கடவுளை வழிபடுகிறவர்கள் கடவுளின் அடியார்களையும் வழிபடுவதுண்டு. அந்த வகையில் இஸ்லாமியப் பெருமக்கள் அல்லாஹ்வின் தூதரான நபிகள் நாயகத்தையும் (முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலம்) வழிபடுகிறார்கள்; அவர் வகுத்துக் கொடுத்த கொள்கைகளைப் பின்பற்றுகிறார்கள்.
அவருடைய வாழ்க்கை வரலாறு உலகில் புழக்கத்திலுள்ள பல்வேறு மொழிகளில் எழுத்து வடிவமாக, காட்சி வடிவமாக வந்துள்ளன, வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இணைகிறது ஆந்தை படத்தை இயக்கி கவனம் ஈர்த்த மில்லத் அகமது இயக்கியிருக்கும் ‘மிலாதுன் நபி’ ஆவணப் படம்.
நபிகள் நாயகத்தின் பிறப்பிலிருந்து மறைவு வரையிலான வாழ்க்கை வரலாற்றை இஸ்லாமிய மத குருக்கள் மூலமாக, ஏ ஐ தொழில்நுட்ப உதவியுடன் உருவான காட்சிகள் மூலமாக, பாடல்கள் மூலமாக எடுத்துச் சொல்கிறது இந்த படத்தில் அப்துல் கையூம், உமர், சதக்கத்துல்லா என மூன்று இமாம்கள் நபிகள் நாயகத்தின் வரலாற்றை எளிய தமிழில் விவரிக்கிறார்கள்.
நபிகள் அரேபியாவில் உள்ள மக்காவில் கி.பி. 571-ல் பிறந்தது, பெற்றோரை இழந்து தாத்தாவின் ஆதரவில் வளர்ந்தது,
தீய செயல்கள் அனைத்திலிருந்தும் சிறு வயதிலேயே விலகி அல்அமீன் என்ற சிறப்பு பெயர் பெற்றது,
மக்காவில் வாழ்ந்த 13 வருடங்களில் கடுமையான துன்பங்களை அனுபவித்தது,
53-வது வயதில் மக்காவில் வசித்த வீட்டிலிருந்து மத ரீதியிலான தனது எதிரிகளுக்கு தெரியாமல் வெளியேறியது,
மதினாவுக்கு ஒட்டகத்தின் மீதேறி போகும் வழியில் ஒட்டகம் மண்டியிட்ட இடத்தில் அல்லாவின் கட்டளைப்படி நபிகளால் குபா பள்ளிவாசல் கட்டப்பட்டது, அந்த பள்ளிவாசலில் நபிகளின் முதல் ஜுமா தொழுகை நடந்தேறியது,
இஸ்லாமியர்கள் சந்தித்த முதல் போர், போர் தொடுத்த காபீர்களின் தரப்பில் 70 பேரும் நபிகள் தரப்பில் 17 பேரும் மரணித்தது என பலவற்றையும் பார்க்க முடிகிறது.
நபிகள் வானுலம் நோக்கி பயணப்பட்டது, அற்புதங்கள் பலவற்றை நிகழ்த்திக் காட்டியது என பலவற்றை இமாம்கள் விவரிக்க விவரிக்க சிலிர்ப்பு ஏற்படுகிறது. விவரிக்கப்படும் வரலாற்றுக்கு பொருத்தமாக விரிகிற ஏ ஐ காட்சிகள் பாராட்டும்படி இருக்கின்றன.
வாழ்வில் நேர்மையைக் கடைப்பிடிக்க, எளிமையான வாழ்க்கை வாழ, சக மனிதர்களை கருணையோடு அணுக வலியுறுத்தியிருக்கிறார். தாயின் காலில் விழக்கூடாது என்றும் சொல்லியிருக்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம் மதிப்புமிக்கதாக இருக்கிறது.
போரில் குழந்தைகளைக் கொல்லக்கூடாது எனவும், உணவுக்காக ஆடு உள்ளிட்ட உயிர்களைக் கொல்லும்போது கூர்மையான கத்திகளை பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம்கூட அறிவுறுத்தியிருக்கிறார். அவற்றில் எதையும் விட்டுவிடாமல் தொகுத்து வழங்கியதிலும் இந்த படம் சிறப்பு வாய்ந்ததாகிறது.
