மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனை, தனது ஆய்வு முயற்சிகளின் தொடர்ச்சியாக, டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவுக் குறைபாடுகள் பற்றி பல்வேறு ஆய்வுகளை கடந்த ஆண்டு மேற்கொண்டது.
பல்வேறு வயதினர் இடையே நீரிழிவு நோய்
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் 100 நோயாளிகளிடம் ஒரு சோதனை ஆய்வு செய்யப்பட்டது. அதில், பல வயதினரிடையே குறிப்பிட்ட போக்குகள் தென்படுகின்றனவா என்று ஆய்வு செய்யப்பட்டது.
இதைப் பற்றி, நீரிழிவு மருத்துவ நிபுணரான டாக்டர் மனோஜ் ஷா, “இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களிடம் டைப் 2 நீரிழிவு குறைபாடு 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இருப்பதைக் காணமுடிகிறது. அதாவது, அவர்களுடைய பெற்றோருக்கு இதே விதமான குறைபாடு கண்டுபிடிக்கப்பட்ட வயதுடன் ஒப்பிடும்போது, இவர்களிடம் நீரிழிவைச் சீக்கிரம் காண முடிகிறது. அவர்களுடைய உணவுப் பழக்கவழக்கமும் போதிய உடற்பயிற்சிகள் இல்லாமையுமே இதற்குக் காரணங்கள். எனவே வாழ்க்கை முறை மாற்றமே, இளம் வயதிலேயே நீரிழிவு நோய் வருவதை தடுப்பதற்கு முக்கியமாகும்” என்றார்.
பாத சிகிச்சைப் பிரிவு தொடங்குவதற்கான தேவை
நீரிழிவு சிகிச்சைக்காக வந்த நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், அவர்களில், 75 முதல் 80 சதவிகிதம் பேர் சரியான காலணிகளை அணிவதில்லை என்பது தெரியவந்தது. கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு, கை கால்களில் உள்ள நரம்புகளைப் பாதிக்கும், உள்ளே இருக்கும் திசுக்களைச் சிதைக்கும், அதன்மூலம், புண்கள் ஏற்படலாம். இந்த ஆய்வின் தொடர்ச்சியாக, மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் பாத சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. அதில், நீரிழிவு நோயாளிகளின் பாதங்கள் பரிசோதிக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய காலணிகளை அணிந்துகொள்ள பரிந்துரை சொல்லப்படுகிறது. இதன் மூலம், கால் புண்கள் ஏற்படுவதைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த முயற்சியைப் பற்றி நீரிழிவு மருத்துவ நிபுணரான டாக்டர் ரமணன், “சரியான காலணிகளை அணியவில்லை என்றால், கால்புண்கள் ஏற்படும். அவற்றுக்குச் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால், கால்களையே வெட்டி நீக்கவேண்டிய சூழல் ஏற்படலாம். எங்கள் பாத சிகிச்சை மையத்தில், பாதத்தை ஸ்கான் செய்யும் கருவி இருக்கிறது. அதன் அடிப்படையில், நோயாளிகள் என்னவிதமான காலணிகளை அணிய வேண்டும் என்பதற்கான பரிந்துரை வழங்கப்படும். மேலும், அவர்கள் எப்படித் தங்கள் பாதங்களைக் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லித் தரப்படும். நீரிழிவு நோயாளிகள் வருடந்தோறும், தங்கள் பாதங்களை ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் என்பதே எங்களுடைய பரிந்துரை” என்றார்.
நீரிழிவும் இதய நோய்களும் எம்.எம்.எம். மருத்துவமனை நீரிழிவு மருத்துவர்கள், டைப் 2 நீரிழிவு நோயாளிகள் மத்தியில் மேற்கொண்ட ஆய்வுகளின் படி, இவர்களுக்கு, கடுமையான சிறுநீரக பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிய வருகிறது.
நீரிழிவு நோயாளிகளிடம் கொழுப்பு அதிகமாக இருக்கும், உயர ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் ஆகியவை இருக்கும். இத்தகைய பாதிப்புகள் அனைத்தும் கூட்டாகச் சேர்ந்துகொள்ளும்போது, அவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம்.
நீரிழிவு குறைபாடானது, இதயத்துக்கு ரத்தம் செல்லும் தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தலாம். மேலும், அவர்களுக்கு இதயத்தில் பல்வேறு அடைப்புகள் ஏற்படலாம். ஆரம்ப நிலையில், இதற்கான எந்த விதமான அறிகுறிகளும் அந்த நோயாளிகளிடம் தெரியாது. பெரும்பாலான நீரிழிவு நோயாளிகளுக்கு வழக்கமான மாரடைப்பு ஏற்படுவதில்லை. மூச்சுவிடுவதில் சிரமமோ சோர்வோ கூட ஏற்படுவதில்லை.
சிறுநீரகம், இதயம் மற்றும் இனப்பெருக்க அமைப்பு ஆகியவற்றுடன் சர்க்கரை நோயை இணைப்பது குறித்து எம்.எம்.எம். இல் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறோம். இந்த கண்டுபிடிப்புகள் எதிர்காலத்தில் வெளியிடப்படும்.
சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் (ஐ.டி.எப்.) மதிப்பீட்டின்படி இந்தியாவில், 20 முதல் 79 வயது வரை உள்ளவர்களில், 2000ஆம் ஆண்டில் 3.26 கோடியாக இருந்த நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை, 2021இல் 7.4 கோடி உயர்ந்துள்ளது. 2045ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 12.4 கோடியைத் தொடக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், 2021 மதிப்பீட்டின் படி, இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில், 53 சதவிகிதம் பேருக்கு நீரிழிவு குறைபாடு இருப்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.