வெற்றி கதாநாயகனாக நடிக்க, பார்வதி அருண் கதாநாயகியாக நடிக்க, ரமேஷ் திலக் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘மெமரீஸ்.’ சைக்கோ திரில்லர் சப்ஜெக்டில் மனதை அதிரச்செய்யும் கதைக்களத்தைக் கொண்டுள்ள இந்த படத்தை ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கியுள்ளனர்.
படம் வரும் மார்ச் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. அதையொட்டி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கடந்த மார்ச் 4-ம் தேதி சென்னையில் நடந்தது.
இயக்குநர் ப்ரவீன், ”மெமரீஸை மையமாக வைத்து இதுவரை நிறையப் படங்கள் வந்துள்ளது. ஆனால், இதில் நீங்கள் படம் பார்க்கும் போது நீங்களே அந்த பாத்திரமாக மாறிவிடுவீர்கள் அப்படி பார்க்கும் போது படம் எளிதாகப் புரியும். நிறைய ஆச்சரியம் தரும்” என்றார்.இயக்குநர் ஷியாம், ”நான் மலையாளி, தமிழில் படம் செய்துள்ளேன். இந்த கதையை படமாக்க கேரளாவில் தயாரிப்பாளரை தேடின போது யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. வெற்றி நாயகனாக நடிக்கிறார் என்று கூறியபோது தயாரிப்பாளர் ஷிஜு சார் வெற்றி நடித்த ஜீவி படம் பார்த்து உடனே ஒத்துக் கொண்டார். இது மிக சிக்கலான சைக்கலாஜிக்கல் திரில்லர். படம் ஒரு புது அனுபவமாக இருக்கும்” என்றார்.
நடிகர் வெற்றி, ”இந்த கதையில் நடிக்க நான் பொருத்தமாக இருப்பேன் என நம்பியதற்காக இயக்குநர்களுக்கு நன்றி. முழுக்க அடர்ந்த காட்டுக்குள் கஷ்டப்பட்டு படம்பிடித்துள்ளோம். எனக்கு இதில் நான்கு தோற்றங்கள். படம் நன்றாக வந்துள்ளது” என்றார்.
நாயகி பார்வதி அருண், ”இதுதான் நான் நடித்த முதல் தமிழ்ப்படம். ஆனால், ‘காரி’ முதலில் வெளியாகிவிட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு எல்லாமே காட்டில் தான் நடந்தது. என்னுடைய கேரக்டர் ரொம்ப சிறியது தான். ஆனால் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.
இந்த படத்தின் கதாசிரியர் விபின் கிருஷ்ணா, ”வெற்றி தேர்ந்தெடுத்த எந்த கதையும் சோடை போகாது. அஜயன் பாலா சார் தமிழில் வசனங்களை அட்டகாசமாகச் எழுதியுள்ளார்” என்றார்.
வசனகர்த்தா அஜயன் பாலா, ”இயக்குநர்கள் என்னிடம் கதை சொன்ன போது கணிக்க முடியாத திருப்பங்கள் நிறைய இருந்தது. ப்ரவீன், ஷியாம் இருவரையும் கொஞ்சம் விட்டால் நம்மை குழப்பி விடுவார்கள். அந்தளவுக்கு இந்த படம் நான் லீனியரில் ஒரு மாறுபட்ட சைக்கோ திரில்லராக இருக்கும். நடிகர் வெற்றியின் திரை வாழ்வில் இது முக்கியமான படமாக இருக்கும். படம் உங்களைப் பல இடங்களில் ஆச்சரியப்படுத்தும்” என்றார்.
படக்குழு: கவாஸ்கர் அவினாஷ் இசையமைக்க, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். அர்மோ மற்றும் கிரண் நுபிதால் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.