என்றாவது ஒரு நாள் படம் எடுக்க வேண்டும் என்ற கனவோடு பல பேர் கோடம்பாக்கம் வருகிறார்கள். ஆனால், இயக்குநர் சுகனோ ஒரே நாளில் ஒரு படத்தை அதாவது 23 மணி நேரம் 23 நிமிடங்கள் மட்டுமே செலவழித்து ஒரு சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படத்தை உருவாக்கியிருக்கிறார். அந்த படத்தின் பெயர் ‘பிதா.’
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அந்த வருடத்திற்கான விழா மாபெரும் திருவிழாவாக பிரமாண்டமாக நடக்கிறது. அதை வேடிக்கை பார்க்க போன தன் வாய் பேச முடியாத தம்பி தமிழை தேடி கதாநாயகி பிதாலட்சுமி செல்கிறாள். அந்த நேரத்தில் தொழிலதிபர் மாரிமுத்துவை பணத்துக்காக வில்லன் நாயுடு தன் ஆட்களுடன் கடத்தி அவரை அழைத்து வந்து ஓர் வீட்டில் அடைத்து வைத்து 25 கோடி பணம் கேட்டு அவரது மனைவி வைதேகியை மிரட்டுகிறான்.
அவளும் பணத்தைக் கொண்டுவந்து தருவதாக சம்மதித்திருக்கும் வேளையில் வில்லன் நாயுடுவின் ஆட்கள் சபலப்பட்டு தம்பியை தேடி வந்த பிதாலட்சுமியை கடத்தி அந்த வீட்டுக்கு கொண்டு வருகிறார்கள். அக்கா கடத்தப்பட்டதை அறிந்த வாய் பேச முடியாத அந்த தம்பி, அக்காவை காப்பாற்றுவதற்காக அந்த வீட்டுக்குள் நுழைகிறான். நினைவு திரும்பும் பிதாலட்சுமி கொடுக்கும் செல்போன் குறிப்பால் அவளது காதலன் மனோகரும் அந்த வீட்டுக்குள் நுழைகிறான். கணவனை மீட்பதற்காக பணத்தோடு வைதேகி அந்த வீட்டை நோக்கி வருகிறாள்.பணத்திற்காக கடத்தப்பட்ட தொழிலதிபர் தன் மனைவியோடு தப்பித்தாரா? தற்செயலாக அந்த வீட்டில் சிக்கிக் கொள்ளும் பிதாலட்சுமி, தம்பி தமிழ், காதலன் மனோகர் அந்த கொடிய வில்லன் கூட்டத்திடமிருந்து தப்பித்தார்களா? இந்த கேள்விகளுக்கான பதில்கள் பல திருப்பங்களோடு காட்சிகளாக விரிகிறது.
கின்னஸ் சாதனைக்காக 23 மணி நேரம் 23 நிமிடத்திற்குள் எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஸ்ரீராம் சந்திரசேகர், அனு கிருஷ்ணா, ஆதேஷ் பாலா, அருள்மணி, காமெடி சாம், சிவன் வாஞ்சி, சுதா புஷ்பா, ரெகானா, மாஸ்டர் தர்ஷித் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். விறுவிறுப்பான இந்த படத்தை ஜி.சிவராஜ் தயாரித்துள்ளார்.
படக்குழு:-
கதை, திரைக்கதை, இயக்கம் – எஸ். சுகன்
வசனம் – எஸ். கென்னடி தமிழரசன்
இசை – நரேஷ்
ஒளிப்பதிவு – எம்.ஏ. இளையராஜா
படத்தொகுப்பு – ஸ்ரீ வத்ஷன்
கலை இயக்குநர் – நந்தகுமார்