‘மகான்‘ சினிமா விமர்சனம்
By சு. கணேஷ்குமார், 99415 14078
‘தப்பு பண்றதுக்கு சுதந்திரம் இல்லைனா அதுக்குப் பேரு சுதந்திரமே இல்லை’ என மகாத்மா காந்தி உதிர்த்த கருத்திலிருந்து கேங்ஸ்டர் ஸ்பெஷலிஸ்ட் கார்த்திக் சுப்புராஜுக்கு உதித்த கரு ‘மகான்.’
அந்த பெரியவர் (ஆடுகளம் நரேன்) மகாத்மா காந்தியின் மீதும் அவரது மது ஒழிப்புப் போராட்டத்தின் மீதும் ஈடுபாடு கொண்டு, போராட்டங்களில் பங்கேற்றவர். தன் மகனையும் (விக்ரம்) காந்தியைப் போலவே நல்லவனிலும் நல்லவனாக வளர்க்க விரும்பி, அவனுக்கு ‘காந்தி மகான்‘ என்றே பெயரும் சூட்டுகிறார்.
அந்த மகான் சூழ்நிலைக் கைதியாகி, நண்பனுடன் சேர்ந்து சாராய சாம்ராஜ்யத்தின் அசுரத்தனமான அதிபதியாகிறான். சிலபல சூழ்ச்சிகள் மூலம் மாநிலம் முழுக்க அவர்களுடைய ஆலையிலிருந்துதான் ஆல்ஹகால் சப்ளை என்ற நிலைக்கு உயர்கிறார்கள். பொழுது முழுக்க போதை, நாள் முழுக்க எண்ணினாலும் முடிக்க முடியாத பணம் என களிப்பாய்க் கழிகிறது அவர்களின் நாட்கள்…
மகான் வழி தவறி தாதாவானாலும், காலப்போக்கில் அவனுடைய மகன் (துருவ் விக்ரம்) நேர்மையிலும் நேர்மையான போலீஸ் அதிகாரியாகிறான். அவனது பெயர் தாதா(பாய் நெளரோஜி.)
அப்புறமென்ன… மகானும் மகனும் மோதிக் கொள்ள திரைக்கதையில் சூடுபிடிக்கிறது.
வெல்வது தாதாவாக வாழ்கிற மகான் தரப்பா? தாதா என்ற பெயரைக் கொண்ட மகன் தரப்பா? கிளைமாக்ஸில் காத்திருக்கிறது சுவாரஸ்யம்!
அடர்ந்த தலைமுடியும், அலட்சியமாய் விட்ட தாடியும் சுமந்து வருகிறார் ‘சீயான்’ விக்ரம். அப்படிப் பார்த்தால் அழுக்குத் தோற்றம்; இப்படிப் பார்த்தால் அழகுத் தோற்றம், கோட்டு போட்டால் கரன்சியில் மிதக்கும் கம்பீரம்: பாசப்போராட்டத்தில் பரிதாப முகபாவம், சரக்கைத் தொட்டால் ஆனந்த ஆரவாரம்; சண்டைக் காட்சிகளில் அரிமாவின் ஆவேசம் என அந்த நடிப்பு ராட்சசன் காட்டியிருக்கும் வெரைட்டி பியூட்டி!
என்கவுன்டர் போலீஸாக துருவ் விக்ரம். வேங்கைப் பாய்ச்சல் வெறியேறிய சிரிப்பு என அவர் வருகிற காட்சிகளில் தருகிற அதிர்வுகள் அத்தனையும் அட்டகாசம் ஆசம்!
அங்கங்கே சற்றே மிகையாக நடித்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில் சிம்ஹாவின் அகன்ற விழிகளில் வழியும் கோபத்தில் வீசுகிறது அனல்.
அரசியல்வாதியாக வருகிற முத்துகுமாரின் அச்சுப்பிச்சு வில்லத்தனம் கெத்து!
சிம்ரன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், கஜராஜ், சனந்த், தீபக் பரமேஷ் என ஏராளமான நடிகர்கள், அவர்களுக்குப் பொருத்தமான கதாபாத்திரங்கள்; கிட்டத்தட்ட 60 ஆண்டுகாலம் பயணிக்கிற கதை, அதற்கேற்ப கதைக்களம், நடிகர் – நடிகைகளின் தோற்ற மாற்றம் என திரைக்கதையோட்டத்தில் மெனக்கெடல் அதிகம். அதற்காக இயக்குநருக்கு அழுத்தமான பாராட்டு!
கதைப்படி அப்பா மகனாக வருபவர்கள் நிஜத்திலும் அப்பா மகன் என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எக்கச்சக்கம். அதற்கு தீனி போடும்விதமாக திரைக்கதை அமைத்ததற்காக இயக்குநருக்கு ஸ்பெஷல் பாராட்டு!
தன் தரப்பின் தவறுகளை நியாயப்படுத்தும் நோக்கில் நேர்மைவாதிகள், காந்தியவாதிகள் பின்பற்றும் கொள்கை பற்றி கதையின் நாயகன் கேள்வியெழுப்பி பதில் தருகிற காட்சி நறுக் சுறுக்!
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை உயிரோட்டம். பாடல்கள் ரசனைக்கு விருந்து!
நிறைவாக ஒன்று… தப்புத்தண்டா சம்பாத்தியத்தில் ஜாலியாக வாழ நினைப்பவர்களுக்கு மகான் வரம். நேர்மையைக் கட்டிச் சுமப்பவர்கள் போகலாம் ஓரம்!