‘மீம் பாய்ஸ்’ வலைத் தொடர் (WebSeries) விமர்சனம்

மீம் பாய்ஸ்’ வலைத் தொடர் விமர்சனம்

மீம்ஸ் என்பது ஜாலிகேலி; கலகலப்பு கலாட்டா; வரிந்துகட்டி வெறுப்பேற்றல் என்பதையெல்லாம் தாண்டி அடக்குமுறைக்கு எதிரான புரட்சிக்கும் அஸ்திவாரம் அமைக்கும் என எடுத்துச் சொல்லும் வலைத் தொடர்.

கல்லூரியை கதைக்களமாகக் கொண்டிருப்பதால் சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சமில்லாத காட்சிகளால் கவனம் ஈர்க்கும் ‘மீம் பாய்ஸ்.’

அந்த கோ எட் கல்லூரியின் புதிய டீன், மாணவ மாணவிகள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை கடுமையாக வலியுறுத்துவதோடு, தான் சொன்னபடி நடக்கிறார்களா என கண்காணிக்கவும் செய்கிறார். ஸ்டூடண்ட்ஸ் படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாதபடி கட்டுப்பாடுகளைக் கொண்டு வருகிறார். அவரது செயல்பாடுகளால் எரிச்சலடையும் சிலர் மீம் பாய்ஸ் என்ற பெயரில் ரகசியக் குழுவாக இணைந்து, மீம் வீடியோ உருவாக்கி சம்பந்தப்பட்ட டீனை கிண்டல் கேலிகளால் சம்ஹாரம் செய்கிறார்கள்.

கொதித்துக் கொந்தளிக்கும் டீன், மீம் பாய்ஸ் யார் என கண்டறிய முயற்சிக்கிறார். அதற்காக பெரியளவில் செலவும் செய்கிறார். என்னதான் அவர்களை சுற்றிவளைத்து அடக்கி ஒடுக்கினாலும் ஏதோ ஒரு ரூட்டை பிடித்து மீம் மூலம் வேட்டு வைப்பது தொடர்கிறது.

வெறுப்பின் உச்சத்துக்குப் போய் வெறியேறும் டீன், மீம் பாய்ஸுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் எந்த லெவலுக்கு போகிறது என்பதும், அதையெல்லாம் மீம் பாய்ஸ் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுமே திரைக்கதை…

மீம் பாய்ஸுக்கு மீம் போட்டு டீனின் சர்வாதிகாரத்தை சரிப்பது குறிக்கோள் என்றால், மீம் போட்டியில் பத்து லட்சம் வெல்வது லட்சியம்… தொடரின் அத்தியாயங்களில் பரபரப்பும் விறுவிறுப்பும் கூட வேறென்ன வேண்டும்?!

அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்காமல் புதிதாய் ஒரு விஷயத்தைக் கருவாக்கி, அதை ஓ.டி.டி. ரசிகர்களுக்கு ஏற்றவிதத்தில் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அருண் கெளசிக். வெல்டன்!

’96’ படத்தில் இளவயது விஜய் சேதுபதியாக நடித்து கவனம் ஈர்த்த ஆதித்யா பாஸ்கர் இந்த படத்தில் மீம் பாய்ஸ் டீமுக்கு கேப்டன். ‘தோற்றத்தில் அப்பாவி, செயல்களில் அடப்பாவி’ என வெரைட்டி காட்ட வேண்டிய சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பால் ஈர்க்கிறார்.

வறட்டுக் கெளரவம், முரட்டுப் பேச்சு, முறுக்கேறிய மீசை, விரைப்பேறிய நடை என தொடர் முழுக்க கெத்தாக திரிகிற குரு சோமசுந்தரத்தின் பாத்திரப் படைப்பும், அவரது நடிப்புப் பங்களிப்பும் பக்கா!

மீம் பாய்ஸ் டீமில் ஒட்டிக் கொள்கிற, வெயிலுக்கு வெள்ளையடித்தாற்போல் பளீர் தோற்றத்திலிருக்கிற, அம்ரிதாவின் அளவான நடிப்பும் நேர்த்தி.

