Home விமர்சனம் மேட் இன் கொரியா (Made In Korea) சினிமா விமர்சனம்

மேட் இன் கொரியா (Made In Korea) சினிமா விமர்சனம்

படத்தில் மேற்கு வங்கம், இமாச்சலப்பிரதேசம் என சிலபல மாநிலங்களை சுற்றிக்காட்டிய இயக்குநர் ரா கார்த்திக் ஆடியன்ஸுக்கு கொரியாவை சுற்றிக் காண்பிக்கிற படம்.

நாயகி செண்பகாவுக்கு சிறுவயதிலிருந்தே கொரியா மீது ஏதோவொரு ஈர்ப்பு. ஒருமுறையாவது கொரியாவுக்கு போக வேண்டும் என்ற ஆசையோடு வளர்கிறாள். ஒரு கட்டத்தில் அந்த ஆசை நிறைவேறுகிறது.

கொரியாவுக்கு போன அவள், அங்கு ஒரு குடும்பத்துடன் கலந்துபழகி அந்த குடும்பத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிற வயதான பெண்மணிக்கு சொந்த மகள் போல், பேத்தி போல் மாறுகிறாள். அந்த பெண்மணிக்கு ரெஸ்டாரண்ட் துவங்கி நடத்த வேண்டும் என்ற ஆர்வமிருக்கிறது. அவரது ஆர்வத்துக்கு செண்பகா துணையாக நிற்கிறார். ரெஸ்டாரண்ட் துவங்குகிறார்கள்.

இப்படி எல்லாமே நன்றாக போய்க் கொண்டிருக்கும்போது, யாருடைய ரெஸ்டாரண்டை கவனித்துக் கொள்கிறாளோ அந்த குடும்பத்தினரால் திருட்டுப் பழிக்கு ஆளாகிறாள். அந்த நேரமாகப் பார்த்து அவளது சொந்த ஊரில் இயற்கை பேரிடராக ஒரு நிகழ்வு நடக்க அதில் அவளது குடும்பம் சிக்குகிறது… ஒரு பக்கம் இந்த பிரச்சனை, இன்னொரு பக்கம் அந்த பிரச்சனை… தன்னை நம்ப வைத்துக் கழுத்தறுத்த காதலன் மற்றொரு பக்கம்… செண்பகா எதை எப்படி சாமாளிக்கிறாள் என்பது மீதிக் கதை…

செண்பகாவாக பிரியங்கா மோகன். கொரியாவுக்கு போக வேண்டும் என்கிற ஆர்வத்தை பிரதிபலிக்கிற விதம், கொரியாவில் மன உளைச்சலில் இருக்கிற பாட்டி ஒருவரை அந்த சூழலில் இருந்து வெளியில் கொண்டு வருகிற விதம், உறவாகிப் போன பாட்டியுடன் நாட்களை உற்சாகமாக கழிகிற விதம், காதலனின் எதிர்பாராத துரோகத்தை சந்தித்து மனம் கலங்கும் விதம், அப்பா மீதான பாசத்தை வெளிப்படுத்தும் விதம் என அத்தனையிலும் இயல்பு மீறாத நடிப்பு தெரிகிறது.

கொரியாவில் பிரியங்கா காட்டும் அன்பை பலமாக எடுத்துக்கொண்டு தன் விருப்பங்களை நிறைவேற்றி சந்தோஷத்தில் மிதக்கிற பாட்டி, அவரது உறவினர்கள், பிரியங்காவுடன் நட்பாக பழகுகிறவர்கள் கொரிய முகங்களாக இருப்பதால் ஆரம்பத்தில் அவர்கள் மீது எந்தவித ஈர்ப்பும் வராவிட்டாலும் காட்சிகள் நகர நகர மனதில் ஒட்டிக்கொள்கிறார்கள்.

பிரியம் நிரம்பிய காதலனாக வலம் வந்து சந்தர்ப்ப சூழ்நிலையால் துரோகியாக மாறுகிற கதாபாத்திரத்தில் எளிமையாக நடித்திருக்கிறார் ரிஷிகாந்த்.

ஜென்சன் திவாகர் உட்பட தமிழ் சினிமாவில் பழக்கப்பட்ட ஒரு சிலர் ஏற்ற கேரக்டருக்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்.

ஹேஸாம் அப்துல் வஹாப் இசையில் பாடல்கள் இதம் பரப்ப, பின்னணி இசை காட்சிகளின் தன்மைக்கு பொருந்தியிருக்கிறது.

கொடைக்கானலின் அழகையும் கொரியாவின்பிரமாண்டத்தையும் பிரசன்னகுமாரின் ஒளிப்பதிவில் பார்க்கும்போது மனதுக்குள் புத்துணர்ச்சி ததும்புகிறது.

பாச உணர்வென்பது நாடு, மொழி, இனம், சாதி என எல்லாவற்றையும் கடந்து யார் மீது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதை உணர்வுபூர்வமான கதை மூலம் சொல்லியிருக்கிற இந்த படம், எதுமாதிரியும் இல்லாத புது மாதிரியான அனுபவங்களைப் பெற விரும்புகிறவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ்!

படம் இப்போது நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்க கிடைக்கிறது.

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்