Home Uncategorized Lik சினிமா விமர்சனம்

Lik சினிமா விமர்சனம்

‘டெக்னிகலாக ஸ்ட்ராங்’ என்று சொல்லப்படுகிற படங்களில் ஒன்றாக Lik.

மொபைல் போன் பயன்படுத்தாமல் வாழ்வதை கொள்கையாக கொண்டிருக்கும் இளைஞனுக்கு, மொபைல் போனையே உலகமாக நினைத்துக் கொண்டிருக்கும் பெண் மீது காதல் உருவாகிறது. காதலிக்காக தன் கொள்கையை ஓரங்கட்டிவிட்டு மொபைல் போன் பயன்படுத்த துவங்குகிறான். அதன் விளைவுகளே 2040-ல் நடக்கும் இந்த கதையின் மிச்சமீதி…

லைக் (Lik) என்ற ஆப் மூலமாக மட்டுமே காதலிக்க முடியும்; காதலர்களுக்குள் காதல் எந்தளவில் இருக்கிறது, எத்தனை சதவிகிதத்தில் இருக்கிறது என்பதை அந்த ஆப் எடுத்துச் சொல்லும். அப்படி எடுத்துச் சொல்வது குறைவாக இருந்தால் காதலர்கள் பிரிந்து விட வேண்டும். அப்படியான கட்டுப்பாட்டுக்குள் இருக்கிற, ஆப் சொல்வதை மட்டுமே நம்புகிற பெண்ணைக் காதலிப்பவராக பிரதீப் ரங்கநாதன்.

ஆப்பில் பரிசோதிக்கும்போது அவருக்கும் அவர் காதலிக்கும் பெண்ணுக்குமான காதல் கெமிஸ்ட்ரி குறைவாக இருக்க, பிரேக் அப் ஆகிறது. அப்படியொரு நிலைமைக்கு வந்தபின் ‘காதலில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதை ஆப் தீர்மானிக்க முடியாது; உணர்வுகளால் மட்டுமே முடிவுக்கு வர முடியும்’ என்பதை ஊர் உலகத்துக்கு எடுத்துக்காட்டவும், தன் காதலுக்கு ஆப்பு வைத்த ஆப்பை ஒழித்துக்கட்டவும் களமிறங்குகிறார் பிரதீப். அவர் நினைத்ததை எப்படி சாதிக்கிறார் என்பது படத்தின் பரபரப்பான எபிசோடுகளாக இருக்க, காதலனாக ஏற்கனவே ஒன்றிரண்டு படங்களில் பார்த்த அதே நடிப்போடு வலம் வருகிறார். தந்தை மீதான பாசத்தை வெளிப்படுத்தும்போது சற்றே நெகிழ வைக்கிறார்.

சோஷியல் மீடியா இன்ப்ளூயன்ஸராக, எந்த நேரமும் கன்டெண்ட் மேக்கிங் பற்றி யோசித்துக் கொண்டிருப்பவராக, லைக் கமெண்ட் ஷேரில் உற்சாகமாகிறவராக கிர்த்தி ஷெட்டி. பிரதீப்புடனான காதலில் அவரது அணுகுமுறைகள் ஒரு கட்டத்துக்கு மேல் எரிச்சலூட்டுவதாக இருக்க நடிப்பில் குறையேதுமில்லை.

லைக் ஆப் உருவாக்கி, அதன் மூலம் காதல் ஜோடிகளை கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவந்து, மில்லியன் கணக்கில் பணம் சம்பாதிக்கும் தொழிலதிபராக எஸ் ஜே சூர்யா. காட்சிக்கு காட்சி வினோதமான வடிவமைப்பில் கூலர்கள் அணிந்தபடி வருகிறார்; ஆய் ஊய் என கத்தியபடி உற்சாகத்தைக் காண்பிக்கிறார்; தனது கண்டுபிடிப்புக்கு பின்னடைவு ஏற்படும்போது அதற்கு காரணமான பிரதீப் ரங்கநாதனிடம் காட்டும் கார்ப்பரேட் வில்லத்தனத்தில் அவரது ரெகுலர் ஸ்டைல் நிரம்பியிருக்கிறது.

மொபைல் போன் அதுஇதுவென நவீன் வசதிகள் எதுவும் எட்டிப்பார்க்காத தனி உலகை உருவாக்கி, தன்னைப் பின்பற்றும் மக்களை வழிநடத்துபவராக சீமான். தான் ஆட்சிக்கு வந்தால் எதையெல்லாம் செய்வதாக சொல்லிக் கொண்டிருக்கிறாரோ அதில் ஒன்றிரண்டை இந்த படத்தில் செய்கிறார். கதாநாயகனுக்கு அப்பாவாக போதுமான நடிப்பைத் தந்திருக்கிறார்.

புஸுபுஸு தேகமும் சிரித்த முகமுமாய் இருக்கிற கெளரி கிஷன் கவர்ச்சிக்கு பயன்பட்டிருக்கிறார். யோகிபாபு அப்படியும் இப்படியும் வந்து போகிறார்.

மாளவிகா, ஆனந்தராஜ், ஷாரா, சுனில் ரெட்டி என பழக்கப்பட்ட பலரை முக்கியமான கேரக்டர்களில் பார்க்க முடிகிறது.

காட்சிகள் சோர்வைத் தரும்போதெல்லாம் அனிருத்தின் பின்னணி இசை சுறுசுறுப்பூட்டுகிறது. இன்ஸ்டா ரில்ஸுக்கு ஆடும் அம்மணிகளால் ஏற்கனவே தாறுமாறாய் ஹிட்டடித்த பட்டுமா’ பாடல் காட்சியாகவும் மனதைக் கவர்கிறது. இசைப் பங்களிப்போடு படத்தில் வருகிற ரோபோ ஒன்றுக்கு படம் முழுக்க கவனம் பெறுகிற அளவில் குரலும் கொடுத்திருக்கிறார் ராக் ஸ்டார்.

படத்தின் பெரும்பலம் ரவிவர்மனின் தரமான ஒளிப்பதிவு.

2040 களில் உலகம் இப்படியிருக்கலாம்; காதலர்கள் இப்படியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம் என்ற இயக்குநர் விக்னேஷ் சிவனின் கற்பனை உலகம் சுவாரஸ்யம்தான். அந்த சுவாரஸ்யம் உணவில் பரிமாறப்படும் இனிப்பாக மட்டுமே இருக்க, ஒரு முழுமையான உணவுக்கு இனிப்பு மட்டுமே போதாது என்பதை படத்துக்கான வரவேற்பு காண்பித்துக் கொண்டிருக்கிறது.

Lik லவ் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி – திவாலான நிறுவனம்!

-சு.கணேஷ்குமார் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்