சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி, குப்பை அள்ளும் சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவன் ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகும் முயற்சியில் சந்திக்கும் பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து, அழகான ஸ்போர்ட்ஸ் டிராமாவாக உருவாகியுள்ள படம் ‘நாற்கரப்போர்.’
ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஸ்ரீ வெற்றி இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இறுகப்பற்று படம் மூலம் கவனம் பெற்ற நடிகை அபர்ணதி கதாநாயகியாக நடிக்க, படத்தின் மைய கதாபாத்திரமாக சேத்துமான் படத்தில் நடித்த அஸ்வின் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் காலா, கபாலி புகழ் லிங்கேஷ், வில்லனாக சுரேஷ் மேனன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படம் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.
இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் கடந்த ஜூலை 30-ம் தேதி நடந்தது.
நிகழ்வில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இந்த படத்தின் தயாரிப்பாளர் வேலாயுதம் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்ததற்காக நன்றி சொல்ல வேண்டும். இயக்குநரும் அந்த கதையை மிக நேர்த்தியாக செய்திருக்கிறார். அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
அபர்ணதி மிக சிறந்த நடிகை தான். ஆனால் என்ன வருத்தம் என்றால் அவர் இந்த விழாவிற்கு வரவில்லை. நடிகைகள் பிரமோசனுக்கு வர மாட்டார்கள் என்பது தமிழ் சினிமாவில் தொடர்ந்து இது ஒரு சாபக்கேடாகவே மாறிவிட்டது. அபர்ணதியை இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு அழைத்த போது அதற்கு தனியாக பணம் கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளரிடம் கேட்டுள்ளார். இது உண்மையிலேயே புதிதாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து நானே அந்த பெண்ணிடம் போன் செய்து பேசினேன். அப்போது இந்த நிகழ்ச்சிக்கு மூன்று லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே வர முடியும் என்று அவர் சொன்னதுடன் அவர் அமரும் மேடையில் அவர் அருகில் யார் யார் உட்கார வேண்டும் என்பது போன்று அவர் போட்ட நிபந்தனைகளை எல்லாம் சொன்னால் அது இன்னும் சர்ச்சையாக மாறிவிடும். ஆனால் இரண்டு நாட்கள் கழித்து அவரே போன் செய்து, ஸாரி சார்.. நான் தெரியாமல் பேசி விட்டேன். மன்னித்து விடுங்கள். நான் புரமோஷன் நிகழ்ச்சிக்கு வருகிறேன் என்று கூறினார். ஆனால் இன்று வரவில்லை. கேட்டதற்கு அவுட் ஆப் ஸ்டேஷன் என்று கூறி விட்டார்கள். தமிழ் சினிமாவிற்கு இப்படிப்பட்ட நடிகைகளே தேவையில்லை. அவர் அப்படியே அவுட் ஆப் ஸ்டேஷனிலேயே இருக்கட்டும். உள்ளே வர வேண்டாம். அதுதான் தமிழ் சினிமாவுக்கு நல்லது” என்றார்.
நடிகர் லிங்கேஷ் பேசும்போது, “இது முக்கியமான படம். பயங்கரமாக அரசியல் பற்றி பேசி இருக்கிறது” என்றார்.
இயக்குனர் சுப்பிரமணிய சிவா பேசும்போது, “சுரேஷ் காமாட்சி இயக்கிய மிக மிக அவசரம் படம் சின்ன படமாக இருந்தாலும் அதுதான் அதிக லாபத்தை கொடுத்த படம் என்று சொல்வார். அப்படி அதிக லாபத்தை கொடுக்கும் படம் பெரிய படம் ஆகிவிடுகிறது. அந்த வகையில் இந்த நாற்கரப்போர் படம் மிகப்பெரிய லாபகரமாக அமைய வேண்டும். சாதாரண மனிதர்கள் எல்லோருக்குமே அசாதாரண வாழ்க்கை தான் கிடைக்கும். இந்த உலகத்தில் ஏழைகள் தான் அதிகம் இருக்கின்றனர். அவர்களை முன்னேற விடமாட்டார்கள். தாங்களாகவே முன்னேறினால் தான் உண்டு. ஏழைகளின் முன்னேற்றத்திற்கு தான் கடவுள்கள் பாடுபட்டார்கள் என்றாலும் இப்போதும் அவர்கள் ஊரிலேயே இன்னும் ஏழைகள் தானே இருக்கிறார்கள். தனி மனிதனாக பார்த்து தான் முன்னேற வேண்டும்.
இங்கே பணக்காரர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக பணத்தை சேர்த்து வைத்து அவர்களை குட்டிச்சுவர் ஆக்கி விடுகிறார்கள். ஆனால் வெளிநாட்டில் அப்படி அல்ல.. அங்கே பணக்காரர்கள் பிள்ளைகளை விட இந்த சமூகத்திற்காக மிகப்பெரிய தொகையை ஒதுக்குகிறார்கள். அப்போதுதான் அவர்கள் மதிக்கப்படுகிறார்கள். கருப்பு வெள்ளை என இனியும் நாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். கள்ளுண்ணாமை என 3000 வருடத்திற்கு முன்பே எழுதியிருப்பதால் அப்போதிருந்தே குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இப்போது பார் சீன் வைத்து விட்டார்கள் என கத்துகிறார்கள். ஒரு படைப்பு என்பது அந்த சமூகத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்” என்றார்.
