பாலியல் தொழிலில் தள்ளப்படும் ஒரு இளம்பெண்ணிற்கும் அவளின் பத்து வயது மகனுக்குமான பாசப் போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் படம் ‘மாலைநேர மல்லிப்பூ.’
21 வயதேயான சஞ்சய் நாராயணன் இயக்கத்தில் முழுக்க புதுமுக நடிகர் நடிகைகள் நடித்துள்ள இப்படம், பாலியல் தொழிலாளர்களுக்கும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கும், அவர்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும், சக பாலியல் தொழில் செய்யும் தோழிகளுக்கும் இடையே உள்ள உறவையும் மிக ஆழமாக பேசுகிறது.
பிரபல தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் வினித்ரா மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரம் அஸ்வின் பத்து வயது மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாய்து டோர்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஹர்திக் சக்திவேல் இசையமைத்திருக்கிறார். விஜயலெட்சுமி நாராயணன் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இயக்குநர் வசந்த் கலந்து கொண்டு பேசும் போது, “இந்தப் படத்தோட இயக்குநர் சஞ்சய் நாராயணன் 21 வயசுலயே நினைக்க முடியாத ஒரு சப்ஜெக்ட பர்ஸ்ட் படத்துல எடுத்ததுக்காகவே கை தட்டலாம். என்னோட கேளடி கண்மணி படத்துக்கு ஆனந்த விகடன்ல அப்ப துணை ஆசிரியராக இருந்த மதன் சார் விமர்சனத்துல ஒரு வரி எழுதி இருந்தாரு. “ஒரு குழந்தை டிராக்டர் ஓட்டுகிறது” அப்டின்னு. எனக்கு அப்ப அது புரியல.. ஏன் சார் அப்டி எழுதியிருக்கீங்கன்னு கேட்டேன்.. அப்ப அவரு சொன்னாரு, மத்த வண்டியெல்லாம் ஓட்டிரலாம். டிராக்டர் ஓட்டுறது ரொம்ப கஷ்டம். அதனால தான் அந்தப் பாராட்டுன்னு சொல்லிருந்தாரு. அந்தப் பாராட்டு இந்தப் படத்துக்கும் பொருந்தும்னு நினைக்கிறேன். நான் இன்னும் முழுப் படமும் பார்க்கவில்லை. ஆனாலும் இங்கு காட்டிய சின்ன சின்ன க்ளிப்ஸ் பார்க்கும் போது முதல் பட இயக்குநர் போலத் தெரியவில்லை. பல படங்களை எடுத்த அனுபவமிக்க இயக்குநர் எடுத்த மற்றொரு படம் போலத்தான் இது இருக்கிறது” என்று பேசினார்.
’நெடுநல்வாடை’ பட இயக்குநர் செல்வக்கண்ணன் பேசும் போது, “அனைவருக்கும் வணக்கம், இந்தப் படத்தோட கிளிப்பிங்க்ஸ் விஷ்வல்ஸ் பார்க்கும் போது ரொம்ப சர்ப்ரைஸ் ஆக இருந்தது. நிச்சியமாக இளம் இயக்குநர் சஞ்சய் நாராயணனிடம் நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை. ஏதாவது ஒரு சப்ஜெக்ட் எடுத்துக்கிட்டு அதை ஒரு உப்புமா படம் போல பல பேர் எடுத்து வைப்பாங்க… ஆனா இந்தப் படம் அப்டி இல்லை. டெக்னிக்கலாவும் நல்ல ஸ்டிராங்கான படமாத் தெரியுது. அம்மாவுக்கும் பையனுக்குமான உறவை சொல்லுகிற படத்தை இயக்குநரின் அம்மாவே தயாரித்து இருக்கிறார். இயக்குநர் மிகவும் அதிர்ஷ்டசாலி” என்றார்.
