Home பொது மூக்குத்தி அம்மன் 2: மஹா சக்தி சினிமா விமர்சனம்

மூக்குத்தி அம்மன் 2: மஹா சக்தி சினிமா விமர்சனம்

மனிதர்களுக்குப் பிரச்சனை என்றால் தீர்வுக்காக கடவுளிடம் போகலாம்; கடவுளுக்கே பிரச்சனை என்றால்? அந்த கடவுளைவிட சக்தியுள்ள வேறு கடவுள் இருந்தால் அங்கு போகலாம்.

தான் கடவுள் என்றே தெரியாமல் ஒரு கடவுள் இருந்தால், அந்த கடவுள் அரக்கர்களிடம் சிக்கினால்? யோசித்துப் பார்க்கவே சுவாரஸ்யமாக இருக்குமே. அந்த சுவாரஸ்யத்தை இரண்டரை மணி நேரம் அனுபவிக்க விரும்பினால் நீங்கள் போக வேண்டிய படம் ‘மூக்குத்தி அம்மன் 2.’

தெய்வ சக்தியையும் மீறிய சக்தி தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற வெறியில் உயிர்பலி அதுஇதுவென நடத்திக் கொண்டிருக்கும் ஒன்றிரண்டு பேர். உலகையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்; தன் கணவன் உலகை ஆள வேண்டும் என்பதற்காக 2000 வருடங்களாக காத்திருக்கும் ஒரு அரக்கி. அவர்கள் மூக்குத்தி அம்மனை அழிக்க திட்டமிட, அவர்களை மூக்குத்தி அம்மன் என்ன செய்கிறாள் என்பதே கதை.

அம்மனாக நயன்தாரா. போலீஸ் கான்ஸ்டபிளாக வருகிற அவர் நரபலி கொடுப்பதற்காக தயாராகும் கூட்டத்தை வேட்டையாடும் ஆரம்பக் காட்சியே மாஸாக இருக்க, தான் அம்மன் என்பதே தெரியாமலிருந்து பின்னர் தெரிந்துகொள்வது, அதுவரை அரக்கர்களிடம் அரக்கியிடம் சிக்கித் தவிப்பது, கிளைமாக்ஸில் உக்கிரமாக ஆடுவது என திரையாளுமை காட்டியிருக்கிறார். அம்மன் கெட்டப் அசத்தலாக இருந்தாலும் அந்த கெட்டப்பில் வருகிற காட்சிகள் குறைவாக இருந்தாலும் நிறைவு.

சாத்தானுக்கு பலரை உயிர்பலி கொடுத்து அதன் பலனாக உலகை ஆளும் சக்தி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடும் அரக்க குணம் கொண்டவராக ரெஜினா கஸான்ட்ரா. நடிப்பில் ராட்சசியாகவே மாறியிருக்கிறார். ஒட்டிப் போன முகமும் மார்பு பிதுங்கும் உலோக உடையுமாக வரும் அவருக்கான காட்சிகள் அத்தனையும் மிரள வைப்பவை.

அசுர பலமிக்கவர்களாக மாறுவதற்காக எதை வேண்டுமானாலும் செய்பவர்களாக சுனில், கருடா ராம் தங்கள் பங்கிற்கு அடித்து ஆட ரெஜினாவின் கணவராக துனியா விஜய் கட்டுமஸ்தான உடலாலும் கரடுமுரடான நடிப்பாலும் தனி கவனம் பெறுகிறார்.

யோகிபாபு, மைனா நந்தினி, லொள்ளுசபா சாமிநாதன் என சுந்தர் சி படங்களில் வழக்கமாக பார்க்கிற சிலரின் காமெடி கலாட்டாக்கள் இன்னொரு பக்கம் களை கட்டுகிறது.

அரக்கியை அழிக்கும் சிலிர்ப்பூட்டும் கிளைமாக்ஸில் மூக்குத்தி அம்மனோடு இணைகிற அம்மன்களாக குஷ்பு – சிநேகா கூட்டணி தெறிக்க விடுகிறது. மூன்று அம்மன்களுமாக சேர்ந்து செய்கிற வதம், ஆடும் ஆட்டம் கலந்துகட்ட தியேட்டர் அதிர்வது உறுதி.

பின்னணி இசையை அதிரடியாகவும் பாடல்களுக்கான இசையை சிலிர்ப்பூட்டுவதாகவும் தந்திருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி.

சிஜி, விஎஃப்எக்ஸ் என தொழில்நுட்பத் துறையின் உழைப்பு அத்தனை ஃபிரேமிலும் தெரிகிறது. ஃபேண்டஸியும் ஆன்மிகமும் சங்கமிக்கும் கதையின் காட்சிகளுக்கு தேவையான வண்ணக் கலவையூட்டி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கோபி அமர்நாத். படத்தை பெருமளவு தாங்குவது கலை இயக்குநர் குழுவின் உழைப்பு.

பிரமாண்டம், கூட்டம் கூட்டமாய் பிரபல நடிகர் நடிகைகள், அரண்மனை பாகம் 5 பார்க்கிறோமோ என்ற உணர்வோடு கதைக்குள் இழுத்துப் போய் பக்திப் பரவசத்தில் மூழ்கடித்து சிலிர்ப்பூட்டுவது என ரசிகர்கள் வைப் மோடுக்கு போக எல்லாமும் இருக்கிற இந்த சுந்தர் சி’யின் மூக்குத்தி அம்மனை தரிசிக்க குடும்பத்தோடு போகலாம்.

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்