சமீப காலமாக தமிழில் வெளிவந்த பல பேய்த் திரைப்படங்கள், பேய்களையே வெறுப்பேற்றும் வகையில் இருந்த நிலையில், ஒரு பழைய பாணி பேய்க் கதையோடு திகிலூட்ட வந்திருக்கிறார் வினீத் வரபிரசாத்.
சென்னையில் ஒரு பல மாடிக் கட்டடத்தில் உள்ள தகவல்தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில் டீம் லீடராக மாற்றலாகி வருகிறான் குரு (கவின்). அங்கே, மனிதவளப் பிரிவில் வேலை பார்க்கும் ஹரிணி (அம்ரிதா) முதல் நாளே குரு மீது ஈர்ப்பு கொள்கிறாள். அன்று இரவில் குரு தனியாக அமர்ந்து அலுவலக வேலைகளை முடித்துவிட்டு புறப்படுவதற்காக லிஃப்டில் ஏறுகிறான். ஆனால், லிஃப்டில் பல அமானுஷ்யமான விஷயங்கள் நடக்கத் தொடங்குகின்றன.
லிஃப்டை விட்டு வெளியேறினாலும் படி வழியாகவும் இறங்க முடியவில்லை. சிறிது நேரம் கழித்து ஹரிணியும் இதே போல சிக்கியிருப்பது தெரிகிறது. இருவரும் சேர்ந்து அந்தக் கட்டடத்தை விட்டு வெளியேற எவ்வளவோ முயல்கிறார்கள். ஆனால் அது நடக்கவில்லை.
அங்கிருந்த இரண்டு பாதுகாவலர்களும்கூட இறந்துவிடுகிறார்கள். அந்தக் கட்டடத்தில் என்ன இருக்கிறது, இவர்களை ஏன் அது தடுக்கிறது, இருவரும் தப்பினார்களா என்பது மீதிக் கதை.
ஒரே அலுவலகத்தில் மொத்தப் படத்தையும் முடித்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் மிக மெதுவாகத்தான் நகர்கிறது படம். ஆனால், சுமார் அரைமணி நேரத்திற்குப் பிறகு வேகமெடுக்கிறது திரைக்கதை.
அமானுஷ்யமான அந்த கட்டடத்தில் இருந்து நாயகன் தப்பிக்க முயல்வது, எதிர்பாராத விதமாக நாயகியும் மாட்டியிருப்பது, கண்ணுக்குத் தெரியாத உருவங்கள் துரத்துவது என நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு பேய்ப் படம் சிறிய அளவிலாவது திகிலூட்டியிருக்கிறது.
ஆனால், பலவீனங்களும் இல்லாமல் இல்லை. அந்தக் கட்டடத்தில் இருந்து கதாநாயகன் தப்பிக்க முயற்சிப்பது திரும்பத் திரும்ப ஒரே மாதிரியே இருக்கிறது.

நாயகி வந்து சேர்ந்த பிறகும் அதே மாதிரியான முயற்சிகளே நடக்கின்றன. இது படத்தில் உள்ள சுவாரஸ்யத்தைக் குலைத்து, எப்படா படம் முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
அந்தக் கட்டடத்தில் இருக்கும் பேய்கள், பழிவாங்க விரும்புகின்றன என்பது புரிகிறது. ஆனால், அன்றுதான் வேலைக்குச் சேர்ந்த குருவையும் அதற்கு சில நாட்களுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்த ஹரிணியையும் பேய்கள் துரத்துவது ஏன் என்று புரியவில்லை.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பேய்ப் படம் திகிலூட்டும் வகையில் இருப்பது ஓர் ஆச்சரியம் என்றால், மற்றோர் ஆச்சரியம் கவினின் நடிப்பு. முதல் காட்சியிலிருந்தே மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் மனிதர். எந்த ஓர் இடத்திலும் உறுத்தல் இல்லாமல், தொடர்ந்து படத்தைப் பார்க்க வைக்கிறது இவரது நடிப்பு. படம் முடிந்த பிறகு வரும் பாடலில்கூட ஈர்க்கிறார் கவின். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்வரவு.
நாயகியாக நடித்திருக்கும் அம்ரிதா ஆரம்பத்தில் சற்று சொதப்பினாலும் பிறகு சமாளித்திருக்கிறார். மாற்றவர்கள் எல்லாம் ஒன்றிரண்டு காட்சிகளில் வந்து செல்கிறார்கள்.
கவினின் நடிப்பு, சில திகில் காட்சிகள், சிறிய அளவிலான சஸ்பென்ஸ் ஆகியவற்றுக்காக நிச்சயமாகப் பார்க்கக்கூடிய படம், இந்த ‘லிப்ட்’.
நடிகர்கள்: கவின், அம்ரிதா, பாலாஜி வேணுகோபால்; இசை: பிரிட்டோ மைக்கேல்; ஓளிப்பதிவு: யுவா குமார்; இயக்கம்: வினீத் வரபிரசாத்; வெளியீடு: டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி.
நன்றி: www.bbc.com