‘கொன்றுவிட வா‘ சினிமா விமர்சனம்
தமிழ் சினிமாவுக்கு இன்னொரு பேய்ப்படம்… எளிமையான பட்ஜெட்டில் கொன்று விடவா.
அந்த மலைக்கிராமத்தில் வயதான ஒருவர் கல்யாண வயதிலிருக்கும் தன்னுடைய மகளுடன் வசிக்கிறார். அந்த மகள் கை கால் செயலிழந்து, பேசும் திறன் இழந்து சக்கர நாற்காலியில் நாட்களைக் கடத்துகிறார். அவளுடைய சிகிச்சைக்கு, அந்த ஊரிலுள்ள நடுத்தர வயதுக்காரர்கள் மூன்று பேர் உதவுகிறார்கள். அவள் எழுந்து நடக்கிறாள். அதன்பின், உதவி செய்த மூன்று பேரும் அவளாலேயே கொலை செய்யப்படுகிறார்கள்.
ஏன்? எதற்கு? எப்படி? திரைக்கதையில் பதில் இருக்கிறது… கதை , திரைக்கதை, இயக்கம்: கே. எம். ஸ்ரீஜித்
பரோட்டாவுக்கு பிசைந்து வைத்த மாவுபோல் பளபளவென்றிருக்கிறார் மகாலெட்சுமி. பேசுவதற்கு வசனம் இல்லாததால் கண்களாலேயே பேச வேண்டிய நிர்பந்தம். அதை சரியாகச் செய்திருக்கிறார். தேகத்தின் திரட்சி விழிகளில் காட்டும் மிரட்சி அவரது கதாபாத்திரத்திற்கு பொருத்தம்!
கிக்கான கண்கள், சிக்கென்ற இடுப்பு… காம்போ பேக்காய் ஜோமோல். மணிமேகலை என்ற கதாபாத்திரத்தில் அவரது துடிப்பான நடிப்பு எடுப்பு!
இரண்டு மகள்களுக்குத் தந்தையாக, மகளைக் கொன்றவர்களிடமே கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்ட அப்பாவியாக வருகிற பெரியவர் கிளைமாக்ஸில் கிளர்ந்தெழுவது கச்சிதம்.
‘செத்தா கெட்டவன் நல்லவன் ஆகிடுவானா?’, என்ன வேணா செய்றவன் ஃபிரெண்ட் இல்லை; என்ன வேணும்னு கேட்டு செய்றவன்தான் ஃபிரெண்ட்.’ கதையோட்டத்தில் ஆங்காங்கே ரா.ராமமூர்த்தியின் வசனத் தெறிப்புகள் நறுக் சுறுக்! இந்த வசனகர்த்தா படத்தில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்துமிருக்கிறார் என்பது கூடுதல் செய்தி.
கதை நடக்கும், மேகம் உரசிச் செல்லும் மலைப்பகுதியின் அழகை அதன் இயல்போடு படமாக்கிய கே.எம். அபிஜித், இந்த காட்சிக்கு இது போதும் என கச்சிதமான பின்னணி இசை தந்த பிலால் கீஸ் என தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு நேர்த்தி!
எட்டுப் பத்து நடிகர்களை அதுவும் புதுமுகங்களை வைத்துக் கொண்டு, பேய்ப்படத்திற்கான சங்கதிகளைக் கலந்துகட்டி, சஸ்பென்ஸ் முடிச்சுகளோடு கதை உருவாக்கிய இயக்குநர், ஆரம்பக் காட்சியில் கொடுத்த விறுவிறுப்பை படத்தில் ஆங்காங்கே தூவியிருந்தால் கொன்றுவிடவா பெரிதாய் எழுந்து நின்றிருக்கும்!
கலாட்டாவான காமெடி, ரகளையான குத்துப் பாட்டு என கமர்ஷியல் மசாலா கலக்காமல் பேய்ப்படம் எடுக்க முன்வந்த இயக்குநரின் துணிச்சலுக்கு தனி பாராட்டு!