‘கூகுள் குட்டப்பா‘ சினிமா விமர்சனம்
மனிதர்கள் இயந்திரமயமாகிவிட்ட இந்த பரபரப்பான காலகட்டத்தில், மனிதர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய மனிதர்கள் அப்படி இருக்க முடியாமல் ஏதோவொன்றைத் தேடி ஓடிக்கொண்டேயிருக்கும் சூழலில் மனிதர்களுக்கு ஆதரவாக இருப்பதற்காக ‘இரும்பு இதய’ங்களை உருவாக்கினால் என்னவாகும் என்பதே ‘கூகுள் குட்டப்பா’வின் கதை, திரைக்கதை. அக்கட தேசத்தின் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்‘ தமிழில் எமோஷ்னல் பேக்கேஜ்டு ‘எந்திரன்’ வெர்ஷனாக… இயக்கம்: சபரி & சரவணன்.
கே.எஸ். ரவிகுமார் வயதில் முதிர்ந்தவர். மனதளவில் குழந்தை. சிறு ஊனத்தால் சற்றே விந்தி விந்தி நடக்கிற விவசாயி. மனைவியை இழந்தவர். மரம், செடி கொடி என இயற்கையோடு இயற்கையாக வாழ்பவர். தனது மகனை ரொம்பவே அன்பாக வளர்ந்து ஆளாக்கி, ரோபோடிக் சயின்ஸ் படிக்க வைத்தவர், அவனை படிப்புக்கேற்ற வேலைக்குப் போகவிடாமல் கிராமத்திலேயே இருந்து விவசாயத்தையும் தன்னையும் கவனித்துக் கொள்ளச் சொல்கிறார். அந்த மகன் அப்பாவின் விருப்பத்தை ஏற்காமல், மனிதர்களைப் போல செயல்படுகிற ஒரு ரோபோவை தன் அப்பாவுக்குத் துணையாக விட்டுவிட்டு, வேலை நிமித்தம் வெளிநாட்டுக்குப் போகிறான். அந்த ரோபோ வேளாவேளைக்கு மருந்து மாத்திரை கொடுத்து அவரை கனிவாய் கவனிக்கிறது; விதவிதமாய் சமைத்துப் பரிமாறி சமர்த்தாய் திரிகிறது. ரோபோவைக் கொஞ்சிக் குழாவி, அதன் அரவணைப்பில் மகிழ்ந்து மயங்கி சொந்த பிள்ளையாக நினைத்து நேசிக்க ஆரம்பித்துவிடுகிறார் ரவிகுமார். ‘அந்த நேசம் தவறு. இயந்திரம் இயந்திரம்தான்; ஒருபோதும் அது மனிதனாக முடியாது’ என்ற யதார்த்தத்தை காலம் உணர்த்தும்போது வெடிக்கிற உணர்வுகள் என்ன? நடக்கிற சம்பவங்கள் என்னென்ன? விடை மிச்ச சொச்ச காட்சிகளில்…
கே.எஸ். ரவிகுமாருக்கு கனமான பாத்திரம். பெற்ற மகன் மீது பாசம், மகனைப் பிரிந்து தனிமையில் வாழவேண்டிய கட்டாயம், ஆரம்பத்தில் ரோபோவை வெறுத்து ஒதுக்குவது, பின்னர் அதனை இரத்த சொந்தமாய் பாவித்து பாசத்தை பொழிவது, அதற்கு அழகழகாய் ஆடைகள் அணிவித்து அழகு பார்ப்பது, அதனை பிரியும்போது மனமுடைந்து துவள்வது என நடிப்பால் கவர்வதற்கு ஏராளமான எபிசோடுகள். எதிலும் சோடை போகவில்லை!
கே.எஸ். ரவிகுமாருக்கு மகனாக அறிமுக நாயகன் தர்ஷன். படிப்புக்கேற்ற வேலைக்குப் போகவிடாமல் தடுக்கும் அப்பாவின் மீது ஆத்திரம் கொள்வதாகட்டும்; அப்பாவுக்கு ஆபத்து எனும்போது ஏற்படுகிற பதற்றத்தில் வெளிப்படுத்துகிற பாசமாகட்டும் அத்தனைக்கும் கொடுக்கலாம் பாஸ்மார்க்!
‘பிக்பாஸ்’ லாஸ்லியா குட்டைப் பாவாடையில் லவ்லியா. மற்றபடி விசேஷமில்லை.
சீரியஸான கதையோட்டத்தில் அவ்வப்போது வந்துபோகிற யோகிபாபு கொஞ்சமே கொஞ்சம் சிரிக்க வைப்பது ஆறுதல்.
சுரேஷ் மேனன், மாரிமுத்து உள்ளிட்ட மற்ற பாத்திரங்கள் அவரவர் பங்களிப்பில் கச்சிதம். ரசிக்கவும் வைக்கிற, எரிச்சலையும் தூண்டுகிற கிறுக்குத் தனமான பாத்திரத்தில் வருகிற பிராங்ஸ்டர்’ ராகுலும் ஈர்க்கிறார்.
சராசரி மனிதரின் உயரத்தில் முக்கால்வாசி இருக்கிற அந்த ரோபோவின் வடிவமைப்பும், அதன் பேச்சும், நடையும் அத்தனை அழகு. குழந்தைகள் வெகுவாக ரசிப்பது உறுதி. வடிவமைத்தவருக்கு ஸ்பெஷல் பாராட்டு!
ஜிப்ரானின் இசை, எடிட்டிங் நேர்த்தி, ஆர்வியின் ஒளிப்பதிவு படத்தின் பலம்.
மனிதர்களுக்கு மனிதர்கள் தருகிற பாசத்தை, அரவணைப்பை எந்தவொரு அறிவியல் கண்டுபிடிப்பாலும் கொடுக்க முடியாது என்பதை சொன்னவிதத்தில் கூகுள் குட்டப்பன் கெட்டியானவன்!