தமன் குமார், ஸ்வேதா டோரத்தி நடிக்க, ஈ.கே.முருகன் இயக்கத்தில், ‘அக்ஷயா மூவி மேக்கர்ஸ்’ லயன் ஈ. நடராஜ் தயாரித்துள்ள படம் ‘பார்க்.’ இந்த திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ஜூலை 15; 2024 அன்று மாலை சென்னையில் நடந்தது.
நிகழ்ச்சியில் இயக்குநர் ஈ.கே.முருகன் பேசியபோது, ”பொதுவாக இது மாதிரி ஹாரர் படங்களில் பேய்களை மத சாமியார்களைக் கொண்டுதான் விரட்ட வைப்பார்கள். நான் அதிலிருந்து விலகி ஒரு சாதாரண ஒரு நபர் மூலம் ஓட்ட வைத்துள்ளேன். அந்த உத்தி தான் தயாரிப்பாளரைக் கவர்ந்தது. முதலில் தயாரிப்பாளரை வைத்து நான் இரண்டு குறும்படங்கள் எடுத்தேன். அதை லட்சக்கணக்கான பேர் பார்த்து அவருக்கு ஒரு வருமானம் வந்தது. அந்த நம்பிக்கையில்தான் திரைப்படத்தில் இறங்கினார். அதன் பிறகு இந்தப் படம் எடுத்து இதோ உங்கள் முன் வந்து விட்டோம். இந்தப் படத்திற்காக அனைவரும் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது” என்றார்.
கதாநாயகன் தமன் குமார் பேசியபோது, ”இந்தப் படத்தின் மூலம் இந்த படத்திற்குப் பிறகு இந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் இயக்குநர் ஆகி விடுவார். படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் நடிகராகி விடுவார். அந்த அளவிற்கு அவர்கள் இந்த படத்தின் மூலம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். இயக்குநர் முருகன் நன்றாக நடிப்பார். அவருக்கு நல்ல காமெடி சென்ஸ் உள்ளது. இந்தப் படத்தில் நான் நடித்தது நல்ல அனுபவம். ஒரு நொடி படத்திற்குப் பிறகு இந்தப் படம் வெளியாகிறது. ஆனால் படப்பிடிப்பின் போது இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் எடுத்தார்கள். நான் நடித்தேன். இரண்டு பாத்திரங்களையும் என்னால் மறக்க முடியாது. படத்தில் பணியாற்றிய அனைவரும் ஏதோ தங்கள் சொந்தப்படம் போல் நினைத்து உழைத்தார்கள். உண்மைக்கும் நேர்மைக்கும் என்றும் மரியாதை இருக்கும் என்பது என் நம்பிக்கை. இந்தப் படம் ஜெயிக்கும்” என்றார்.
தயாரிப்பாளர் லயன் நடராஜ் பேசியபோது, ”இயக்குநர் கதை சொன்னபோது படத்தின் முதல் பாதியில் சிரித்து வயிறு வலிக்கும், இரண்டாவது பாதியில் பயத்தில் நெஞ்சு வலிக்கும் என்றார். அது எனக்குப் பிடித்தது படம் எடுக்க ஒப்புக்கொண்டேன்” என்றார்.
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, ”படத்தில் ஏகப்பட்ட முத்தக் காட்சிகள் எடுத்துள்ளார்கள். கதாநாயகன் தமன் மீது எனக்குப் பொறாமையாக இருக்கிறது” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசியபோது, ”தமன் நன்றாக இருக்கிறார் நன்றாக நடிக்கிறார். இவ்வளவு நாள் தனக்காக அவர் காலத்தைச் செலவிட்டு உள்ளார். இனி அதற்குப் பலன் உண்டு. சினிமா அவரைக் கைவிடாது. ஏனென்றால் அவர் சினிமாவை நேசிக்கிறார்” என்றார்.
விழாவில் படத்தின் நாயகி ஸ்வேதா டோரத்தி, இணைத் தயாரிப்பாளரும் பாடலாசிரியருமான ந. ராசா, சிறு பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அன்புச் செல்வன், இசையமைப்பாளர் அமரா, ஒளிப்பதிவாளர் பாண்டியன் குப்பன், இரண்டாவது கதாநாயகி நீமாரே, இரண்டாவது கதாநாயகன் சுரேந்தர், வில்லனாக நடித்திருக்கும் விஜித் சரவணன், நடிகர் பிளாக் பாண்டி, ரஞ்சனி நாச்சியார், சித்தா தர்ஷன், நடிகை ஜெயந்திமாலா, பாடலாசிரியர் கு.கார்த்திக், ஸ்டண்ட் மாஸ்டர் ஹரி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.