‘O2’ சினிமா விமர்சனம்

ஆபத்தில் சிக்கும் மனிதர்கள் உயிருக்குப் போராடும் கதை.

நயன்தாராவின் பிள்ளைக்கு மற்றவர்களைப் போல் இயல்பாக சுவாசிக்க முடியாத; ஆக்சிஜன் சிலிண்டரின் உதவியோடு மட்டுமே சுவாசிக்க முடியும் என்கிற அளவுக்கு சீரியஸான நுரையீரல் பிரச்சனை. அதற்கான சிகிச்சைக்காக தன் மகனுடன், ஆக்சிஜன் சிலிண்டருடன் கோவையிலிருந்து கேரளாவுக்கு பேருந்தில் பயணிக்கிறார் நயன்தாரா. அதே பேருந்தில் ஒரு அரசியல்வாதி, ஒரு காதல் ஜோடி, போதைப் பொருள் கடத்துகிற காவல்துறை உயரதிகாரி சிலரும் இருக்கிறார்கள். எதிர்பாராதவிதமாக பூகம்பத்துக்கு நிகரான மலைச்சரிவு ஏற்பட்டு பேருந்து மலைப் பாறைகளால் மண்ணால் மூடப்படுகிறது.

பாறைகளால் சிதைக்கப்பட்டு மண்ணுக்குள் புதையுண்ட அந்த பேருந்தில் சிக்கியவர்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட, நிலைமை விபரீதமாகிறது. ஒருசிலர் உயிரைவிடுகிறார்கள். எஞ்சியவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஆக்சிஜன் சிலிண்டரை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். உயிருக்குப் போராடும் அத்தனைப் பேரும் அந்த சிறுவனின் ஆக்சிஜன் சிலிண்டரை குறிவைக்க, அவர்களிடமிருந்து நயன்தாரா மகனை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே ‘O2’ வின் மிச்சசொச்ச கதை. இயக்கம்: புதுமுகம் ஜி.எஸ். விக்னேஷ்

‘சுவாசிக்க காற்றில்லாமல் போராடும் மனிதர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எந்த லெவலுக்கும் இறங்குவார்கள்’ என்ற சூழ்நிலையில், அவர்களிடமிருந்து தன் மகனைக் காப்பாற்றத் துடிக்கும் தாயாக பாத்திரத்தில் நயன்தாரா. பாத்திரத்தின் கனம் உணர்ந்து கச்சிதமான நடிப்பால் கவர்கிறார்.

யூ டியூபில் தன் அட்டகாச அலப்பறைகளால் உலகையே திரும்பிப் பார்க்கவைத்த / வைத்துக் கொண்டிருக்கிற சுட்டிக்குட்டி ரித்விக், அறிமுகப் படத்திலேயே சவாலான கதாபாத்திரத்தை ஏற்று அதற்கு உயிரூட்டியிருக்கிறான். அந்த குழந்தையின் நடிப்புக்கு பாராட்டாய் ஆயிரம் முத்தங்கள்!

ஆர்.என்.ஆர். மனோகர், கவிதா பாரதி, ஆடுகளம் முருகதாஸ், ஹலோ கந்தசாமி, சாரா என இன்னபிற பாத்திரங்களை ஏற்றிருப்போரின் நடிப்புப் பங்களிப்பும் நேர்த்தி!

பேரிடர் மீட்புக்குழுவின் தலைமையதிகாரியாக வருகிற அந்த பெண்மணியும் கவனம் ஈர்க்கிறார்.

நிலச்சரிவு, புதைமணல் என நீளும் காட்சிகளில் கலை இயக்குநரின் உழைப்பு தெரிகிறது. பாடல்களுக்கு மெல்லிசை, பதட்டச் சூழலுக்கு அதிர்வலை என மெனக்கெட்டிருக்கிறார் விஷால் சந்திரசேகர்.

உணர்வைத் தொடவேண்டிய காட்சிகளினிடையே குட்டிக்கதை சொல்வதெல்லாம் அலுப்பு தரும் அத்தியாயங்கள்.

உருவாக்கத்தில் சிலபல குறைகள் இருந்தாலும் தனது உயிருக்கு ஆபத்து எனும் சூழலில் மனிதர்கள் எப்படியெல்லாம் மாறுவார்கள் என காட்சிப்படுத்தியதில் யதார்த்தம் இருக்கிறது. அதை உணர்வதற்காகவே ‘O2’வை ஹாட்ஸ்டார் ஓடிடி.யில் சுவாசிக்கலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here