உலகளவில் தீவிரவாதத்தின் மூலம் மக்களை பெரியளவில் மக்களை கொடுமைப் படுத்துவதில் கொன்றழிப்பதில் இஸ்லாமியர்களின் பங்கு அதிகமிருப்பதை பார்க்கும்போது அவர்கள் நபியின் போதனைகளை துளியும் மதிக்காதவர்கள் என்பதை உணர முடிகிறது.
நபிகள் 6 வயது பெண்ணிலிருந்து 50 வயது பெண் வரை 11 பேரை மணந்தவர் என்பதை, அவர் யாரையெல்லாம் மணந்தார், எந்த சூழ்நிலையில் மணந்தார், எந்தெந்த வயதில் மணந்தார் என்பதையும் எடுத்துக் காட்டியிருக்கிறது இந்த படம்.
இஸ்லாத்தில் ஒருவர் நான்கு திருமணம் செய்து கொள்ளவதற்கு அனுமதி உண்டு. ஆனாலும் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்துகொள்ள முடியாது; இறைத் தூதரான நபிகள் நாயகம் அதற்கென பல கட்டுப்பாடுகளை, வழிமுறைகளை வகுத்துக் கொடுத்திருக்கிறார். அதை மையப்படுத்தி நகரும் திரைக்கதையில், இஸ்லாமியர் ஒருவர் தனது மத குருவை அணுகி இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும் முடிவை சொல்கிறார். அவர் உடனடியாக அனுமதியளிக்காமல் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமண முடிவுக்கு வரும்போது ‘முதல் மனைவிக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை?’ என்பதிலிருந்து பல விஷயங்களைக் கேட்டறிந்து, இரண்டாம் திருமண முடிவைக் கைவிட வைப்பது படத்தின் அழுத்தமான காட்சிகளில் ஒன்று.
இமாம்கள் நபிகள் பற்றி எடுத்துரைப்பதும் அதற்கேற்ற காட்சிகளும் நேர்த்தியாக இருக்க, ‘மனித புனிதரே நாயகமே எங்கள் நாயகமே’, ‘சொல்லுங்கள் செலவாத்து’, ‘எப்படி சொல்வதம்மா’, ‘அன்று திறந்தது ஒரு வாசல் / இன்று திறக்குது பலவாசல் / உன்னை அழைக்குது திருவாசல் / அதுதானே பள்ளிவாசல்’, மெளத்தை நினைச்சு பயப்படுங்க’ என வரிசைகட்டும் பத்துப் பாடல்கள் நபியின் அருமை பெருமைகளை அடுக்குகின்றன. எச் ஆர் ராம் இதமான இசையில் அந்த பாடல்களை நாகூர் ஹனிபாவின் மகன் நெளஷாத், பாடகர் சாகுல் ஹமீதின் தம்பி சம்சுதீன், யூடியூபர் ரஹீமா, விஜய் டிவி சூப்பர் சிங்கர் பரிதா உள்ளிட்டோர் வளமான குரலில் பாடி படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர். ஒரு பாடலில் இந்த படத்தின் இயக்குநர் தோன்றுகிறார்.
ஒளிப்பதிவு, எடிட்டிங் பணிகளை கச்சிதமாக செய்திருக்கிறார் லலித் ராகவேந்தர்.
படத்தை தயாரித்து இயக்கியிருக்கும் மில்லத் அகமது திரைக்கதை, வசனம், பாடல்கள் என மற்ற எழுத்துப் பணிகளையும் கவனித்திருக்கிறார். அவரே ஏ ஐ உருவாக்கத்திலும் ஈடுபட்டிருக்கிறார். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் நிறைவான படைப்பாக உருவாகியிருக்கும் இந்த ‘மிலாதுன் நபி’ இஸ்லாமியர்கள் கொண்டாடத்தக்கது. மற்ற மதத்தினர் புண்படும்படியான சமாச்சாரங்கள் இல்லையென்பதும், ஆவணப் படம்தான் என்றாலும் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை ஓரளவு தருவதும் படத்தின் தனித்துவம்.
-சு.கணேஷ்குமார்

