சத்யராஜ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்த ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம் ஜூன் மாதம் 6-ம் தேதி வெளியானது. படம் பெரியளவில் வெற்றி பெற்றதையடுத்து படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்தனர்.
நிகழ்வில் இயக்குநர் கார்த்திகேயன் மணி பேசியபோது ”மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படத்தை ஏன் முதலில் இயக்கினேன் என்றால். இது வரை சொல்லப்படாத ஒரு கதை. உண்மையான ஹீரோ யார் என்பதை சொல்லும் கதை இது.
தான் முன்னேற வாய்ப்பே இல்லை என்று தெரிந்தும் ஓயாமல் ஓடும் நம்முடைய அப்பா அம்மாக்கள் தான் என்னைப் பொறுத்தவரை ரியல் ஹீரோ.
அவர்களுடைய கதையை ஒரு திரையரங்க அனுபவத்துடன் கூடிய கதையாக சொல்ல வேண்டும் என நினைத்தேன். இந்த நோக்கத்தில் உருவானது தான் இந்த திரைப்படம்.
நடிகர்கள் தங்களின் அர்ப்பணிப்புள்ள உழைப்பை வழங்கி கதாபாத்திரத்திற்கு உயிர்ப்பூட்டியதால் இந்த வெற்றி கிடைத்தது. இதற்காக இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
நடிகர் காளி வெங்கட், ”இந்தப் படத்திற்கு இதுவரை வழங்கிய ஆதரவிற்கும், இதற்கும் மேலும் தொடர்ந்து வழங்கப் போகும் ஆதரவிற்கும் நன்றி.
இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கு நன்றி. இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசரான அபிஷேக் ராஜா மூலம் இயக்குநர் அறிமுகமாகி கதையை சொன்னார். அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தை சொன்னார். அது என்னுடைய தந்தையை நினைவு படுத்தியது. அவருக்கு சமர்ப்பிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது என்று இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
இந்தப் படம் வெளியான பிறகு ரசிகர்களின் வரவேற்பை தெரிந்து கொள்வதற்காக திரையரங்கத்திற்கு சென்ற போது, சிலர் என்னை கட்டிப்பிடித்து அழுதனர். என் சட்டை ரசிகர்களின் கண்ணீரால் நனைந்தது. இந்த அனுபவம் புதிதாக இருந்தது மறக்க முடியாததாகவும் ஆகிவிட்டது.
நடிக்கும்போது அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை.
கலையில் மட்டும் தான் அழுவதை கூட ரசிக்க முடியும். இது சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்.
நான் இதற்கு முன்பு அதிகமாக பார்த்த படம் கார்கி. தற்போது அதைவிட அதிகமாக பார்த்த படம் மெட்ராஸ் மேட்னி. ஏனெனில் இந்தப் படத்தின் ஒலி அமைப்பு மிகச் சிறப்பாக இருந்தது.
இந்தப் படத்தில் ஒரு பாடலை பாடிய வடிவேலுக்கு நன்றி. மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை படமாக்குவதில் என்ன இருக்கிறது? என்ற கேள்விக்கு இயக்குநர் இந்த படத்தை பதிலாக அளித்திருக்கிறார். இதனால் நான் இயக்குநரை மனதார பாராட்டுகிறேன். மேலும் இந்தக் கதையை.. அவர் சொன்ன விதத்தை நான் முக்கியமானதாக பார்க்கிறேன்.
ஒரு கவிதையை மொழிபெயர்த்து அதனை திரைப்படமாக உருவாக்குவது போல் இருந்தது. இயக்குநர் கார்த்திகேயன் மணி தொடர்ந்து இது போன்ற படங்களையும் இயக்க வேண்டும். மேலும் இந்தப் படம் ஏராளமானவர்களுக்கு புது நம்பிக்கையை அளித்திருக்கிறது. இதற்காகவும் இயக்குநர் கார்த்திகேயன் மணிக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
நடிகை ரோஷினி ஹரிப்பிரியன், ”சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் எங்களின் கனவு பெரிதாக இருந்தது. கனவும் , ஆசையையும் வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தொடங்கும்போது பேப்பரில் இருந்த இந்த கதையை திரைக்கு கொண்டு வந்து, அந்த உணர்வை அனைவரும் உணர்ந்து ரசித்து பாராட்டும் போது அதை சொல்வதற்கு வார்த்தை இல்லை. நாங்கள் அனைவரும் இணைந்து நடித்த ஒரு படத்திற்கு அனைவரும் தங்களின் இதய பூர்வமான ஆதரவை தெரிவித்ததை நேரில் பார்க்கும் போது உற்சாகமாக இருந்தது. ரசிகர்கள், ரசிகைகள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.