இயக்குநர் லெனின் பாரதி பேசும்போது, “விளையாட்டில் மட்டுமல்ல சமீப காலமாக கவனித்துப் பார்த்தால் கிரிக்கெட், புட்பால் வர்ணனை செய்வதில் கூட ஒரு குறிப்பிட்ட கூட்டம் தான் இருக்கிறது. அதில் கூட சாதி ஆதிக்கத்தை காட்டிக் கொண்டே இருக்கின்றனர். அப்படிப்பட்ட நிலையில் எங்களுக்கும் மூளை இருக்கிறது என்று ஒரு ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து ஒரு சிறுவனை கொண்டு வந்து இந்த படத்தை எடுத்திருப்பது ஜனரஞ்சகமாக இருக்கிறது” என்றார்.
நடிகர் கவிதா பாரதி பேசும்போது, “தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எந்த படத்தை வெளியிடுகிறாரோ அது நல்ல ஆழமான கருத்துள்ள படம் என்பது அடையாளமாகி விட்டது. நான் விஜய் டிவிக்காக சலனம் என்கிற தொடரை இயக்கிய போது அதில் என்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் லிங்கேஷ். அவர் பெரிய இயக்குனராக வருவார் என்று நினைத்தேன். நடிகராக மாறிவிட்டார்” என்றார்.
இயக்குநர் யுரேகா பேசும்போது, ‘மிக நுட்பமான சிறப்பான அரசியலை பேசும் ஒரு படமாக இந்த நாற்கரப்போர் இருக்கும் என நான் பார்க்கிறேன். துப்புரவு தொழிலாளர்களை முன்னிறுத்தி இந்த விளையாட்டுடன் இணைத்து இருப்பது பெருமையாக இருக்கிறது. குப்பை போடும் நாம்தான் குப்பைக்காரர்கள்.. அதை துப்புரவு செய்யும் நபர்கள் சுத்தக்காரர்கள். இந்தப் படத்தில் நடித்திருக்கும் அஸ்வின் திரையில் மட்டுமல்ல தரையிலும் இன்னும் எமோஷனலாககவே இருக்கிறான் என்றால் அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி உணர்ந்து அவன் நடிப்பதற்கு காரணமான இயக்குநர் தான். இந்த படம் தேசிய விருதுக்கான திரைப்படம். அப்படி இந்த படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்றால் தேர்வுக்குழுவில் ஏதோ குழப்பம் என்று தான் அர்த்தம்” என்றார்.
இயக்குநர் மீரா கதிரவன் பேசும்போது, “நாற்கரப்போர் என தமிழில் பெயர் வைத்ததற்கு நன்றி. தமிழில் பெயர் வைக்க மாட்டோம் என பலர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள். இங்கே முதல் படம் எடுக்க வருபவர்களுக்கு ஒரு பயம் இருக்கிறது. ஆனாலும் முதல் படத்திலேயே சமூக அக்கறை கொண்ட படமாக இதை எடுத்து இருக்கிறார்கள். சாராயக்கடை அருகிலேயே இருக்கும் இளநீர் கடைக்கும் ஒரு வியாபாரம் உண்டு என்பது போல, இங்கே எல்லா படைப்புகளுக்கும் ஒரு வியாபாரம் இருக்கிறது. எளிய மனிதர்கள் குறித்து வரக்கூடிய படங்களுக்கு இப்போது நல்ல கமர்சியல் வேல்யூ இருக்கிறது. சுரேஷ் காமாட்சி போன்ற தயாரிப்பாளர்கள் அபூர்வமானவர்கள். இந்த படத்தை அவர் வெளியிடுவதை வெற்றியாக பார்க்கிறேன். மற்ற திரையுலகங்களில் பெரிய படங்கள் வெளியாகும் போது அவற்றுக்கு இணையாக சின்ன படங்களும் வெளியாகும் ஆனால் துரதிர்ஷ்டவசமாக நம் தமிழ் திரை உலகில் அப்படி இல்லை. தேசிய விருது பற்றி எல்லாம் யோசிக்க வேண்டாம். மக்கள் தரும் விருதுதான் முக்கியம்” என்றார்.
இயக்குநர் அமுதகானம் ஆதவன் பேசும்போது, சமீப காலமாக தமிழ் சினிமாவில் தரமான படங்கள் வெளிவரவில்லை. அதை உடைத்து எறியும் விதமாக இந்த நாற்கரப்போர் வருகிறது” என்றார்.
நடிகை நமீதா, நமீதாவின் கணவர் வீரா, நடிகை கோமல் சர்மா உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.
நாற்கரப் போர்’ படக்குழு:- பிரபல மலையாள இயக்குனர் மேஜர் ரவியின் மகன் அர்ஜுன் ரவி இப்படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். சந்தோஷ் நாராயணனிடம் பல படங்களில் இணைந்து பணியாற்றிய தினேஷ் ஆண்டனி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரஞ்சித் சி கே என்பவர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.