‘ஓ மை டாக்’ சினிமா விமர்சனம்

ஓ மை டாக்‘ சினிமா விமர்சனம்

குழந்தைகள் சிரித்து ரசிக்க, குதித்துக் குதூகலமாக தமிழில் நிறைய பேய்ப் படங்கள் வருவதுண்டு. மாற்றாக சிந்தித்துச் சிறக்க, மனதளவில் சிறகடித்துப் பறக்க இதோ ஒரு நாய்ப் படம்!

நடிகர் விஜயகுமார் குடும்பத்திலிருந்து மூன்றாம் தலைமுறையாக அவரது பேரனும் நடிக்க வந்தது குறிப்பிடத்தக்க செய்தியென்றால், விஜயகுமார் – அவரது மகன் அருண்விஜய் – அருண்விஜயின் மகன் அர்னவ் விஜய் என மூன்று தலைமுறையும் சேர்ந்து நடித்திருப்பது, அதுவும் அதே உறவு முறையில் பாத்திரங்களை ஏற்றிருப்பது ஓ மை டாக் படத்தின் ஹைலைட்!

சதி செய்தாரை ஒறுத்தல் அவர்திருந்த
சாக்லேட் கொடுத்துவிடல். இதுதான் படத்தின் ஒன்லைன்!

சிறுவன் அர்ஜுன் தன் மலைபிரதேசத்து வீட்டின் பின்பக்கம் விளையாடிக் கொண்டிருக்கும் போது நாய்க் குட்டியொன்று ஆதரவற்று சேற்றில் சிக்கித் தவிப்பதைப் பார்க்கிறான். அதை வீட்டுக்கு கூட்டி வருகிறான். பெற்றோருக்குத் தெரிந்தால் திட்டுவார்கள் என்பதால் அவர்களுக்குத் தெரியாமல் வளர்க்கிறான். அந்த நாய்க்குட்டியை தான் படிக்கும் பள்ளிக்கு கூட்டிப் போகிறான். உடன்படிக்கும் பிள்ளைகள் போட்டி போட்டு அந்த நாய்க்குட்டியை செல்லம் கொஞ்ச, பள்ளி நிர்வாகம் கண்டிக்க, பெற்றோருக்கு விஷயம் தெரியவர நாய்க்குட்டியைப் பிரிகிறான். அதன்பின் நேர்ந்தது, நடந்தது, கடந்தது என்னென்ன? இயக்கம்: சரோவ் சண்முகம்

சிறுவன் அர்ஜுனாக அர்னவ் விஜய். நாய்க்குட்டி மீது பாசம், நாய்க்கெதிரான பெற்றோரின் – பள்ளி நிர்வாகத்தின் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை, பிறவியிலேயே பார்வையிழந்த அந்த நாய்க்குட்டியின் பார்வையை மீட்டெடுக்க போராட்டம், பார்வையிழந்த நிலையிலும் நாயை போட்டிகளில் பங்கேற்க வைக்க எடுத்துக்கொள்ளும் முயற்சி, நாயை விலை பேசும் வில்லனை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம் என மொத்தக் கதையையும் தூக்கிச் சுமக்கும்படியான கதாபாத்திரம். முடிந்தவரை மெச்சும்படி செய்திருக்கிறது அரும்புமீசை எட்டிப் பார்க்கும் அந்த அழகுக் குழந்தை!

கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் நடுத்தர குடும்பத் தலைவனாக அருண்விஜய். சூழ்ச்சிகளை எதிர்கொண்டு, மகனது ஆசையை நிறைவேற்ற முயற்சித்து தோல்வியைச் சந்திக்கும்போது வெளிப்படும் நடிப்பில் அத்தனை முதிர்ச்சி. அவரது கம்பீர உடற்கட்டுக்கும், திமிறும் தோள்களுக்கும் வேலைகொடுக்க பிளாஷ்பேக் காட்சியொன்று வந்துபோகிறது. அதில் அருண்விஜய் காட்டும் ‘ஹார்ஸ்’பவர் கெத்து!

