‘ஒன் வே’ சினிமா விமர்சனம்

சற்றே வித்தியாசமான கதையும், பரபரப்பான திரைக்கதையும் பின்னிப் பிணைந்த காம்போவாக ‘ஒன் வே.’

வறுமைச் சூழ்நிலை, கடன் தொல்லை என மன உளைச்சலை அனுபவிக்கும் அந்த இளைஞன், பணம் சம்பாதிக்க வெளிநாடு போக முயற்சிக்கிறான். அந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை விழுகிறது.

வெறோரு குறுக்கு வழியில் முயற்சியைத் தொடர்கிறான். வெளிநாட்டுக்கும் போகிறான். கட்டுக்கட்டாக துட்டு சம்பாதிக்கும்படியான வேலையும் கிடைக்கிறது. அந்த படுபாதக வேலையைச் செய்ய அவனுக்கு விருப்பமில்லாது போகவே, இது ‘என் வே’ இல்லை என தீர்மானித்து பின்வாங்க நினைக்கிறான். நீ அப்படியெல்லாம் ரிட்டர்ன் போக முடியாதுப்பா, இது ‘ஒன் வே’ என்கிறது அங்கிருக்கும் சூழல். சுழலில் சிக்கியவனைப் போலாகிறது அவனது நிலை.

அதிலிருந்து மீள அவன் என்ன செய்தான் என்பதே விறுவிறுப்பான திரைக்கதை.

வறுமைச் சூழல், கடன் தொல்லையைச் சமாளிக்க வெளிநாடு போவது என்பதெல்லாம் நிஜத்தில் நடப்பவை; சினிமாக்களில் பார்த்துப் பழகியவை. ஆனால், அந்த உயிர் பறிக்கும் சூதாட்டக் களம் தமிழ் சினிமாவுக்கு புத்தம் புதிது. அந்த கொலைக்களத்தை அதன் பயங்கரத்தை காட்சிகளாக்கிய விதம், அதில் நடிக்க பொருத்தமான நடிகர்களை தேர்ந்தெடுத்திருப்பது இயக்குநரின் உழைப்புக்கு சான்று. அவை திரைக்கதைக்கு பலம்! இயக்கம்:- எம்.எஸ்.சக்திவேல்

கதையின் நாயகனாக ராஜேந்திர பாண்டியன். தங்களுக்கு கடன் கொடுத்தவர் தன் தங்கையிடம் முறைகேடாக நடக்க நினைப்பதை கண்டு கொதிப்பது, வெளிநாட்டு வேலைக்காக உயிரைப் பணயம் வைக்க முன்வருவது, தன் வெளிநாட்டுப் பயணத்துக்கான பணத்தை இக்கட்டான சூழலில் தவிக்கும் ஒருவனுக்கு கொடுத்துதவுவது, பணத்துக்காக மனித உயிர்களோடு விளையாடும் சூதாட்டத்தில் சிக்கித் தவிப்பது என நடிப்பில் சுற்றிச் சுழன்று வெளுத்துக் கட்டும்படியான வெயிட்டான கதாபாத்திரம். ஒரே மாதிரியான முகபாவம் காட்டி ஒப்பேற்றியிருக்கிறார். அந்த பாத்திரத்துக்கு அதுவே போதுமானதாக இருக்கிறது.

‘குழலி’ படம் மூலம் கவனம் ஈர்த்த ஆரா இந்த படத்திலும் தன் உணர்வுபூர்வமான நடிப்பால் மனதுக்குள் நிறைகிறார். சூழ்நிலைக் கைதியாக இருந்து விடுபடுகிற தருணத்தில் ஆராவிடமிருந்து வெளிப்படுகிற மென்சிரிப்பும் கண்களில் தெறிக்கும் பரவசமும் அத்தனை அழகு!

கோவை சரளா, சார்லஸ் வினோத் என இன்னபிற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களின் பங்களிப்பும் கச்சிதம்!

அஷ்வின் ஹெமந்த்தின் பின்னணி இசையும், முத்துகுமரனின் ஒளிப்பதிவும் கதையோட்டத்துக்கு தேவையானதை செய்ய, கதையின் ஆழத்தைச் சொல்லும் ‘கொல்லணும் பட்டியாரே’ பாடல் தனித்துத் தெரிகிறது.

திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ‘ஒன் வே’ கலெக்ஷன் ‘ரன் வே’யில் வேகமெடுத்திருக்கும்!

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here