கலாய்ப்பு மன்னன் கவுண்டமணியை வெகுநாட்கள் கழித்து திரையில் பார்க்கிற வாய்ப்பு; அதுவும் கதை நாயகனாக.
தன் மூன்று தங்கைகளை, அண்ணன் தம்பி என ஒரே குடும்பத்து வாரிசுகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது அரசியல்வாதி முத்தையாவின் ஆசை. ஆனால், தங்கைகளுக்கு வெவ்வேறு குடும்பத்து இளைஞர்களைப் பிடித்துப் போகிறது. அவர்களை ஒரே குடும்பத்து வாரிசுகளாக அண்ணனுக்கு அறிமுகப்படுத்தி அவரது சம்மதத்தைப் பெற விரும்புகிறார்கள் அந்த தங்கைகள்.
அது ஒருபக்கமிருக்க, தான் சார்ந்த கட்சி தனக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்காததால் சுயேட்சையாக போட்டியிடுகிறார் முத்தையா. அவரை அரசியல் எதிரியாக பார்க்கிற ஆளுங்கட்சி அமைச்சர், முத்தையாவை தேர்தலில் எதிர்க்க பலமான நபரை நிறுத்துகிறார்.
இப்படி தேர்தல் பரபரப்பு ஒரு பக்கம், அண்ணனை ஏமாற்றுவதற்கு திட்டமிடும் தங்கைகள் இன்னொரு பக்கம் என சூடுபிடிக்கும் கதையில்,
முத்தையா தேர்தலில் ஜெயித்தாரா? தங்கைகளின் திட்டம் என்னவானது? என்பதெல்லாம் அடுத்தடுத்த காட்சிகளில்…
முத்தையாவாக கவுண்டமணி. நடிப்பில் வயதின் முதிர்ச்சி தெரிந்தாலும், அரசியலில் நடக்கும் அநியாய அராஜகங்களை போட்டுப் பொளக்கும் வசனங்களை தன் பாணியில் ஜாலிகேலியாக டெலிவரி செய்வதை ஓரளவு ரசிக்க முடிகிறது.
தங்கைகளாக வருகிறவர்களின் இளமைச் செழிப்பு உடைகளில் வெளிப்பட, நடிப்புப் பங்களிப்பை குறையின்றிச் செய்திருக்கிறார்கள் அந்த பளீர்தோற்ற பட்டாம்பூச்சிகள்.
முத்தையாவின் கார் டிரைவராக பணிபுரிந்து, ஒரு கட்டத்தில் தேர்தல் களத்தில் அவரை எதிர்க்கிற கேரக்டரில் யோகிபாபு. அவரது அலப்பரைகள் லேசாக கிச்சுக்கிச்சு மூட்டுகின்றன.
சிங்கமுத்து, ரவிமரியா, மொட்ட ராஜேந்திரன், வையாபுரி, முத்துக்காளை என திரும்பிய பக்கமெல்லாம் நகைச்சுவை நட்சத்திரங்கள் ஆக்கிரமித்திருக்க, இந்த படத்தின் இயக்குநர் சாய் ராஜகோபால் மிலிட்டரி மேஜராக வலம் வருகிறார்.
சித்தார்த் விபினின் பின்னணி இசையும் பாடல்களும் பரவாயில்லை ரகம். காத்தவராயனின் ஒளிப்பதிவு கச்சிதம்.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தையும், அரசியல்வாதிகளின் போக்கையும் கேலி கிண்டல் செய்வதை நோக்கமாக கொண்டு கதைக்களத்தை கட்டமைத்த இயக்குநர், ஏராளமான காமெடி நடிகர்கள் இருந்தும் அவர்களுக்கேற்ற காட்சிகளை காலத்திற்கேற்றபடி மெருகேற்றத் தவறியிருக்கிறார்.
ஒத்த ஓட்டு முத்தையா _ வெத்து வேட்டு!
-சு. கணேஷ்குமார்


