ஆணவக் கொலைகள் எப்படியெல்லாம் நடக்கின்றன என்பதை பல படங்களில் பார்த்து விட்டோம்; இப்படிகூட நடக்கும் என்று காண்பித்து உயிரை உலுக்குகிறது வி ஆர் துதிவாணன் இயக்கியிருக்கும் இந்த ‘கொலைச்சேவல்.’
அனு தாய்மையடைந்திருக்கிறாள்; அவளுடைய கணவனின் குடும்பம் குலதெய்வ கோயிலுக்கு சென்று, சேவல் பலியிட்டு, பூஜை செய்து வர திட்டமிடுகிறார்கள். திட்டமிட்டபடி புறப்படுகிறார்கள்.
போகும் வழியில் அனுவுக்கு உடல் சோர்வு, மயக்கம் என்றெல்லாம் ஏற்பட, ‘வீட்டுக்கு திரும்பிப் போய்விடலாம்’ என்கிறாள் அவள். கணவனோ, ‘கோயிலுக்குத்தானே போகிறோம், எதுவும் ஆகாது’ என்று சொல்லி கூட்டிப் போகிறான்.
போன இடத்தில் பூஜை, பலியிடல், சமையல் என நடந்து கொண்டிருக்க, அந்த இடத்தை நோக்கி அனுவின் அப்பா முக இறுக்கத்துடன் வந்து கொண்டிருக்கிறார். பூஜை நடக்குமிடத்தில் ஒரு ஆசாமி, அனுவை கண்காணித்துக் கொண்டிருக்கிறான். அவனுடன் சில குடிகாரர்கள் சூழ்ந்திருக்கிறார்கள். அப்போதே ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பது புரிகிறது.
அதேபோல் நடக்கிறது. அந்த சம்பவங்கள் பயங்கரமாக இருக்க, அதற்கான காரணம் என்ன என்பதில் புதிதாய் ஏதுமில்லை. அதே சாதி வெறியர்களிடம் சிக்கிய காதலர்கள், ஆணவக் கொலை…
இன்னும் எத்தனை படங்களில்தான் இதே வேதனை நிகழ்வுகளைப் பார்க்க வேண்டியிருக்குமோ தெரியவில்லை?!
அனுவாக தீபா பாலு. அவரிடம் இயல்பிலேயே இருக்கிற முகப்பொலிவு தாய்மையடைந்திருக்கும் தருணத்தில் உருவாகிற பூரிப்புக்கு பொருந்திப் போகிறது. காதலிக்கும் நாட்களின் உற்சாகத்தையும், மனைவியானபின் கணவனின் அரவணைப்பு தருகிற சுகத்தையும் பிரதிபலிக்கும் விதம் அசத்துகிறது. கிளைமாக்ஸில் அவருக்கு நேர்கிற கொடூரத்தைக் கண்டால் கல்கூட கண்ணீர் விட்டு கதறும். கல்லாக நிற்கிற கடவுள் அத்தனை படுபாதகச் செயல்களையும் ஈவு இரக்கமின்றி பார்த்துக் கொண்டிருக்கிறது என்பது படத்தின் குறிப்பிடத்தக்க காட்சி.
இறந்துபோன அம்மாவிடம் பேசுவதற்கு அனுவின் சிம் கார்டை பயன்படுத்திக் கொள்ளும் ஆரம்பக் காட்சியே ‘அடடே’ என்கிற அளவுக்கு தனித்துவமாக இருக்க, பிரியமான காதலன், பாசமான கணவன் என தன் பங்களிப்பை கச்சிதமாக வழங்கியிருக்கிறார் கலையரசன். நிறைவுக் காட்சியில் அவர் அனுபவிக்கும் சித்திரவதைகளால் பரிதாபத்தைச் சம்பாதிக்கிறார்.
கலையரசனுக்கு நண்பனாக வருகிற பாலசரவணன் காமெடியில் கலந்திருக்கிறார்; கதையின் கனமான பகுதியில் அடிபட்டு மிதிபட்டு கவனம் ஈர்க்கிறார்.
அனுவின் அப்பாவாக கஜராஜும், அவரது சொந்த பந்தங்களாக வருகிறவர்களும் கொலைவெறியை கண்ணில், செயல்பாடுகளில் என எல்லாவிதத்திலும் காட்டியிருக்கிறார்கள்.
விஜய் சத்யா, ஆதவ் சந்திரா, அகரன் வெங்கட் என இன்னபிற கதாபாத்திரங்களில் வருகிறவர்கள் எப்படியான நடிப்பைக் கொடுத்தால் கேரக்டர் எடுபடும் என புரிந்து நடித்திருக்கிறார்கள்.
சாந்தனின் பின்னணி இசையில் நிரம்பியிருக்கும் மிரட்டல் ஹாரர் திரில்லர் படம் பார்ப்பது போன்ற உணர்வுக்குள் தள்ளுகிறது. பெரும்பாலான காட்சிகள் காட்டுக்குள்ளேயே நடக்க, காட்டின் பிரமாண்டத்தை, அதன் அடர்த்தி தருகிற பயத்தை, கற்களுக்கிடையில் சிலுசிலுவென ஒடிக் கொண்டிருக்கும் தண்ணீரை பல்வேறு கோணங்களில் பதிவு செய்திருக்கிறது பி ஜி முத்தையாவின் கேமரா.
சாதிவெறியர்களை எந்த சாமியாலும் எதுவும் செய்ய முடியாது என்பதை, ஆணவக் கொலைகளை எந்த ஆண்டவனாலும் தடுக்க முடியாது என்பதை பல படங்கள் எடுத்துக் காட்டியிருந்தாலும் இந்த படம் அளவுக்கு கொடூரமாக இதுவரை யாரும் காட்டியதாக தெரியவில்லை.
பார்ப்பது நிஜமல்ல, சினிமாதான் என்றாலும் கிளைமாக்ஸில் உங்கள் கண்களிலிருந்து ஒருதுளியாவது கண்ணீர் கசியவில்லை என்றால், உங்களிடமிருந்து மனித தன்மை முற்றிலுமாக விலகிவிட்டதோ என சந்தேகப்படலாம்.
‘இந்த மாதிரி படங்களையெல்லாம் ஏன் எடுக்கிறீர்கள்?’ என சம்பந்தப்பட்ட இயக்குநர்களிடம் கேட்டால், ‘நடந்ததை எடுக்கிறோம், நடப்பதைக் காட்டுகிறோம்’ எடுக்கிறோம் என்பார்கள். இப்போதைக்கு இதற்கு முற்றுப்புள்ளியே கிடையாது, ஒன்லி கமாதான்…
-சு.கணேஷ்குமார் 
