75 மாணவர்களுக்கு வெற்றிகரமாக பயிற்சி நிறைவு! மெட்ராஸ் டயாபடீஸ் ரிசர்ச் சென்டர் – டீக்கின் பல்கலைக்கழகம் 10 ஆண்டுகாலம் இணைந்து செய்த சாதனை!

சென்னை, மார்ச் 2, 2023: டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையத்தின் ஒரு அங்கமான மெட்ராஸ் டயாபடீஸ் ரிசர்ச் சென்டர், சர்க்கரை நோய் ஆராய்ச்சி தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள டீக்கின் பல்கலைக்கழகத்துடன் (Deakin University, Melbourne, Australia) இணைந்து இன்று வெற்றிகரமாக தனது 10-வது ஆண்டை கொண்டாடியது. இந்த கூட்டணி ஆராய்ச்சி கடந்த 2013–ம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன்படி கடந்த 10 ஆண்டுகளாக நீரிழிவு தொடர்பான ஆராய்ச்சியை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன.

இந்த 10 வருட பயணத்தில், டீக்கின் பல்கலைக்கழகம் மற்றும் மெட்ராஸ் டயாபடீஸ் ரிசர்ச் சென்டர் இணைந்து நீரிழிவு நோய்க்கான ஆதார அடிப்படையிலான கொள்கைகளைப் புரிந்துகொள்வது மற்றும் நீரிழிவு நோய் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சி திட்டங்கள் மற்றும் அது சம்பந்தமான அடிப்படை அறிவியலில் செவிலியர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தி கொள்வதற்காக நாட்டின் முதல் நீரிழிவு செவிலியர் கல்வியாளர் சான்றிதழ் படிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

இந்த பாடத்திட்டத்தின் மூலம் 75 மாணவர்கள் வெற்றிகரமாக பயிற்சி பெற்றுள்ளனர். நீரிழிவு சிகிச்சையில் ஆராய்ச்சி சூழலை மேலும் வளர்க்கும் விதமாக, டீக்கின் பல்கலைக்கழகம் உள் நாட்டில் ஆராய்ச்சி பாடத் திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு 100 சதவீதம் ஸ்காலர்ஷிபை அறிவித்திருந்தனர். இந்த திட்டத்தின் மூலம் 7 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் இன்று வரை 15 ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியீட்டிற்காக தயாராகி வருகின்றன.

இது குறித்து டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவரும் தலைமை நீரிழிவு நோய் நிபுணருமான டாக்டர் வி. மோகன் பேசும்போது, ”டீக்கின் பல்கலைக்கழகத்துடனான மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் பத்தாண்டு கால இணைந்ததை குறித்து தற்போது நினைவுகூர்வது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதற்கு வழிவகுத்ததோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள மாணவர்கள் இந்தியாவிலேயே ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டுப் படிப்புகளை மேற்கொள்வதன் மூலம் மதிப்புமிக்க சர்வதேச பல்கலைக்கழகத்தில் தங்கள் பிஎச்டி படிப்பைத் தொடரவும் ஒரு சிறந்த தளமாக விளங்கி வருகிறது” என்றார்.மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் டாக்டர் அஞ்சனா பேசும்போது, ”எங்கள் கூட்டணி மூலம் இந்தியாவில் முதன்முறையாக நீரிழிவு செவிலியர் கல்வியாளர் படிப்பு தொடங்கப்பட்டது. எங்கள் கூட்டணி கடந்த 10 ஆண்டுகளாக நீரிழிவு நோய் தொடர்பாக பல்வேறு சிறப்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருக்கிறது. வரும் ஆண்டுகளிலும் மேலும் பல்வேறு ஆய்வுகளை நாங்கள் மேற்கொள்ள இருக்கிறோம் என்றார்.

டீக்கின் பல்கலைக்கழகத்தின் சுகாதாரத் துறை உதவி டீன் (சர்வதேசம்) பேராசிரியர் டேவிட் ஆஸ்டின் இது குறித்து பேசும்போது, ”இந்த 10 ஆண்டு கால வெற்றியை மெட்ராஸ் டயாபடீஸ் ரிசர்ச் சென்டருடன் இணைந்து கொண்டாடுவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். வரும் ஆண்டுகளில் எங்கள் ஆராய்ச்சி மற்றும் கல்விசார் ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here