அமைதியான கதைக்களத்தில், மெல்லிய உணர்வுகளின் அழுத்தமான பதிவு!
இந்திரன் என்ற அந்த எழுத்தாளருக்கு வந்த வாசகர் கடிதம், அவரது நாவலொன்றை பாராட்டியதோடு, தாங்கள் வசிக்கும் எஸ்டேட்டுக்கு வந்து தங்கி நாவல் எழுதலாமே என அவருக்கு அழைப்பும் விடுக்கிறது. அதை மதித்து, குறிப்பிட்ட அந்த எஸ்டேட்டுக்கு சென்று தங்குகிறார்.
அவர் தங்கிய வீட்டிலிருந்து சில வீடுகள் தள்ளி வசிக்கிற, பார்வையற்ற பெண் ஒருவருடன் அறிமுகம் ஏற்படுகிறது. அதன் விளைவாக, அந்த பெண்ணைப் பற்றி, அவரது வாழ்க்கைப் பாதையின் நீள அகலம் பற்றி எழுதுவதற்கு ஆழமான விஷயங்கள் இருப்பதை தெரிந்துகொள்கிறார். அவற்றையெல்லாம் தொகுத்து நாவலாக எழுத முன்வருகிறார்.
நாட்கள் செல்லச் செல்ல நாவலாசிரியருக்கும் அந்த பெண்ணுக்குமான தொடர்பு இறுகி ஒருவித பற்று ஏற்படுகிறது. அது எப்படிப்பட்டது என்பது ‘ஒற்று’ காட்சிப்படுத்தியிருக்கும் கண்ணியமான, கனமான அத்தியாயங்கள்…
பார்வையற்ற பெண் கடந்துவந்த பாதை எப்படிப்பட்டது என்பதை பதிவு செய்கிற அந்த நாவல் எப்படியான உள்ளடக்கத்துடன் வெளிவருகிறது என்பது திரைக்கதையோட்டத்திலிருக்கும் உயிரோட்டம்…
கதையின் நாயகனாக, நாவலாசிரியராக வருகிற மதிவாணன் சக்திவேலின் இயல்பான நடிப்பு கவர்கிறது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பதும் இவரே! (காதல் த்ரில்லராக ‘மகா மகா’ என்ற படத்தையும், டெலிபதியை அடிப்படையாக வைத்து ‘நுண்ணுணர்வு’ என்ற படத்தையும் இயக்கியவர் இவர்.)
பார்வையற்ற பெண் கதாபாத்திரம் ஏற்றிருக்கும் அறிமுக நடிகை மகாஸ்ரீ தந்திருக்கும், உணர்வுபூர்வமான நடிப்பு கதாபாத்திரத்திற்கு யானை பலம்!
நாயகனின் காதலியாக வந்து பின்னர் வேறொரு பரிமாணத்தில் பயணிக்கிற இந்திரா, நாயகனின் அப்பாவாக வருகிற டான் சிவகுமார், இன்னபிற கதாபாத்திரங்களில் வருகிற தினேஷ், மண்டேஸ் ரமேஷ், உமா மகேஸ்வரி என ஒவ்வொருவரின் நடிப்புப் பங்களிப்பும் நிறைவு!
கதாபாத்திரங்களில் ஒன்றாக ஒரு முயல் வருகிறது. அதன் மூலம் கடத்தும் உணர்வுகளும் வலுவானவை!
எஸ்.பி. வெங்கடேஷின் காட்சிகளுக்கு பொருத்தமான பின்னணி இசை, கதை நிகழ்விடங்களின் பசுமையை – அருவியின் அழகை அதன் தன்மையோடு கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிற தினேஷின் கேமரா, சுரேஷ் அர்ஸின் நேர்த்தியான எடிட்டிங் என தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்புக்கு தனி பாராட்டு!
இந்தியா, சிங்கப்பூர், கம்போடியா, பிரான்ஸ் மற்றும் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற பல்வேறு திரைப்பட விழாக்களில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த கதைக்கான விருதுகளை வென்றுள்ள இந்த படம் இப்போது தமிழகம் முழுவதும் தியேட்டர்களில்…