குடியைக் கெடுக்கும் குடியை ஒழித்துக் கட்ட களமிறங்கும் ஒரு பெண் சந்திக்கும் இன்னல்களும் இழப்புகளுமாய் விரிகிறது ‘குயிலி’யின் கதைக்களம்.
இளம்பெண் குயிலி போதை அதுஇதுவென என எந்த கெட்டப்பழக்கமும் இல்லாதவனாக இருப்பதால், தன்னை நிஜமாக நேசிப்பதால், உழைத்துப் பிழைப்பவனாக இருப்பதால் அந்த இளைஞனைக் காதலித்து கல்யாணம் செய்து கொள்கிறாள்.
மணவாழ்க்கை இனிமையாகப் போய்க் கொண்டிருக்கிறபோது, அவனுடன் பணிபுரிகிறவர்கள் அவனுக்கு மது போதையின் சுகத்தை காண்பிக்கிறார்கள். காலப்போக்கில் அவன் முரட்டுக் குடிகாரனாகிவிட, குயிலியின் குடும்ப நிம்மதி பறிபோகிறது. ஒரு கட்டத்தில் அவனது உயிரும் பறிபோகிறது.
மனம் கலங்கி நிற்கும் குயிலி, பின்னர் சுதாரித்துக் கொண்டு மகனை கஷ்டப்பட்டு வளர்த்து, கஷ்டப்பட்டு ஐ ஏ எஸ் வரை படிக்க வைக்கிறார். ஐ ஏ எஸ் படித்த அந்த மகன், தான் பிறந்து வளர்ந்த ஊருக்கே கலெக்டராக வருகிறார்.
அந்த ஊரில் மது ஆலை நடத்திக் கொண்டு, ஊர் மக்களை குடிக்கு அடிமையாக்கி வைத்திருக்கும் அராஜகக்காரருக்கு எதிராக மக்கள் சக்தியை திரட்டி போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் குயிலி, கலெக்டராக இருக்கிற மகனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மது ஆலையை மூடலாம் என்று நினைக்கிறார். அவர் நினைத்தது நடந்ததா இல்லையா என்பது மீதிக்கதை…
வாலிபப்பருவ குயிலியாக வருகிற தஷ்மிகாவிடம் கிராமத்துப் பெண்ணுக்கான அத்தனை லட்சணங்களும் கொட்டிக் கிடக்கிறது. அந்த அம்மணி காதல் தருணங்களில் கிறங்கும்போது படம் பார்க்கும் ஆண்களின் ஹார்மோன்கள் சூடேறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. கணவன் குடிகாரனான பிறகு கொதித்துக் கொந்தளிக்கும்போது வெளிப்படுத்தும் உணர்வுகள் அவர் தேர்ந்த நடிகை என்பதை நிரூபிக்கிறது.
குயலியின் கணவராக வருகிற ரவிச்சா, கிராமத்தில் சுற்றித் திரியும் சக சாமானிய மனிதர்களின் ஜெராக்ஸ் காப்பியாய் இருக்கிறார். விளம்பர ஓவியங்கள் வரைபவர், அந்த தொழிலில் பின்னடைவு ஏற்பட்ட பின்னர் கட்டுமானப் பணியில், செங்கல் சூளை பணியில் என தன்னை ஈடுபடுத்திக்கொண்டு முன்னுதாரண மனிதராகிறார்; குடியின் பாதையில் பயணித்து மோசமான மனிதனாக தன்னை வெளிப்படுத்தி தன்னைப் போன்றவர்கள் பூமிக்குப் பாரம் என்பதற்கான சான்றாக எழுந்து நிற்கிறார்.
வயது முதிர்ந்த குயிலியாக இடைவேளைக்குப் பிறகு இணைகிறார் லிஸி ஆண்டனி. கம்யூனிசவாதிகளின் புத்தகங்களைப் படித்து அநியாயங்களுக்கு எதிராக போராடும் துணிச்சல் மிக்கவராக, கலெக்டராக இருக்கும் தன் மகன் மக்கள் நலன் பற்றி சிந்திக்காதவனாக இருக்கும்போது ஆத்திரப்படுபவராக, மது ஆலையை மூடுவதற்காக தியாக மனப்பான்மையோடு முடிவெடுப்பவராக தனக்கு தரப்பட்ட கனமான கதாபாத்திரத்துக்கு உணர்வுபூர்வமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் உயிர்கொடுத்திருக்கிறார்.
படத்தின் இயக்குநர் முருகசாமி ஊரிலுள்ள பெண்களை சைட் அடிப்பதும், யாருடைய கிரீன் சிக்னலும் கிடைக்காமல் பிரம்மச்சாரியாக வலம்வந்து வேதனைப்படுவதும் படத்தில் காமெடி இல்லாத குறையை ஓரளவு போக்குகிறது.
அதிகாரம் தன் வசமிருந்தாலும் மக்கள் நலன் சார்ந்து செயல்படாத, மக்களுக்காக போராடுகிற தன் அம்மாவை அவமானப்படுத்துபவராக, ஊரைக் கெடுப்பவனுக்கு துணை போகிற கலெக்டராக எளிமையான நடிப்புப் பங்களிப்பை வழங்கியிருப்பவர் இந்த படத்தின் தயாரிப்பாளர் வி வி அருண்குமார்.
ஊர் மக்களுக்கு ஆரம்பத்தில் இலவசமாக மதுபானத்தைக் கொடுத்து, காலப்போக்கில் அவர்களை குடிக்கு அடிமையாக்கி அராஜகம் செய்கிற நபர் நடிப்பில் கெத்து காட்டியிருக்கிறார்.
இன்னபிற கேரக்டர்களை ஏற்றிருக்கிற புதுமுக நடிகர் நடிகைகள் கதையின் தேவையை சரியாக பூர்த்தி செய்திருக்கிறார்கள். ஹலோ கந்தசாமி உட்பட பரிச்சயமான ஒருசிலரும் படத்தில் உண்டு.
ஒளிப்பதிவாளர் பிரவீன் ராஜ் பட்ஜெட்டில் அடங்கும் பங்களிப்பால் காட்சிகளை மெருகேற்ற முயற்சி செய்திருக்கிறார்.
ஜோ ஸ்மித்தின் இசையில் மதுவின் தீமைகளை விவரிக்கும் ‘மது அது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ பாடல், ‘உன்ன பார்த்த பொழுதுல இருந்து’ என்கிற முதலிரவுப் பாடல், குயிலி தன் கணவனை இழந்தபின் வருகிற ‘என்ன சொல்ல ஏது சொல்ல’ என்கிற சோகம் சுமந்த பாடல், ‘நான் பத்து மாதம் சுமந்த பிள்ளை’என்கிற மற்றொரு பாடல்… அத்தனைக்கும் பாஸ்மார்க்குக்கும் கூடுதல் மதிப்பெண் தரலாம்.
இன்றைய சமூகம் சந்திக்கும் பிரச்சனை பற்றி தன்னால் இயன்ற பொருட்செலவில் ஒரு படைப்பைத் தயாரித்த தயாரிப்பாளரையும், நல்ல கருத்துடன் படத்தை இயக்கிய முருகசாமியையும் பாராட்டலாம்.
கிளைமாக்ஸ் மனதை உலுக்காமல் விடாது.
குயிலி _ சமூகப் போராளி; தீமைகளைப் பொசுக்கும் வெடிகுண்டு!
-சு.கணேஷ்குமார்


