‘கொலை’ சினிமா விமர்சனம்

மேக்கிங்கில் ஹாலிவுட் தரத்தை தர முயற்சித்திருக்கிற ‘கொலை.’

பாடகியாக இருந்து, மாடலிங் துறைக்குள் நுழைந்து, சிலபல நெருக்கடிகளைச் சமாளித்து புகழ் வெளிச்சத்தை எட்டிப் பிடித்தவர் லைலா.

அவள் கொலை செய்யப்பட, அதற்கான காரணத்தையும் குற்றவாளியையும் கண்டுபிடிக்க சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் விநாயக்.

சிக்கலான, மர்மமான பல வழக்குகளில் குற்றவாளிகளை நெருங்க உதவிய அவரது மூளை, அவரா, இவரா, அவனா, இவனா, அவளா, இவளா என மூலை முடுக்கெல்லாம் ஆராய்கிறது. அவர்கூடவே சேர்ந்து நமது மனமும் பரபரக்கிறது, இவராக இருக்கும் அவராக இருக்கும் என யூகிக்கிறது. தேடலின் முடிவில், நாம் நினைக்காத ஒருவன் குற்றவாளியாய் அடையாளம் காட்டப்பட, அதன் பிறகு விரியும் கொலைக்கான காரண காரிய காட்சிகள் குலை நடுங்க வைக்கின்றன. இயக்கம் பாலாஜி குமார்

ஏற்பது எந்த வேடமென்றாலும் முகபாவங்களில் பெரிதாய் சலனம் காட்டாமல் நடிக்கும் விஜய் ஆண்டனியின் இயல்புக்கு, துப்பறிவாளன் பாத்திரம் கச்சிதமாக பொருந்துகிறது!

சற்றே அண்ணாந்து பார்த்தபடியே நடப்பது, அமர்ந்திருக்கும்போது இமையசைவுகளால் கம்பீரம் காட்டுவது என விஜய் ஆண்டனி வருகிற காட்சிகள் அத்தனையிலும் தருகிற நடிப்பு கவனம் ஈர்க்கிறது. அந்த நரைமுடியை படிய வாரிய மாறுபட்ட தோற்றமும், மகாலெஷ்மி பழனியப்பன் வடிவமைத்துக் கொடுத்திருக்கும் உடைகளும் கவர்கிறது!

இளமை ததும்பும் இளம்பெண்ணாக, மாடல்களுக்கே உரிய ஒல்லிப்பிச்சான் உடல்வாகோடு வருகிற மீனாட்சி செளத்ரியின் புன்னகையில் இருக்கிறது மனதை கபளீகரம் செய்கிற வசீகரம்! ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ பாடலில் வெளிப்படும் அவரது மெல்லிய நடன அசைவுகள் ஞாபகத்தில் தங்கும்!

புதிதாய் பணியில் சேர்ந்த காவல்துறை அதிகாரியாக ரித்திகா சிங். துடிப்பான பேச்சு, மிடுக்கான நடை என வலம்வருபவர், தான் நினைத்ததை செய்ய முடியாமல் உயரதிகாரிக்கு கட்டுப்படும்போது ஏற்படும் மனப் புழுக்கத்தை சின்னச் சின்ன முகபாவங்களில் பிரதிபலிப்பது நேர்த்தி!

ஒருசில காட்சிகளில் அப்படி வந்து இப்படி போகிற பாத்திரம் என்றாலும் தன்னைத்தாண்டி யார் எது செய்தாலும் ஏற்கமுடியாதவராக, காவல்துறை உயரதிகாரியாக ஜான் விஜய். வழக்கமாக அவர் நடிப்பில் கலந்திருக்கும் திமிரும் தெனாவட்டும் இந்த படத்திலும் தேவைக்கேற்ப அட்டனன்ஸ் போடுகின்றன!

ராதிகா சரத்குமார், சித்தார்த்தா சங்கர், முரளி சர்மா, கிஷோர் குமார், அர்ஜுன் சிதம்பரம், சம்ஹித் போரா… இன்னபிற நடிகர் நடிகைகளின் நடிப்புப் பங்களிப்பு கதையோட்டத்துக்கு பலம்!

அந்தக் கால ‘பார்த்த ஞாபகமில்லையோ’ பாடலுக்கு புத்துயிர் ஊட்டியிக்கும் கிரிஷ் கோபாலகிருஷ்ணன், வேகமெடுத்தோடும் திரைக்கதைக்கு ஆங்கிலப் படங்கள் பாணியில் பின்னணி இசைமூலம் வெறியூட்டியிருக்கிறார்!

பெரும்பாலான சம்பவங்கள் மெல்லிய வெளிச்சத்தில், இருள் சூழ்ந்த பின்னணியில் காட்சிகளாக விரிய அதற்கு தனது தேர்ந்த ஒளிப்பதிவின் மூலம் உயிரோட்டம் தந்திருக்கிறார் சிவகுமார் விஜயன்!

கலை இயக்குநரின் உழைப்பை தனியாய் பாராட்ட வேண்டும்!

வில்லன் தன் சிறுவயதில் ஒரு சிறுமியை பெட்டிக்குள் பூட்டி அவளது கதறலை ரசிப்பது மென் மனதுக்காரர்களை உலுக்கும். கதாநாயகனின் குடும்பப் பின்னணி, அவர் சந்தித்த சோகங்கள் என அவ்வப்போது எட்டிப் பார்க்கும் காட்சிகள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. நிறைவுக் காட்சி இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்திருக்கலாம்.

உங்களுக்கு மர்டர் மிஸ்ட்ரி, கிரைம் திரில்லர் வகை படங்கள் மீது ஈடுபாடு உண்டென்றால் ‘கொலை’யின் கதைக்களமும் ஸ்டைலிஷ் மேக்கிங்கும் உங்களுக்குப் பிடிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here