‘கூர்மன்‘ சினிமா விமர்சனம்
பாலியல் குற்றவாளிகளுக்கு நூதன தண்டனை கொடுக்கும் ‘கூர்மன்.’
குற்றவாளி ஒருவரை, சஸ்பென்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டரிடம் கொண்டுவந்து ஒப்படைக்கிறது காவல்துறை. மனதைப் படிக்கும் திறன் கொண்ட அந்த இன்ஸ்பெக்டர், குற்றவாளியை விசாரிக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த குற்றவாளி தப்பிக்கிறான். அவனைத் தேடும்போது சிலபல உண்மைகள் தெரியவருகின்றன. அவை அதிர்ச்சியாக இருக்கின்றன.
உண்மைக் குற்றவாளி யார்? அவனுக்கு என்ன தண்டனை? என்பது கிளைமாக்ஸ். இன்ஸ்பெக்டராக இருந்தவர் சஸ்பென்ட் செய்யப்பட்டதற்கான காரணங்கள் பிளாஷ்பேக்… இயக்கம்: பிரயான் பி ஜார்ஜ்
நினைத்த நேரத்தில் தூங்கி, நினைத்த நேரத்தில் சாப்பிட்டு, நினைத்த நேரத்தில் குடித்து எந்தவொரு ஒழுங்குமின்றி வாழ்த்து வருபவராக கதைநாயகன் ராஜாஜி. இன்ஸ்பெக்டராக இருக்கும்போது குற்றவாளிகளை கம்பீரமாய் வேட்டையாடுவது, தன் பண்ணை வீட்டில் குற்றவாளிகளை வித்தியாசமான முறையில் விசாரிப்பது, தன் காதலியை காமப்பசிக்கு இரையாக்கியவனுக்கு தினம் ஒன்றாக குரூர தண்டனை தருவது என அவரது கதாபாத்திரம் கவனிக்க வைக்கிறது; ராஜாஜியின் நடிப்பு ஈர்க்கிறது.
கதைநாயகனுக்கு உதவியாளனாக பாலசரவணன். செய்வது எடுபிடி வேலைதான் என்றாலும் அதையும் ஒரு ஒழுங்குடன், ரசனையுடன் செய்வது, தன் முதலாளியின் மீது சொந்த தம்பியாய் பாசம் வைத்திருப்பது என அழுத்தமான பாத்திரத்தை தனது அலட்டலற்ற நடிப்பால் நிரப்பி பலே சரவணனாகிறார்!
நாயகி ஜனனி அழகாக இருக்கிறார். நாயகனுடன் அவர் பேசும் கொஞ்சம் மொழி கூடுதல் அழகாக இருக்கிறது.
ஆடுகளம் நரேன், பிரவீன், சூப்பர் குட்’ சுப்ரமணி என இன்னபிற நடிகர்களின் பங்களிப்பு நிறைவு. படத்தின் கதாபாத்திரங்களில் ஒன்றாக சுப்பு என்கிற பெயர் சுமந்து வருகிற நாயும் ரசிக்க வைக்கிறது.
பண்ணை வீடு, பாதாள அறை என இடைவேளைக்குப் பின்வரும் காட்சிகளில் பரபரப்பும் சுவாரஸ்யமும் கைகோர்க்க, அந்த காட்சிகளின் விறுவிறுப்புக்கு உதவியிருக்கிறது டோனி பிரிட்டோவின் பின்னணி இசை.
எதிரிலிருப்பவரின் மனதைப் படிக்கிற ‘மைன்ட் ரீடிங்’ திறனுள்ளவராக கதைநாயகனை உருவாக்கியது கதையின் தனித்துவம். திரைக்கதையிலும் அந்த தனித்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.
சற்றே வித்தியாசமான முயற்சிக்காகவும், பாலியல் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியிருப்பதற்காகவும் இயக்குநருக்கு பெரிதாய் ஒரு பாராட்டுப் பூங்கொத்து!