விளிம்பு நிலை மனிதர்களின் வலிகளை பிரதிபலிக்கும் படங்களின் வரிசையில் ‘நிறம் மாறும் உலகில்.’
ஒரு காதல் ஜோடி ஊரை விட்டு ஓடிப்போய், மும்பை தாதா ஒருவரிடம் சிக்குகிறார்கள். தாதா கை காட்டுகிற ஒருவரை கொலை செய்தால்தான் அங்கிருந்து அவர்களால் தப்பிக்க முடியும் என்கிற நிலைமை…
தன் தாய்க்கு நேர்ந்த பரிதாப முடிவால் கொலைகாரனாகி படிப்படியாக ஊரே பார்த்து நடுங்கும் தாதாவாக மாறிப்போன ஒருவர், தாய்ப் பாசத்தை பாலியல் தொழிலாளியிடமிருந்து எதிர்பார்க்கிற நிலைமை…
ஒரு அப்பா அம்மா பிள்ளைகளால் கைவிடப்பட்டு சாப்பாட்டுக்கு கூட வழியின்றி தவிக்கிற நிலைமை…
கல்லூரி மாணவன் ஒருவனுக்கு, தான் வசிக்கும் பகுதியின் ரவுடிப் பேர்வழி சொல்கிற பெரிய குற்றத்தைச் செய்தால்தான் கேன்சர் பாதித்த தன் அம்மாவை காப்பாற்ற முடியும் என்கிற நிலைமை…
ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தும் ஒருவருக்கு தன் அம்மாவைக் கழட்டி விட்டால்தான் காதலியை கல்யாணம் செய்து கொள்ள முடியும் என்கிற நிலைமை…
இப்படி சூழ்நிலைக் கைதியான மனிதர்களின் அடுத்தடுத்த நாட்கள் எப்படி நகர்கிறது என்பதே கதையோட்டம்…
ஊர் மக்களின் பயமுறுத்தலுக்கும் தாதாவின் மிரட்டலுக்கும் ஆளாகி அடிபட்டு ரத்தம் சிந்துகிற ரிஷிகாந்த் _ காவ்யா அறிவுமணி,
பாலியல் தொழிலாளியின் மடியில் படுத்தபடி தன் அம்மாவை நினைத்து கண் கலங்குகிற நட்டி நட்ராஜ்,
பிள்ளைகள் கைவிட்ட நிலையில் பரிதாபத்தின் உச்சத்துக்கு போகிற பாரதிராஜா _ வடிவுக்கரசி,
அம்மாவுக்காக கொலை செய்யத் துணிகிற ரியோராஜ், நண்பனின் அம்மாவை தன் அம்மாவாக நினைத்து பாசம் காட்டுகிற விக்னேஷ்காந்த்,
தன் ஆட்டோவில் பயணியாக வந்தவர் தன்னைப் போலவே உறவுகள் இல்லாதவர் என்பதை அறிந்து அவரை அம்மாவாக ஏற்றுக்கொண்டு அரவணைக்கிற, அந்த அம்மாவுக்காக காதலியை எதிர்க்கிற சாண்டி மாஸ்டர், அந்த அம்மாவாக துளசி,
அம்மாவிடம் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி, பயணத்தில் சந்தித்த ஒருவர் மூலம் பந்த பாச கதைகளைக் கேட்டு அம்மா மீதான கோபத்தை வாபஸ் பெறுகிற லவ்லின் சந்திரசேகேர், அவருக்கு அம்மாவாக (சொந்த அம்மா) விஜி சந்திர சேகர்,
லவ்லின் அம்மா மீதான கோபத்தை தூக்கியெறிவதற்கு காரணமாக இருக்கிற யோகிபாபு…
அத்தனை பேரின் நடிப்பிலிருந்தும் கதைக்குத் தேவையான பங்களிப்பு சரியாய் கிடைத்திருக்கிறது.
படம் முழுக்க சோகமும் அழுகையும் நிரம்பியிருக்க, அந்த மூடுக்கேற்ற பின்னணி இசையை தந்திருக்கும் தேவ்பிரகாஷ், ‘ரங்கம்மா’ பாடலில் உற்சாகத்தை பெருமளவில் ஏற்றியிருக்கிறார்.
மும்பை, மீனவ கிராமம், சென்னையின் பரபரப்பு என சம்பவங்கள் நடக்குமிடங்களை தங்கள் கேமரா பார்வையால் கதைக்கு நெருக்கமாக்கியிருக்கிறது மல்லிகா அர்ஜுனன், மணிகண்ட ராஜா கூட்டணி.
இயக்குநர் பிரிட்டோ ஜெ பி பிள்ளைகளுக்கும் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கும் இடையிலான பாசப் பிணைப்பை, அதிலிருக்கும் சிக்கல்களை மையப்படுத்திய கதைக்களத்தை கையிலெடுத்து சமூகத்துக்கு கருத்து புகட்ட நினைத்திருக்கிறார். அந்த கருத்துகள் ஏற்கனவே பலராலும் புகட்டப்பட்டவை என்பதை மறந்திருக்கிறார்.
-சு.கணேஷ்குமார்

