வியாபாரம், தொழில், அறப்பணியில் சகாப்தமாக விளங்கிய பி.எஸ்.சுவாமிநாதன் செட்டியாரின் சிலை திறப்பு விழா!

வியாபாரத்தில் ஆர்வம், தொழிலில் சாதனை, அறப்பணிகளில் ஈடுபாடு என பல்வேறு தளங்களில் வாழ்நாளை நிறைவாக கழித்தவர் தொழிலதிபர் பி.எஸ்.சுவாமிநாதன் செட்டியார்.

சுவாமிநாதன் செட்டியார் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி தாலுக்காவைச்சேர்ந்த பூவை மாநகரில் 29.05.1941 ஆம் ஆண்டு சொ.பிர.சுந்தரம் செட்டியார் – யசோதா ஆச்சி தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். எளிய குடும்பத்தில் பிறந்த சுவாமிநாதன் 8-ம் வகுப்போடு பள்ளிக் கல்வியை நிறுத்திக்கொண்டு, தனது தந்தையார் வைத்திருந்த மளிகைக்கடையில் வேலைபார்க்கத் தொடங்கினார். பின்னர் 1959-ம் ஆண்டு சென்னை வந்தவர், கிடைத்த வேலைகளை செய்யத் தொடங்கினார். நடந்து சென்று வீடு வீடாக பேப்பர் போட்டவர், கிடைத்த வருமானத்தில் ஒரு சைக்கிளை வாங்கி, சைக்கிளில் சென்று பேப்பர் போட்டார். இவற்றோடு தனது தாய்மாமன்கள் ஈடுபட்டிருந்த காபித்தூள் வியாபரத்திலும் ஈடுபட்டு அனுபவத்தை சேகரித்தார்.

கிடைத்த அனுபவத்தைக் கொண்டு 1962-ம் ஆண்டு ஆழ்வார்பேட்டையில் வாடகைக் கட்டிடத்தில் விக்டரி வியூ காபி ஒர்க்ஸ் (Victory View Coffee Works) என்ற பெயரில் காபித்தூள் வணிகத்தில் ஈடுபட்டார். காபித்தூளை பேக்கிங் செய்ய பிளாஸ்டிக் கவர்களை வாங்க பிராட்வேவுக்கு சென்ற போது பிளாஸ்டிக் பொருட்களின் தேவையை உணர்ந்து சொந்தமாக பிளாஸ்டிக் தொழிலில் ஈடுபட்டார். ஆழ்வார்பேட்டையில் அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் தொழிற்சாலை கொஞ்சம் விரிவடைந்ததால் இடம் போதாமல் சின்னமலையில் 1977-ம் ஆண்டு ஒரு இடத்தினை வாடகைக்கு எடுத்து தொழிலை வளர்த்தார். பின்னர் 1981 கால கட்டங்களில் சென்னை கிண்டியில் ஒரு ஏக்கர் இடத்தினை வாங்கி சுந்தரம் பிளாஸ்டிக் இண்டஸ்டிரிஸ்’ என்கிற தனது தொழிற்சாலையை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தினார்.

இப்படி படிப்படியாக முன்னேறிய சுவாமிநாதன் செட்டியார் தம் வாழ்நாளில் தொடர்ந்து பல்வேறு அறப்பணிகளை செய்து வந்தார். வடபழனி முருகன் கோயிலின் மூல கோபுரத்தினை முழுமையாகக் கட்டிக்கொடுத்து கும்பாபிஷேகத்தை நடத்தியவர், ஏழை எளிய மக்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தன் வாழ்நாள் முழுவதும் செய்து வந்தார்.

அத்தகைய சிறப்புக்குரிய உழைப்பால் உயர்ந்த ஆளுமையான சுவாமிநாதன் செட்டியாரை கொண்டாடும் விதத்தில் அவருடைய மகன்கள் எஸ். சுந்தரமூர்த்தி, எஸ்.எஸ். முரளி இருவரும் இணைந்து தனது தந்தைக்கு சிலை எழுப்பியிருக்கிறார்கள். அந்த சிலை திறப்பு விழா 13.8.2023 அன்று மாலை 6 மணியளவில் கிண்டியில் உள்ள விஷால் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் நடந்தது.

நிகழ்வில் அனிமேஷன் படமாக உருவாக்கப் பட்டிருந்த அவருடைய வாழ்க்கை வரலாறு திரையிடப்பட்டது. ‘பி.எஸ்.சுவாமிநாதன் செட்டியார் ஒரு சகாப்தம்’ என்கிற பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாற்று நூலும் வெளியிடப்பட்டது!

முப்பெரும் விழாவாக நடைபெற்ற இந்த நிகழ்வில் சுவாமிநாதன் செட்டியாரின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், முக்கிய தொழிலதிபர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here