‘சேத்துமான்‘ சினிமா விமர்சனம்
தனித்துவமான படங்களைத் தந்து கவனம் ஈர்க்கிற இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் அடுத்த தரமான படைப்பு.
முன்னணி நடிகர், நடிகைகள் – டூயட் பாட்டு, அதிரடி ஆக்ஷன் காட்சி என கமர்சியல் அம்சங்கள் எதுவுமில்லாமல் கதையம்சத்தாலும் உருவாக்கத்தாலும் ரசிக்க வைக்கிற படங்களின் வரிசையில் சேர்ந்திருக்கிற ‘சேத்துமான்.’
எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘வறுகறி‘ என்ற கதையே சேத்துமானாய் திரைமொழி பேசுகிறது!
அந்த கிராமத்தில் வசதியான வீடு, நிலபுலன் என செல்வாக்குடன் இருக்கிற அந்த நடுத்தர வயது மனிதர் தன் நண்பர்களுடன் சேர்ந்து அரட்டையடிப்பது, குடிப்பது என ஜாலியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார். சகோதரருடன் பங்காளிச் சண்டை அவரது பகுதி நேர பொழுதுபோக்கு. அந்த மனிதருக்கு சேத்துமான் (பன்றி) கறி சாப்பிட ஆசை வருகிறது. அதற்காக பத்துப் பனிரெண்டு பேரை கூட்டு சேர்க்கும் முயற்சியில் இறங்குகிறார். ஆளுக்கு ஒரு தொகை போட்டு ஒரு சேத்துமானை வாங்கி சமைத்து, சரக்கோடு சாப்பிட்டு சந்தோஷத்தில் மிதப்பது அவரது திட்டம். அந்த திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் இறங்கும் அவர் சந்திக்கும் சவால்களே சேத்துமானின் திரைக்கதை…
இந்த சற்றே வித்தியாசமான கதையில் சாதிய ஏற்றத்தாழ்வு, உணவு விஷயத்தில் மக்கள் மீது திணிக்கப்படுகிற அரசியல் என சிலபல சங்கதிகளை போகிறபோக்கில் போட்டுத் தாக்கியிருப்பது சாமர்த்தியம். இயக்கம்: தமிழ்
தாழ்ந்த சாதி, வறுமைச் சூழல், பிழைப்புக்கு மூங்கில் கூடை தயாரித்து விற்பது, செய்யும் தொழிலில் நேர்மை, பெற்றோரை இழந்த தனது பேரனிடம் பாசம் காட்டுவது, பேரனுக்காக வேடமிட்டு குடிசைக்குள்ளேயே கூத்து நடத்துவது என தான் ஏற்ற பாத்திரத்தின் கனம் உணர்ந்து இயல்பாக நடித்திருக்கிறார் பெரியவர் மாணிக்கம்.
கறியைப் பங்கிட்டுக் கொள்ள ஆள் சேர்ப்பதற்காக ஒவ்வொருவராகச் சந்தித்து ஆசையைத் தூண்டிவிடுவது, சைவம் சாப்பிட்டு வளர்கிற சேத்துமானைத் தேடி இரவு பகலாக அலைவது, மனைவியின் எதிர்ப்பைச் சமாளிப்பது, சகோதரனுடன் பகை என தான் வருகிற காட்சிகள் அனைத்தையும் நேர்த்தியான நடிப்புப் பங்களிப்பால், வசன உச்சரிப்பால் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார் பன்னாடியாக வருகிற பிரசன்னா!
பேரனாக வருகிற அஸ்வினின் குழந்தைத்தனம் கவர்கிறது.
தான் பணிபுரியும் பள்ளியில் ஏற்றத்தாழ்வு பார்க்கும் ஆசிரியர், சேத்துமான் கறிக்காக தரை லோக்கலாக இறங்குவது கதையோட்டத்திலிருக்கும் தரமான சம்பவம்!
கணவர் சேத்துமானுக்காக நாயாய் அலைவதைப் பார்த்து முகம் சுளித்து எரிந்து விழுகிற அந்த மனைவி கதாபாத்திரம் ரசனைக்கு விருந்து!
சேத்துமான் வளர்க்கப்படும் இடங்கள் எப்படியெல்லாம் இருக்கின்றன என்பதைக் காட்டுவதாகட்டும், சேத்துமானை கொல்வதில் கையாளப்படும் வழிமுறைகளை காட்சிப்படுத்தியிருப்பதாகட்டும் அத்தனையிலும் தெரிகிறது இயக்குநரின் மெனக்கெடல்!
பெரும் போராட்டங்களைச் சந்தித்து கறிவிருந்து தயாரான சூழலின் இனிமையை, ஆல்கஹால் ஆக்கிரமித்துக் கெடுக்கும் அத்தியாயங்கள் சமூகத்திற்கான விழிப்புணர்வுப் பாடம்.
பிந்து மாலினியின் இசையும், பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவும் படத்தின் பலம்!
படம் பார்க்கிற எத்தனை பேர் கிளைமாக்ஸை ஜீரணிப்பார்கள் என்பது மட்டும் கேள்விக்குறி!
திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுக்களையும் விருதுகளையும் குவித்துக் கொண்டிருக்கிற இந்த படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் மே 27-ம் தேதி வெளியாகிறது.