‘எல்ஜிஎம்’ சினிமா விமர்சனம்

ஹிட்டாகிறதோ இல்லையோ அவ்வப்போது வித்தியாசமான கதைகளைச் சுமந்து வரத் தயங்கியதில்லை தமிழ் சினிமா. அந்த வகையில் இப்போது இன்னொன்று…

அந்த இளைஞன் தன் மனதுக்குப் பிடித்த பெண்ணிடம் மண வாழ்க்கையில் இணைவது குறித்து பேசுகிறான். அவள் சம்மதிக்கிறாள். அதே நேரம் ‘இரண்டு வருட காலம் பழகியதில் நான் உன்னை புரிந்து கொண்டேன். அதனால் நாம் கல்யாணம் செய்து கொள்வதில் பிரச்சனையில்லை. ஆனால், கல்யாணத்துக்குப் பின் எனக்கு பழக்கமில்லாத உன் அம்மாவுடன் ஒரே வீட்டில் வசிப்பது சரிவராது’ என்கிறாள். அதற்கு தீர்வாக, ‘அம்மாவிடம் பழகிப் பார்க்க ஏதாவது ஒரு ஊருக்குப் போய் சில நாட்கள் தங்கலாம்’ என்கிறாள். அவள் விருப்பப்படியே இரு குடும்பமும் ஒரு குளிர்ப் பிரதேசத்துக்குப் புறப்படுகிறார்கள்.

அந்த பயணத்தில் அவர்களுக்கு கிடைக்கிற இனிமையான அனுபவங்கள், சந்திக்கிற சவால்கள், ஏற்படுகிற கஷ்ட நஷ்டங்கள் என எல்லாவற்றையும் தாண்டி, எடுக்கப்படுகிற முடிவு என்ன என்பதே கிளைமாக்ஸ். இயக்கம் ரமேஷ் தமிழ்மணி

எந்த விஷயத்திலும் சரியாக முடிவெடுக்கத் தெரியாத, சூழ்நிலைக்கு ஏற்ப தடுமாறி தத்தளிக்கிற இளைஞனாக ஹரீஷ் கல்யாண். காதலிக்கு அழகான காதலன், அம்மாவுக்கு அன்பான பிள்ளை என ஏற்றிருக்கும் பாத்திரத்தில் நிறைவான நடிப்பைத் தர முயற்சித்திருக்கிறார்.

தனக்கு மாமியாராகப் போகிறவருடன் பழகிப் பார்க்க ஆசைப்படுகிற வித்தியாச வினோத உலகமகா புரட்சிப் பெண்ணாக இவானா. சுற்றுலாவுக்கு திட்டமிட்டு உடன் வந்த எல்லோரையும் ஒரே நாளில் கழட்டி விட்டு கோவாவுக்கு சிற்றுலா போவது, போன இடத்தில் வருங்கால மாமியாரின் நடை உடையை மாற்றுவது, ஷாப்பிங் அதுஇதுவென சுற்றித் திரிவது, பப்புக்கு போய் மப்பாவது, புலியிடம் சிக்கி உயிருக்குப் போராடுவது என சுற்றிச் சுழன்றிருக்கிறார். எல்லாவற்றையும் விட அந்த ‘லவ்டுடே’ நாயகியின் பிரெஷ் டுடே புன்னகையும், பார்வையிலிருக்கும் படபடப்பும் வசியம் செய்கிறது!

கணவனை இழந்து மகனை வளர்த்து ஆளாக்கிய சிங்கிள் மதராக, அம்மாவாக நடித்தாலும் அக்காவாக நினைக்க வைக்கிற இளமையோடு நதியா. மகன் மீது காட்டும் அன்பு, மகன் விரும்பிய பெண்ணால் அவமானத்தைச் சந்தித்தபின் ஏற்படுகிற மன உளைச்சல், அதே பெண்ணுடன் சிநேகிதி போல் கலந்து பழகுகிற மன மாற்றம் என தேர்ந்த நடிப்பால் ஏற்ற பாத்திரத்திற்கு உயிரோட்டம் தந்திருக்கிறார்,

ஹீரோ எடுக்கிற முடிவுகள் கிறுக்குத் தனமாக இருக்க, அவற்றில் மாட்டிக் கொண்டு அல்லல்படுகிற நண்பனாக ஆர் ஜே விஜய். அவரது அலட்டிக் கொள்ளாத நடிப்புக்கும், இயல்பாக வருகிற காமெடிக்கும் அப்ளாஸ் அள்ளுகிறது!

பஸ் டிரைவராக வருகிற யோகிபாபு குதிரை வண்டி ஓட்டி குடை சாய்வது குதூகலம். அவருக்காக கூடுதலாய் யோசித்து காட்சிகள் உருவாக்கியிருந்தால் மனிதர் இன்னும் கொஞ்சம் கலகலப்பூட்டியிருப்பார்.

வெங்கட் பிரபு, விடிவி கணேஷ், ஸ்ரீநாத், வினோதினி, தீபா சங்கர், விக்கல்ஸ் விக்ரம், ஹரி முனியப்பன், சாண்டி மாஸ்டர் என இன்னபிற நடிகர்கள் கதையோட்டத்துக்குத் தேவையானதை நிறைவாகச் செய்திருக்கிறார்கள். சீனியர் நடிகர் காத்தாடி ராமமூர்த்தியை வீணடித்திருக்கிறார்கள்.

இயக்குநரே இசையமைப்பாளர் அவதாரம் எடுத்ததில் பாடல்கள் பரவாயில்லை ராகத்தில், பின்னணி இசை பரவாயில்லை ரகத்தில் டெலிவரியாகியிருக்கிறது.

கர்நாடகாவின் கூர்க் பகுதிக்கு டிரிப் போவது வரை அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை தூண்டிய திரைக்கதை அதன்பின் யோகா மையம், மதுக்கூடம் என எங்கெங்கோ சுற்றி, புலியோடு சேர்த்து ஒரு வேனில் கதையின் முக்கியஸ்தர்கள் மூவர் கடத்தப்பட்டு அவர்கள் புலியை பூனைபோல் டீல் செய்வது என மனம்போன போக்கில் கடந்தோடுவது படத்தின் பலவீனம்!

இது தல தோனியின் தயாரிப்பில் முதல் படம். மைதானம் பெருசு; மட்டை சிறுசு. அடுத்தடுத்த படங்கள் ‘போர்’ அடிக்காமல் ‘சிக்ஸராக’ எகிற வாழ்த்துகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here