கிரைம் சப்ஜெக்ட்டா? ஆமாம். காதல் கதையா? ஆமாம். சமூகத்துக்கு கருத்து சொல்கிற முயற்சியா? ஆமாம். காமெடி படமா? ஆமாம். ரிவெஞ்ச் அட்டம்ட்டா? ஆமாம்.
இப்படி எந்த கேள்வி கேட்டாலும் ஆமாம் என்று சொல்லும்படி ஒரு படம்.
கதைநாயகன் விஜய் டிவி ராமர் நண்பர்களுடன் சேர்ந்து திருடுவதும், குடித்துக் கூத்தடிப்பதுமாய் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார். இன்னொரு கும்பல் காதல் ஜோடிகளைக் கடத்திச் சென்று கொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறது. இந்த இரு கும்பலைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவராய் மரணமடைகிறார்கள். கெட்டவர்களுக்கு அப்படியொரு முடிவு நேர்கிறபோது, அவர்களால் பாதிக்கப்பட்ட யாரோதான் போட்டுத் தள்ளுகிறார்கள் என்பதை யூகிக்க முடிகிறது.
அந்த நபர் யார் என்பதை கிளைமாக்ஸில் அடையாளம் காட்டுகிற திரைக்கதை, அவருக்கும் திருட்டு, கொலை என குற்றச் செயல்களில் ஈடுபடுகிறவர்களுக்கும் என்ன சம்பந்தம்? என்பதை எடுத்துச் சொல்லி நிறைவுக்கு வருகிறது.
குடி போதையில் சாய்ந்து கிடக்கும்போது நாட்டுக்கே அரசனாகி பணிப்பெண்களுடன் ஆடிப் பாடுவதாய் கனவு காண்பது, பெண் வேடத்தில் இருக்கும்போது காமவெறி தாக்குதலுக்கு ஆளாகி உடம்பெல்லாம் காயமாகி ரத்தம் சிந்துவது, போலீஸ் துரத்தும்போது நிர்வாணமாய் ஓடுவது என ராமருக்கான காட்சிகள் காமெடி கலகலப்புக்கு உதவியிருக்கிறது.
கதாநாயகியாக பூஜாஸ்ரீ. லட்சணமாக முகமும் வளமான இளமையும் சுமந்து வருபவர் நடிப்பில் காட்டியிருக்கும் சுறுசுறுப்பு கவனத்தை ஈர்க்க, சாதுர்யமான செயல்களால் தான் நினைத்ததை நிறைவேற்றுவது கிளைமாக்ஸுக்கு விறுவிறுப்பு கூட்டியிருக்கிறது.
‘சூப்பர் குட்’ சுப்பிரமணி, கலையரசன் என பழக்கப்பட முகங்களோடு மாரிஸ் ராஜா, சம்பத், மீசை ரமேஷ், அருண், அம்மையப்பன் பாலாஜி என இன்னும் சிலர் ஏற்ற பாத்திரங்களுக்கு பொருத்தமாக இருக்கிறார்கள்; கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள்.
அர்வின் ராஜ் இசையில் ‘ஆளாகி நாளாச்சு’ பாடல் பத்மலதாவின் போதையேற்றும் குரலில், சூடேற்றும் விதத்தில் டெலிவரியாகியிருக்கிறது. பாடலில் ஆடியிருக்கும் அம்மணிகளின் அழகு பாடலை உற்சாகமாக்கியிருக்கிறது. மற்ற பாடல்கள் எண்ணிக்கையைக் கூட்டுவதோடு சரி.
கிடைத்த பட்ஜெட்டுக்கு எந்தளவு தரம் உயர்த்த முடியுமோ அந்தளவு உயர்த்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் மலைச்சாமி.
முன்னும் பின்னுமாக பாய்ந்தோடும் திரைக்கதைக்கேற்ப எடிட்டிங் டேபிளில் கடமையாற்றியிருக்கிறார் படத்தொகுப்பாளர் நாகராஜன்.
காதலர்களைக் கடத்துதல், கற்பழித்தல், கொடூரமாக கொலை செய்தல் என அதிரடியாக தொடங்கும் கதை, ராமரின் அலப்பரைகளால் காமெடி டிராக்கில் பயணித்து மீண்டும் சீரியஸ் மோடுக்கு மாறி வித்தியாசமான சஸ்பென்ஸ் திரில்லர் அனுபவத்தை தருகிற இந்த படத்துக்கு,
இன்னும் கொஞ்சம் தேர்ந்த நடிகர்களின் பங்களிப்பு கிடைத்து, திரைக்கதையில் கூடுதல் சுவாரஸ்யமும் சேர்த்திருந்தால் ‘அது வாங்குனா இது இலவசம்’ படத்துக்கு ‘டிக்கெட் வாங்கினால் திருப்தி நிச்சயம்’ என்ற உறுதியை ஆடியன்ஸுக்கு எழுதிக் கொடுத்திருக்கலாம்.


