100 % ஹீரோயிஸம் + 100 % ஆக்ஷன் + 100 % பரபரப்பு = மார்க்.
முதலமைச்சரை அவரது மகன் கொல்கிறார். கொன்றவர், அடுத்த முதலமைச்சராகும் முயற்சியில் இறங்குகிறார். அவர் கொலை செய்ததை ஒருவர் தன் செல்போனில் வீடியோ எடுத்து வைக்க, வீடியோ எடுத்தவரின் சிறுவயது மகன் அந்த போனை கேம்ஸ் விளையாட பயன்படுத்துகிறான். அந்த போனுடன் அவனை ஒரு கும்பல் கடத்துகிறது. அவனோடு சேர்த்து இன்னும் 15 சிறுவர், சிறுமிகளும் கடத்தப்படுகிறார்கள். அவர்களை மீட்கவும் முதலமைச்சரை கொன்றவரை சட்டப்படி தண்டிக்கவும் களமிறங்குகிறார் போலீஸ் உயரதிகாரி மார்க்.
முதலமைச்சரைக் கொன்று ஒருவர் முதலமைச்சர் ஆவதற்கான முயற்சியில் இறங்குகிறார் என்றால் அவர் நிச்சயம் உலகமகா வில்லனாகத்தான் இருக்க முடியும். குழந்தைகளை கொத்துக் கொத்துக் கொத்தாக கடத்துகிறது என்றால் அந்த கும்பலின் நெட்வொர்க் நிச்சயம் பவர்ஃபுல்லாகத்தான் இருக்கும்.
அவர்களை மார்க் எப்படி நெருங்குகிறார்? அதற்கு முன் என்ன மாதிரியான பிரச்சனைகளைச் சந்திக்கிறார்? குழந்தைகளை எப்படி காப்பாற்றுகிறார்? முதலமைச்சரை கொன்றவரை தண்டிக்க முடிந்ததா? இந்த கேள்விகளுக்கான பதில்களாய் படத்தின் காட்சிகளை கட்டமைத்திருக்கிறார் ஏற்கனவே கிச்சா சுதீப்பை ஹீரோவாக்கி ‘மேக்ஸ்’ படத்தை இயக்கிய விஜய் கார்த்திகேயா.
மார்க்’காக வருகிற கிச்சா சுதீப்புக்கு போலீஸ் அதிகாரிக்கான கடமையை சஸ்பென்ஸனில் இருந்துகொண்டே செய்கிற வேலை. கெட்டவர்களிடம் திமிரையும் தெனாவட்டையும் கலந்து காட்டும் ஸ்டைலான உடல்மொழி ரசிக்க வைக்கிறது. நூறு பேரை ஒரே நேரத்தில் அடித்து துவம்சம் செய்தாலும் ஏற்றுக்கொள்ள முடிகிறது. அப்படி ஆக்சனில் தீயாக தெறிக்க விடுகிறவர், கடத்தப்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடித்து மீட்கும் பொறுப்பில் வேறொரு பரிமாணத்துக்கு தாவுகிறார். பாடல் காட்சிகளில் ஆடும் ஆட்டம் ஆடியன்ஸின் உற்சாகத்துக்கு உத்தரவாதம்.
பார்வையில் உக்கிரம், செயல்பாடுகளில் வெறித்தனம்; பேச்சில் ஆவேசம் என மிரட்டியிருக்கிறார் வில்லனாக வருகிற நவீன் சந்திரா. அரசியல்வாதியாக களமாடி முதலமைச்சரைக் கொல்கிற ஷைன் டாம் சாக்கோவின் வில்லத்தனம் ஹைஃபை ரகம்.
குரு சோமசுந்தரத்தை மாபெரும் கேங்ஸ்டராக காட்டுகிறார்கள். காட்டிய அளவுக்கு அவர் பெரிதாய் ஏதும் செய்யவில்லை. குழந்தைகளைக் கடத்தி ஹீரோவுக்கு பி பீ ஏற்றுகிற வேலையை தன்னால் முடிந்தளவு வீரியமாக செய்திருக்கிறார் விக்ராந்த்.
யோகிபாபு இருந்தாலும் காமெடிக்கு பஞ்சம்தான். கதைக்கு அது அவசியமும் இல்லை.
ஹீரோவுடன் இணைந்து பணியாற்றுகிற காவல்துறை அதிகாரியாக தீப்ஷிகா. அவரது நடிப்பைவிட அழகு கவர்கிறது.
ரோஷ்னி பிரகாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், அர்ச்சனா கோட்டி, ட்ராகன் மஞ்சு, கோபால்கிருஷ்ணன் தேஷ்பாண்டே என மற்றவர்கள் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு தேவையானதை செய்திருக்கிறார்கள்.
மஸ்த் மலேக்கா பாடலுக்கு கிச்சா சுதீப்புடன் ஆடும் நிஷ்விகா நாயுடு காட்டும் கவர்ச்சியும் அங்க அசைவுகளும் கிறக்கம் தராமல் விடாது.
கதையின் விறுவிறுப்பான சம்பவங்கள் நடக்கும் இடங்களின் பிரமாண்டத்தை பலமடங்காக்கி படத்தின் தரம் உயர பங்களித்திருப்பவர் ஒளிப்பதிவாளர் சேகர் சந்துரு.
அஜனீஸ் லோக்நாத் ‘மஸ்த் மலேக்கா, ‘அண்ணாத்த யார் தெரியுமா? பாடல்கள் தியேட்டரை வைப் மோடுக்கு கொண்டு போகின்றன. பின்னணி இசை மாஸ் ஆக்சன் மசாலா கதைக்களத்துக்கு பொருத்தம்.
கதை, திரைக்கதை பல படங்களில் பார்த்த நோ லாஜிக் ஒன்லி மேஜிக் ரகமாக இருந்தாலும் நடிகர்களின் பங்களிப்பு, செய்திருக்கும் செலவுகள், அசத்தலான மேக்கிங் ‘மார்க்’கிற்கு தாராளமாக மார்க் கொடுக்க வைக்கிறது!
-சு.கணேஷ்குமார்