விஜயகுமாருக்கு சில காட்சிகளில் மட்டுமே எட்டிப் பார்க்கிறபடியான கதாபாத்திரம். வருகிற காட்சிகளிலெல்லாம் பேரன் மீது வெறுப்பு நெருப்பைக் கொட்டிக் கொண்டிருப்பது ஏன் என்பது இயக்குநருக்கே வெளிச்சம் என்றாலும், ஏற்ற பாத்திரத்திற்கு அவரது அரை நூற்றாண்டு கடந்த நடிப்பனுபவத்தின் சிந்தல் சிதறல்களே போதுமானதாக இருக்கிறது!

அருண் விஜய்க்கு மனைவியாக மஹிமா நம்பியார் பொருத்தமான தேர்வு.

போட்டிகளில் பங்கேற்பதற்காக வெளிநாட்டு உயர்ரக நாய்களைத் தயார்படுத்தி, தொடர்ந்து ஜெயிக்கிற, ஜெயிப்பதற்காக எந்த லெவலுக்கும் இறங்குகிற டெரர் ஆசாமியாக வினய். பெர்ஃபாமென்ஸ் அப்படி இப்படி இருந்தாலும் வால்ட் டிஸ்னி படங்களின் வில்லன் போன்ற அவரது நடை உடை குழந்தைகளைக் கவரும்.

ஆரம்பக் காட்சிகளில் வருகிற நாய்க்குட்டியாகட்டும், வளர்ந்த நாயாகட்டும் அவற்றின் நடிப்பு படத்துக்கு பலம். பயிற்சியாளருக்கு பெரிதாய் ஒரு பாராட்டு!

ஏ. வெங்கடேஷ், மனோபாலா, பானு சந்தர், லொள்ளுசபா சுவாமிநாதன், யாழிசை என ஏனைய நடிகர் நடிகைகளின் பங்களிப்பு நிறைவு. குழந்தை நட்சத்திரங்களும் ஈர்க்கிறார்கள்.

வில்லனுக்கு அல்லக்கைகளாக வருகிற அந்த இரண்டு பேர்; படு போர்.

பாடல்கள் லேசான அதிர்வூட்டி கடந்துபோக, காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது நிவாஸ் கே. பிரசன்னாவின் பின்னணி இசை.

திரும்பிய பக்கமெல்லாம் செழிப்பும் வனப்புமாக இருக்கிற ஊட்டியின் அழகை மெருகேற்றியிருக்கிறது கோபிநாத்தின் கேமரா!

திரைக்கதையோட்டத்தின் பல காட்சிகள் பெரியவர்களின் மனதில் இதெல்லாம் சாத்தியமா? நடக்குமா? என்றெல்லாம் ஆயிரம் கேள்விகளை உருவாக்கலாம். ஆனால், குழந்தைகளின் உலகம் வேறு. அவர்களை உற்சாகமாக்கவும், அவர்களின் மனதில் முயன்றால் முடியும் என்ற தன்னம்பிக்கையை விதைக்கவும், (செல்லப்)பிராணிகள் மீது அக்கறையுடன் கூடிய அபிமானத்தை தூண்டவும் அநேக காட்சிகள் உண்டு. அதற்காகவே, அமேஸான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள ஓ மை டாக் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம்!

 

REVIEW OVERVIEW
'ஓ மை டாக்' சினிமா விமர்சனம்
Previous article‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும், நஸ்ரியா அறிமுகமாகும் ‘அடடே சுந்தரா’ டீசர் வெளியீடு!
Next article
oh-my-dog-movie-review'ஓ மை டாக்' சினிமா விமர்சனம் குழந்தைகள் சிரித்து ரசிக்க, குதித்துக் குதூகலமாக தமிழில் நிறைய பேய்ப் படங்கள் வருவதுண்டு. மாற்றாக சிந்தித்துச் சிறக்க, மனதளவில் சிறகடித்துப் பறக்க இதோ ஒரு நாய்ப் படம்! நடிகர் விஜயகுமார் குடும்பத்திலிருந்து மூன்றாம் தலைமுறையாக அவரது பேரனும் நடிக்க வந்தது குறிப்பிடத்தக்க செய்தியென்றால், விஜயகுமார் - அவரது மகன் அருண்விஜய் - அருண்விஜயின் மகன் அர்னவ் விஜய் என...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here