ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கவைக்கும் விதத்திலான சைக்காலஜிக்கல் த்ரில்லர் சப்ஜெக்டில் உருவாகும் படம் ‘மேன்.’ ஹன்சிகா மோத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் ஆரி அர்ஜுனன் முதல்முறையாக வில்லனாக நடிக்கிறார்.
’கலாப காதலன்’ பட இயக்குநர் இகோர் இயக்குகிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை திரையில் ஒட்ட வைக்கும் திரைக்கதையை சரண்யா பாக்யராஜ் எழுதியுள்ளார். பொன் பார்த்திபன் படத்திற்கு மிக அழுத்தமான வசனங்களை எழுதியுள்ளார்.
இயக்குநர் இகோர், சிக்மண்ட் பிராய்டின் கோட்பாட்டின் கூறுகளை உள்ளடக்கிய ‘ஆண்மை’ என்ற அகங்காரக் கருத்துக்குப் பின்னால் உள்ள உளவியலை வெளிக்கொண்டு வர முயற்சித்துள்ளார்.
படம் பற்றி இயக்குநர் இகோரிடம் கேட்டபோது, “ஆண்மை என்பது ஒரு அகங்காரக் கூறாக மாறிவிட்டது. இது ஒரு போலி அடையாளத்தை உருவாக்கியுள்ளது. தவிர, இது பெண்களை அடக்கி, ஆதிக்கம் செலுத்துவது போன்ற ஒரு பிம்பத்தையும் கட்டமைத்துள்ளது. இந்த இயற்கைக்கு எதிரான ஒரு பெண்ணின் கிளர்ச்சிப் போரை உள்ளடக்கியதே ‘மேன்’ என்ற தலைப்புக்குக் காரணம்.ஹன்சிகா மோத்வானி இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு முன்பு பார்த்திராத ஹன்சிகாவை ரசிகர்கள் திரையில் பார்த்து ரசிப்பார்கள். ஆரி அர்ஜுனன் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார், அவருடைய அர்ப்பணிப்பு மற்றும் நடிப்பு மிகவும் அசாதாரணமானது. அத்தகைய எதிர்மறையான பாத்திரத்தில் நடிக்க அவருக்கு நிறைய தைரியம் தேவை” எனவும் கூறினார்.
’96’ படத்தில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தின் ஆக்ஷன் காட்சிகளை ஸ்டண்ட் இயக்குனர்களான நைஃப் நரேன் மற்றும் பிரபு ஆகியோர் கையாண்டுள்ளனர்.
தற்போது, ‘மேன்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
’96’, ’ரோமியோ ஜூலியட்’, ’கலாப காதலன்’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களை தயாரித்த ‘மெட்ராஸ் ஸ்டுடியோஸ்’, ‘அன்ஷு பிரபாகர் ஃபிலிம்ஸ்’ இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன.