யோலோ சினிமா விமர்சனம்

தமிழ் சினிமாவில் எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான கதை எப்போதாவது எட்டிப் பார்க்கும். இப்போது ‘யோலோ.’

திருமண வயதிலிருக்கும் அந்த பெண்ணை பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள். வந்தவர்கள் அவளைப் பார்த்ததும், அவளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்கிறார்கள். அதிர்ச்சியடையும் தேவிகாவும் அவரது பெற்றோரும் அதை மறுக்கிறார்கள். அலசி ஆராய்ந்தால், தேவிகாவுக்கும் யூ டியூப் சேனல் நடத்துகிற இளைஞனுக்கும் திருமணமானது உறுதியாகிறது. கதை இப்படி அதிரிபுதிரியாய் துவங்க,

திருமணமான விஷயம் அவளுக்கு மட்டுமல்ல; அவளை மணந்த இளைஞனுக்கும், அவர்களைச் சார்ந்த யாருக்கும் தெரியவில்லை என்பது கதையிலிருக்கிற அடுத்தகட்ட அதிர்ச்சி.

அப்படியொரு திருமணம் எப்படி நடந்திருக்கும்? இந்த மண்டையைக் குழப்பும் கேள்விக்கு பதில் சொல்கிறது ‘யோலோ’வின் திரைக்கதை…

நாயகி தேவிகா இளமையாக, அழகாக இருக்கிறார். அவர் பேசுவது அவருக்கே கேட்குமா என்பது சந்தேகம். அத்தனை இதமாக பேசுகிறார். தனக்கு நடந்த திருமணம் தனக்கே தெரியாத குழப்பத்தை பிரதிபலிப்பது, தெரியாமல் நடந்த திருமணத்துக்கு விவாகரத்து கேட்டு மன உளைச்சலுக்கு ஆளாவது, விவாகரத்து பெற்றபின் யாரிடமிருந்து விவாகரத்து பெற்றாரோ அவர் மீது காதல் வயப்பட்டு நிற்பது என உணர்வுகளின் கலவையாக களமாடியிருக்கிறார்.

இளமையான தேவிகாவுக்கு அதே அளவு இளமையான தேவ். ஜோடிப் பொருத்தம் அசத்துகிறது. தேவைக்கு அதிகமில்லாத நடிப்பும் கவர்கிறது.

எனக்கு எதுவாக இருந்தாலும் செகன்ட் ஹாண்ட்தான் செட்டாகும் என்று சொல்லிக் கொண்டு, கல்யாணமான தேவிகாவுக்கு டைவர்ஸ் வாங்கிக் கொடுத்து இரண்டாவதாக கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு செய்யும் அலப்பரைகளால் சற்றே கலகலப்பூட்டுகிறார் விஜே நிக்கி.

படவா கோபி, ஸ்வாதி நாயர், ஆகாஷ் பிரேம்குமார், பூஜா, கிரி துவாரகிஷ், யுவராஜ் கணேசன் என இன்னபிறர் கதையோடு கலந்து பயணித்திருக்கிறார்கள்.

சகிஷ்மா சேவியன் தந்திருக்கும் பின்னணி இசை காட்சிகளின் நகர்வுக்கு பலம் சேர்த்திருக்க, பாடல்கள் மனதில் பதிய மறுக்கிறது.

படத்தில் நடித்துள்ள அத்தனைப் பேரையும் அழகாக காண்பித்திருக்கிறது ஒளிப்பதிவாளர் சூரஜ் நல்லுசாமியின் கேமரா. காட்சிகளுக்கான பின்னணி எந்தபக்கம் திரும்பினாலும் பளீர் நிறங்களில் கலர்ஃபுல்லாக இருப்பதும் கண்களை குளிரச் செய்கிறது.

படத்தின் பெரும்பகுதியை என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்ற குழப்பத்தோடு படத்தின் பார்க்க வைத்து பின்னர் கதையை ஹாரர் ரூட்டில் செலுத்தி பரபரப்பு கூட்டியிருக்கிறார் இயக்குநர் சாம் எஸ்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here