பெரியதும் சிறியதுமாய் ஏழெட்டுப் படங்கள் வெளியாகும் நாளில், ‘சிங்கங்களுக்கு மட்டுமல்ல’ சிற்றெறும்புகளுக்கும் சொந்தம் காடு‘ என்று சொல்லி திரைக்கு வருகிறது ‘நெடுநீர்.’
கதைக்களம் கடல் சார்ந்த பகுதி என்பதால் ‘நெடுநீர்’ என்ற தலைப்பை சூட்டிக்கொண்டிருக்கிறது இந்த படம்!
கடலூரின் கடலோர கிராமம் ஒன்றில் அடிதடி, வெட்டுக்குத்து என கம்பீரமாக வலம்வருபவர் தாத்தா வயதிலிருக்கும் அந்த தாதா. பலராலும் அண்ணாச்சி என்றழைக்கப்படும் அவர், ஒரு இக்கட்டான சூழ்நிலைலில் கருப்பு என்ற இளைஞனுக்கு அடைக்கலம் தந்து அரவணைக்கிறார்.
அதற்கு நன்றிக்கடனாக ஏன் செய்கிறோம், எதற்கு செய்கிறோம் என்றெல்லாம் யோசிக்காமல், அண்ணாச்சிக்காக அத்தனை குற்றச் செயல்களிலும் ஈடுபடுகிறான் கருப்பு. தினமும் கத்தி, ரத்தம், கொலை என பயணிப்பவன் ஒரு கட்டத்தில் எல்லாவற்றிலிருந்தும் விடுபட விரும்புகிறான்.
அந்த விருப்பம் நிறைவேறியதா இல்லையா என்பது கிளைமாக்ஸ். இயக்கம்: கு.கி. பத்மநாபன்
அப்பாவி இளைஞன், தாதாவின் அடியாள் என ஏற்ற பாத்திரத்தில் சரியாகப் பொருந்துகிறார் ராஜ்கிருஷ்.
கிராமத்துப் பெண்ணாக இந்துஜா. அவரது வெள்ளந்திச் சிரிப்பு கவர்கிறது.
சத்யா முருகன், மதுரை மோகன் என இன்னபிற கதாபாத்திரங்களில் வருகிறவர்கள் அவரவர் கதாபாத்திரங்களுக்கு தேவையானதை செய்திருக்கிறார்கள்.
சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பு!
‘லைப் ஒரு லெசனு அத பயப்படாம லிசனு’ பாடல் கவனிக்கவும், ‘ஏராளம் தாராளம்’ பாடல் ரசிக்கவும் வைக்கிறது!