‘சுழல்’ இணையத் தொடர் விமர்சனம்

கிரைம் திரில்லர் ஜானரில் அமேசான் பிரைம் வீடியோவின் அட்டகாசமான இணையத் தொடர்!

அந்த சிமென்ட் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்படுகிறது. விபத்து எதனால்? யாரால்?

அதே தொழிற்சாலையின் தொழிற்சங்கத் தலைவரின் இளைய மகள் காணாது போகிறாள். அவளுக்கு?

அந்த ஊரில் பள்ளிப் பருவத்துக் காதல் ஜோடி கொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளி யார்?

இப்படி பல கேள்விகளை எழுப்பும் கதையும், விடைகளைத் தரும் திரைக்கதையுமாக சுற்றிச் சுழலும் ‘சுழல்.’

இரண்டு மகள்களுக்குத் தந்தை, கம்பீரமான தொழிற்சங்கத் தலைவர், போலீஸ் உயரதிகாரியிடம் மோதல், மனைவியிடம் கருத்து வேறுபாடு என வலம்வரும் பார்த்திபன்,

காவல்துறை உயரதிகாரியாக மிரட்டும் ஷ்ரேயா ரெட்டி,

சப் இன்ஸ்பெக்டராக கதிர்,

சிறுவயதில் ஏற்பட்ட மனக்காயங்களால் அழுத்தப்பட்டு அதன் நீட்சியின் வலிகளை அனுபவிக்கிற ஐஸ்வர்யா ராஜேஷ்,

எக்குத்தப்பான ஜோடியாக நிதீஷ் வீரா – லதாராவ்,

தீ விபத்து விசாரணை அதிகாரியாக சந்தானபாரதி,

அயோக்கியனைப் போல் வந்து வேறொரு முகம்காட்டுகிற ஹரீஷ் உத்தமன்… நீள்கிற நட்சத்திரக் கூட்டத்தில் அத்தனைப் பேரும் கதையைத் தூக்கிச் சுமக்கவைத்திருக்கிறது திரைக்கதை.
அப்படியும் இப்படிமாக வந்துபோகிற பாத்திரங்களைக் கூட கவனிக்க வைத்திருப்பது தனித்துவம்.

இயல்பான மனநிலை தொலைத்த மனிதர்களை கதாபாத்திரங்களாக்கி புஷ்கர் – காயத்ரி உருவாக்கிய படைப்பின் நீள அகல ஆழம் புரிந்து இயக்கியிருக்கிற இருவர் பிரம்மா – அனுசரண்.

ஒவ்வொன்றும் 45 நிமிடங்கள் என எட்டு எபிசோடுகள் ஓடும் இந்த இணையத் தொடரில் ஒவ்வொரு எபிசோடுகளிலும் வருகிற திருப்பங்கள் யூகிக்க முடியாதவை; ஆச்சரியத்தில் விழ வைப்பவை!

ஒன்பது நாட்கள் நடக்கும் மயானக்கொள்ளை திருவிழாவின் பிரமாண்ட ஆட்டம்பாட்ட ஆன்மிக கலை கலாசாரக் கூத்துக் கொண்டாட்டங்களை பின்னிப்பிணைத்து திரைக்கதையமைத்திருப்பது கதையை பொருத்தம்! அந்த காட்சிகளுக்கு சாம் சி எஸ்ஸின் பின்னணி இசை பலம்!

பரபரப்பும் விறுவிறுப்புமான கிரைம் திரில்லர் விரும்பிகளுக்கு சுழல் ஆறுமணி நேர அலுக்காத விருந்து!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here