படத்தின் இயக்குநர் சஞ்சய் நாராயணன் பேசும்போது, “ இது ஒரு சின்ன படம். ரொம்ப ரொம்ப சின்னப் படம். இதற்கு உங்கள் ஆதரவை கொடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்” என்று பேசினார்.
இயக்குநர் சுப்ரமணிய சிவா பேசும் போது, “ஊரில் ‘டேய் இதெல்லாம் சின்னப் பசங்க பாக்குற வேலையாடா..? என்று பேசுவார்கள். ஆனால் இது போன்ற படங்களை சின்ன வயதில் தான் எடுக்க வேண்டும். ஏனென்றால் சின்ன வயதில் காமம் காதல் வந்தால் தான் அது சரி. ஒரு வயதுக்கு மேல் காதல் காமம் வந்தால் அது மனநோய். ஆக இது தான் காதல் மற்றும் காமத்திற்கான வயது. எனவே அந்த வயதிற்கான படத்தையே சஞ்சய் நாராயணன் எடுத்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் ஒரு இலட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். இந்தியாவில் 30 இலட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக புள்ளியல் விவரம் கூறுகிறது. இதற்கு முழுக் காரணம் வறுமை. இதனால் பாதிக்கப்படும் ஆண் வன்முறையை நோக்கியும் பெண் பாலியல் தொழில் நோக்கியும் போகிறாள். பாலியல் தொழில் என்பது ஆதித் தொழில். பைபிளில் இது குறித்த கதைகள் இருக்கின்றது. நம்முடைய தமிழ் புராணமான சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி கதாபாத்திரம், புகார் நகரில் இருந்த பெரிய பாலியல் தெருக்கள் போன்ற குறிப்புகள் எல்லாம் நாம் அறிவோம். ஆக அப்போது இருந்த ஒரு ஆதித் தொழில் இன்றைய 5G யுகத்தில் எப்படி இருக்கிறது என்பதைத் தான் இயக்குநர் கூறியிருக்கிறார். ஒவ்வொரு சமூகத்திலும் தாய் என்பவள் மிகவும் வலிமையானவள்; அவளை நாம் அடக்கித் தான் வைத்திருக்கிறோம். அவள் தாயோ, மனைவியோ, மகளோ, தோழியோ நாம் அடக்கித் தான் வைத்திருக்கிறோம். இப்படத்திலும் அப்படித்தான் வலிமையான தாய் தன் மகனின் சிறந்த எதிர்காலத்திற்காக எப்படி போராடுகிறாள் என்பதே கதை. சிலப்பதிகாரத்தில் மாதவியும் தன் மகள் மணிமேகலைக்கும் அதையேதான் செய்தாள். ஆக பாதிக்கப்படும் பெண்களின் சார்பாக பேச வேண்டியது ஒரு எழுத்தாளனின் ஒரு படைப்பாளியின் கடமை. அந்த கடமையை நிறைவேற்றும் படைப்பாகத்தான் இப்படம் இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த இயக்குநரின் முதல் படத்திலேயே இவரின் புத்திசாலித்தனம் தெரிகிறது. இதனை பணமாக மாற்ற வேண்டும். அரசு கல்லூரிகள் இருக்கும் வரை மாணவர்களிடம் போராட்டக் குணமும், சமூக அக்கறையும் இருந்தது. ஆனால் எப்பொழுது இன்ஜினியரிங் கல்லூரிகளாக அவை மாறியதோ அப்போதே அவர்களிடம் போராட்டக் குணம், சமூக அக்கறை போன்றவை தொலைந்து போய் காசு சேர்க்கும் ஆசை மட்டுமே எஞ்கி இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். இந்த இயக்குநர் தாயின் பிள்ளையாக இருப்பதால் இவர் மனித நேயத்தோடு தான் படம் எடுத்திருப்பார். இப்படம் நிச்சயமாக பேசப்படும் என்று நம்புகிறேன். இப்படத்திற்கும் இப்படக் குழுவினருக்கும் மிகப் பெரிய வாழ்த்துக்கள்.” என்றார்.