மீம் பாய்ஸ் டீமில் மாணவியொருவர் சேரும்போது, காதல் கீதல் என கதையின் போக்கு திசை திரும்பி ‘டூயட் பாட்டு – கோயில் குளத்தில் ரகசியமாய் தாலியைக் கட்டு’ என்றெல்லாம் தடம்மாறி தடதடக்குமோ என மனதில் படபடப்பு கூடுவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால், திரைக்கதை அப்படியான வழக்கமான பாதையில் வழுக்கி விழாமலிருப்பது ஆறுதல்!

எவர் எத்தனை எரிச்சலூட்டினாலும் கோபித்துக் கொள்ளாத கதாபாத்திரத்தில் ‘படவா’ கோபி. டீனிடம் அவர் காட்டும் அடக்க ஒடுக்கத்தைப் பார்க்கும்போது ‘இந்த மனுஷன் பின்னாடி பெருசா ஏதாச்சும் ஆப்பு வைப்பார்’ என்ற எதிர்பார்ப்பு வருகிறது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமில்லை!

மீம் பாய்ஸ் டீமிலிருக்கிற சித்தார்த், ஜெயந்த், பியூனாக வருகிற ஆஜானுபாகு ஆசாமி, ஹாஸ்டல் வார்டன் என இன்னபிற கேரக்டர்களுக்கான நடிகர், நடிகை தேர்வும், அவர்களின் நடிப்பும் கச்சிதம்.

இணைய சேவையை முடக்கியபோதும் மீம் பாய்ஸ் தங்கள் இலக்கை அடைவதற்கான குறுக்கு வழியை யோசிப்பது,

மீம் பாய்ஸ் மீம் போட்டு கேன்டீன் முதலாளிக்கு ஆப்பு வைப்பது, அதற்கு பிராயசித்தமாய் அவர்களே ஹாஸ்டலுக்கு வெளியே அவருக்கு மொபைல் டீ ஸ்டால் அமைத்துக் கொடுப்பது, அதற்கு பெரும்பாலான நேரங்களில் அவர்களே கஸ்டமர்களாவது,

ஒருவர் தாராளமாய் நுழைந்து போய்வரும்படி இடிக்கப்பட்ட சுற்றுச் சுவரையும் கதாபாத்திரமாக்கியிருப்பது என தொடரில் குட்டிக் குட்டி சுவாரஸ்யங்கள் தாராளமாய் ஏராளமாய்!

இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் சங்கதிகள் நிறைவு!

மீம் பாய்ஸைக் கண்டுபிடிக்க டீன் குரு சோமசுந்தரம், வானுக்கும் பூமிக்கும் சேட்டிலைட் விடுவது தவிர மற்ற அத்தனை வழிகளையும் யோசிக்கிறார். மீம் பாய்ஸ் ஆங்காங்கே கூடிப் பேசுகிறார்கள். டீ சாப்பிட சேர்ந்தே போகிறார்கள். கல்லூரி – ஹாஸ்டல் வளாகத்தில் திரும்பிய திசையெல்லாம் சிசிடிவி.க்கள் கண்விழித்துக் காத்திருக்கின்றன. அவற்றில் ஒன்றில் கூடவா அவர்கள் சிக்கவில்லை? இப்படி லாஜிக் பார்த்து நம் மூளை எழுப்பும் சிலபல கேள்விகளை மூட்டை கட்டி மூலையில் எறிந்துவிட்டால் மீம் பாய்ஸோடு மிங்கிள் ஆவதில் சிரமமிருக்காது.

நிறைவாக ஒரு வரி… இளைய தலைமுறையின், இணைய‘ தலைமுறையின் பொழுதுபோக்குக்கு மீம் பாய்ஸ் நல்ல சாய்ஸ்!

எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த வலைத் தொடர் சோனி லிவ் (Sony Liv) ஓ.டி.டி. தளத்தில் ஜூலை 22-லிருந்து காணக்கிடைக்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here