‘வாய்தா’ சினிமா விமர்சனம்

வாய்தா‘ சினிமா விமர்சனம்

ஏழை எளிய மக்களிடம், தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்களிடம் காவல் மன்றமும் நீதி மன்றமும் தன் கடமையை எப்படிச் செய்கின்றன என்பதை பல படங்களில் பார்த்தாயிற்று… ஏராளமான திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளைக் குவித்து வருகிற வாய்தா தருகிறது மற்றுமொரு வாய்ப்பு!

முதியவர் அப்புசாமி சலவைத் தொழிலாளி. பார்ப்பதற்குப் பரிதாபமாக இருக்கிற அவர், அவரைவிட பரிதாபமாக இருக்கிற குடிசையொன்றில் துணிகளுக்கு இஸ்திரி போட்டு பிழைத்துக் கொண்டிருக்கிறார். உயர்சாதி இளைஞன் ஒருவன் பைக்கில் வந்து அந்த அப்புசாமி மீது தெரியாத்தனமாய் மோதிவிட கையில் தீக்காயம், எலும்பு முறிவு என நிலவரம் கலவரமாகிறது. விபத்தை ஏற்படுத்திய இளைஞனின் தரப்பிலிருந்து மருத்துவச் செலவுக்கான தொகையை மட்டும் நிவாரணம் கேட்க முயற்சிக்கிறார் முதியவர். ஊரில் வளர்ந்து வரும் அரசியல்வாதியொருவர் விபத்து விவகாரத்தில் தலையிட இடிபட்ட தரப்பும் இடித்த தரப்பும் நீதிமன்றத்தில் சந்திக்க பிறகென்ன வாய்தா மேல் வாய்தாதான்… சாதித்திமிரும் பணத்திமிரும் கைகோர்த்தால் சாமானியனுக்கு என்ன மாதிரி தீர்ப்பு கிடைக்கும் என்பது வையத்துக்குத் தெரிந்த கதை. அதுவே ‘வாய்தா’வின் திரைக்கதை..கதைநாயகன் அப்புசாமியாக மு. ராமசாமி. அவரது இயல்பான தோற்றத்தின் முதுமை கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திவிட, அந்த தாடி வெண்தாடி ஆக்கிரமித்த முகத்தில் வெளிப்படும் அப்பாவித்தனம் ஏழ்மையையும் சேர்த்துப் பிரதிபலிப்பது ஏற்ற பாத்திரத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறது.

கதைநாயகனுக்கு மகனாக, படத்தின் இன்னொரு நாயகனாக(கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான சி. மகேந்திரனின் மகன்) புகழ் மகேந்திரன். பரம்பரைத் தொழிலை விட்டுவிலகி நெசவுத் தொழிலில் ஈடுபடுவது, அங்கொரு பெண்ணுடன் காதலாகிக் கசிந்துருகி மேல்சாதி – கீழ்சாதி பாகுபாடு தலைதூக்க பின்னர் கண்ணீரில் கரைந்துருகுவது, அப்பாவுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணம் பெற போராடுவது, சாதிய அடக்குமுறையால் பரம்பரைத் தொழிலையே கையிலெடுப்பது என சுறுசுறுப்பாய் சுழல்கிற அந்த இளங்காளையின் நடிப்பு கவனம் ஈர்க்கிறது!

கிராமத்துப் பெண் பாத்திரத்துக்கு நாயகி பொளலின் ஜெஸிகா தேர்ந்த தேர்வு. வெள்ளந்திப் புன்னகை, வெட்கச் சிரிப்பு, காதல் காட்சிகளில் கண்ணியம் மீறாத முத்தப் பரிமாற்ற கிளுகிளுப்பு என வசீகரிக்கிறார்.

வழக்கறிஞராக நாசர். ஒருசில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் நீதிபதி முன் அவர் வாதாடும் விதம் இதுவரை எந்த நீதிமன்றத்திலும், எந்த படத்திலும் பார்க்காத ஒன்று. அப்படி வாதிடுவது தவறில்லை என எடுத்துச் சொல்லி இறுமாப்பு காட்டுவது கெத்து!

சுயநல அரசியல்வாதி, சுயநல வழக்கறிஞர், சுயநல நீதிபதி என கதைக்களத்தின் மாந்தர்கள் அத்தனை மோசம்; பாத்திரமேற்றவர்கள் உணர்ந்து நடித்திருப்பது நேர்த்தி.

‘வாய்தா வாய்தா வாய்தா இது நேர்மைக்குப் பிடிச்ச நோய்தா(ன்)’ பாடல் சொல்கிற சங்கதியில் யதார்த்தமும் வலியும் அதிகம்! ‘பார்வை வண்ண நூலைப் போல’ பாடலில் கிறக்கம் அதிகம்! இசை: லோகேஸ்வரன்

சாதிய ஏற்றத்தாழ்வு, வர்க்க பேதம், நபருக்கேற்றபடி மாறுபடும் நீதி நியாயம் என காட்சிக்கு காட்சி அரசியல் பேச முற்பட்ட இயக்குநர் மகிவர்மன் கமர்ஷியல் அம்சங்களையும் அளவாகக் கலந்திருப்பது புத்திசாலித்தனம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here