்பூர்வமான உண்மைகளையும் எடுத்துக் காட்டி, தீர்வையும் சொல்லியிருக்கிறார்.
முதல் பாதிவரை ஹாரர் படம் பார்க்கிறோம் என்ற உணர்வைத் தந்து, பின்பாதியில் உளவியல் திரில்லர் பாணியில் கதையை நகர்த்தி, பிள்ளைகள் வித்தியாசமான முறையில் பயந்தால் பெற்றோர் என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை விதைத்திருக்கிறார்.
கீனோ _வித்தியாசமான அனுபவம் நிச்சயம்!
-சு.கணேஷ்குமார்