மிராய் சினிமா விமர்சனம்

ஆன்மிக சாகசங்கள், அதிரடி சம்பவங்கள் கலந்துகட்டி பக்திப் பரவசமூட்டும் ‘மிராய்.’

பகவான் ராமருடைய சக்தியடங்கிய ஒன்பது புத்தகங்கள் வெவ்வேறு நாடுகளில் வெகுகாலம் முன் கொண்டு சேர்க்கப்படுகின்றன. அதை இந்த காலத்தில் ஒருவன் கைப்பற்றி, கடவுள் இல்லா உலகத்தை உருவாக்கி, சர்வாதிகார ஆளுமையாக மாற முயற்சிக்கிறான். அதை தடுக்க தெய்வீகசக்தி கொண்ட சூப்பர் யோதாவான வேதா களமிறங்குகிறான். அசுர சக்தி படைத்தவனும் ஆன்மிக அருளாசி பெற்றவனும் ராட்சசத்தனமாக மோதுகிறார்கள். கெட்டவன் வீழ்த்தப்படுவதுதான் கிளைமாக்ஸ். எப்படி வீழ்த்தப்படுகிறான் என்பது திரைக்கதையிலிருக்கும் பரபரப்பான அத்தியாயங்கள். மிராய் என்ற ஆயுதம் ராமரின் வில்லாக மாறுகிற தருணம் ஆன்மிக நம்பிக்கையுள்ளவர்களுக்கு சிலிர்ப்பு தராமல் விடாது… இயக்கம் கார்த்திக் கட்டம்னேனி

அப்பாவி போல் சுற்றித் திரிகிறபோது ஒரு விதமாகவும், மிராய் என்ற ஆயுதத்தை கைவசப்படுத்தியபின் சக்தி வாய்ந்த நபராக இன்னொரு விதமாகவும் நடிப்பில் வெரைட்டி காட்டியிருக்கும் கதைநாயகன் தேஜா சஜ்ஜா, ஆக்சன் காட்சிகளில் திரையரங்கு அதிரும்படி தெறிக்க விடுகிறார்.

கதைநாயகனின் அம்மா என்றாலும் அவனை பெற்றெடுத்ததுமே அவனை உலகத்துக்கு அர்ப்பணித்து விலகிக் செல்கிற ஸ்ரேயா சரணின் நடிப்பு நெகிழச் செய்கிறது.

அகத்திய முனிவராக வருகிற ஜெயராம், தேஜா சஜ்ஜாவுக்கு அவர் யார் என்பதை, எதற்காக பிறவியெடுத்திருக்கிறார் என்பதை, அவரது அம்மாவைப் பற்றியெல்லாம் எடுத்துச் சொல்லி கெட்டவனை அழிப்பதற்கு வழிகாட்டும் கடமையை கச்சிதமாக செய்திருக்கிறார். தேஜாவை அவர் புரோ என்றழைப்பதெல்லாம் சுவாரஸ்யம்.

‘பிளாக் ஸ்வோர்டு கிளான்’ என்ற பெயரில் அசுர சக்தி படைத்தவனாக வருகிற மஞ்சு மனோஜின் செயல்பாடுகளும் சண்டையிடும் விதமும் மிரட்டுகிறது.

வெறுமனே கட்டித்தழுவி, பாடல் காட்சியில் ஆடிவிட்டுப் போவதுபோல் இல்லாமல், கதைநாயகனின் பலத்தை புரிய வைத்து அவனை சூப்பர் யோதாவாக மாறுவதற்கு உந்தித் தள்ளுகிற கனமாக கேரக்டரில் ரித்திகா நாயக் தந்திருக்கும் நடிப்பும் அவரது அழகும் கவர்கிறது.

ஜெகபதி பாபுவுக்கும் கெத்தான கதாபாத்திரம். அதை சரியான மீட்டரில் செய்திருக்கிறார்.

பின்னணி இசை, கலை இயக்குநரின் பங்களிப்பு படத்தின் பலம்.

பல நாடுகள், பனிக் கட்டி சூழ்ந்த மலைகள் என வேறொரு உலகத்துக்கு கூட்டிப்போவது போன்ற காட்சியமைப்புகளை தன் ஒளிப்பதிவால் தன் படத்தை மெருகேற்றியிருக்கிறார் படத்தை இயக்கியிருக்கிற கார்த்திக் கட்டம்னேனி.

ஆன்மிக அற்புதங்களை சுற்றிச் சுழல்கிற, அதிரடி சாகசங்களுக்குப் பஞ்மில்லாத  கதையில் உருவான இந்த மிராய் ஃபேண்டஸி பட விரும்பிகளுக்கு நிச்சயம் திருப்தி தரும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், எடுத்ததுக்கெல்லாம் லாஜிக் பார்ப்பவர்களுக்கு அதிருப்தி தரலாம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here