படம் பார்ப்பவர்கள் தங்கள் காதலும் காதல் சார்ந்தும் திரிந்த தருணங்களை நினைத்துப் பார்க்கத் தூண்டும் ‘ஒன்ஸ் மோர்.’
கடந்த கால காதல் தோல்வி தந்த வலிகளிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் இளைஞன் ரகு. அவனைக் கவர முயற்சிக்கும் அஞ்சலியிடம் நடந்து கொள்ளும் விதத்தை, அவர்களுக்குள் காதல் மலரும் விதத்தை எமோஷ்னல் டச்சோடு சுவாரஸ்யமான காட்சிகளாக தொகுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த்.
ரகுவாக அர்ஜுன்தாஸ். மிரட்டலான குரல் இல்லை, ஆக்ஷன் அதிரடிக்கு வாய்ப்பில்லை. மென்மையான லவ்வர் பாயாகப் பார்ப்பது புத்துணர்ச்சியாக இருக்கிறது. சோகம், ஏக்கம், காதல் எனப் பல உணர்வுகளை தேர்ந்த நடிப்பால் பிரதிபலித்து மனதில் நிறைகிறார்.
நாயகி அதிதி ஷங்கர் எக்ஸ்ட்ரோவெர்ட் குணமுள்ளவராக வருகிறார். வழக்கமான கியூட்டான துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தவும், முதிர்ச்சியாக நடந்து கொள்ளவும் வாய்ப்பு. அர்ஜுன் தாஸுடன் ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி அசத்துகிறது.
அர்ஜுன்தாஸின் கல்லூரிப் பருவ காதலியாக வருகிற பிரபல மாடல் சோனா ஒலிக்கலுக்கு முக்கியத்துவமுள்ள கேரக்டர். எதார்த்தமான நடிப்பு கவர்கிறது.
பரிதாபங்கள் டிராவிட் செல்வம், ஜென்சன் திவாகர் என இன்னபிற கதாபாத்திரங்களில் வருகிறவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களில் பொருந்தி நடித்திருக்கிறார்கள்.
இதமான காதல் கதைக்குத் தேவையான அத்தனை உனர்ச்சிகளையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் விதமாக ‘மிஸ் ஒருத்தி’, ‘இதயம்’, ‘வா கண்ணம்மா’, ‘எதிரா புதிரா’ என வரிசைகட்டும் பாடல்களைத் தந்திருக்கும் இசையமைப்பாளர் ஹீஷாம் அப்துல் வஹாப் பின்னணி இசையில் கதையோட்டத்துக்கு உயிரோட்டம் தந்துள்ளார்.
காதல் காட்சிகளுக்கான லைட்டிங், வண்ணக் கலவை என தந்து ஒளிப்பதிவின் மூலம் படத்தை மெருகேற்றியிருக்கிறார் அரவிந்த் விஸ்வநாதன்.
ஒரு காதல் தோல்விக்கு பிறகு பூக்கும் காதல் என படத்தின் முன் பாதி மெல்ல மெல்ல நகர, அந்த காதலுக்கு ஆப்பு வைக்கும் விதமான சம்பவங்களின் பரபரப்பால் இரண்டாம் பாதி சற்றே வேகமெடுக்கிறது.
மென்மையான காதல் கதையில் உருவான இந்த படத்தை சராசரி ரசிகர்கள் ஒருமுறை பார்க்கலாம். தற்சமயம் காதலில் விழுந்து புரண்டு கொண்டிருப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு ஒன்ஸ் மோர் பார்க்கும் ஆர்வம் வரலாம்.
-சு.கணேஷ்குமார்


